தெலுங்கு சினிமாவிலும் பாலியல் கொடுமைகள் : அறிக்கை வெளியிட கோரும் சமந்தா!

Published On:

| By Kumaresan M

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், திரைப்பட பிரபலங்களான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது சரமாரியான புகார்கள் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ் திரையுலகிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, மலையாளம், தமிழ் திரையுலகைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

மேலும், கேரளாவில் wcc என்ற அமைப்பின் செயல்பாடுகளை வரவேற்பதாக சமந்தா கூறியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில், துணை அமைப்பாக தி வாய்ஸ் ஆஃப் வுமன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெலுங்கு சினிமாவில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்தது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.  அந்த அறிக்கை  வெளியிடப்பட்டால் தெலுங்கு திரையுலகில் பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்க முடியும் என்றும், அரசு மற்றும் திரைத்துறை சார்பில் திட்டங்களை வகுக்க உதவும் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயியும் கேரளாவின் wcc அமைப்பினை பாராட்டியுள்ளார். அங்கு, நடிகைகளுக்கு கிடைக்கும் ஆதரவு போன்று தனக்கு தமிழகத்தில் கிடைக்கவில்லை என்றும் சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை விசித்ரா கடந்த 2000 ஆம் ஆண்டு தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக தெரிவித்திருந்தார். அப்போதும் , பிரபலமான தெலுங்கு நடிகர் ஒருவர்தான் விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: முழு விவரம்!

ஒரு நல்ல ஆசிரியரின் பண்புகள்!

சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share