இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் உடன் பங்குபெற்ற நடிகை சமந்தா, விவாகரத்து தொடர்பாகப் பேசியுள்ளார்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளின் நட்பு காதலில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால், திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர்.
அது முதல் இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இவர்கள் இருவரும் பொதுவெளியில் இன்றுவரை கூறவில்லை.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப காரணங்களை எழுதி வந்தனர் விவாகரத்து அறிவிப்புக்கு பின் நடிகைகள் சினிமாவில் கதாநாயகி வேடத்திற்கு தேர்வு செய்யப்படுவது இல்லை குணசித்திர கதாபாத்திரங்களுக்கு மட்டுமே தேடப்படுவார்கள்
இந்த சூழ்நிலையை இந்தி சினிமாவில் நடிகைகள் மாற்றினாலும் தென்னிந்திய சினிமாவில் மாறாத நிலையே நீடித்தது. அதனை மாற்றியது நடிகை நயன்தாரா. திருமணம் ஆகவில்லை என்றாலும் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார்.
அது தோல்வியடைந்ததால் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது தனித்தன்மை, தன்னம்பிக்கை, காரணமாக இன்றுவரை லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் சமந்தாவும் இணைந்துள்ளார்
சினிமாவில் தன்னை முதல் நிலை நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள, எப்போதும் ஊடகங்களில் செய்தி வெளியாகும் வகையில் ஆடை குறைப்பு புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களுக்குத் தேடப்படும் நடிகையாக முன்னேறியுள்ளார்
இந்த நிலையில் இந்தி திரையுலக இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் உடன் பங்குபெற்ற நடிகை சமந்தா, விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.
திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழல் ஏற்படும்போது பிரிவதைத் தவிர வேறு வழி இருக்காது. பிரிகின்ற முடிவை எடுத்தபோது முதலில் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், அது சரியான தீர்வாகவே அமைந்தது. இப்போது நன்றாக உள்ளது.
இயல்பான நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன். மேலும், முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையோடு இப்போது இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாகவே உள்ளது என்று சமந்தா விவாகரத்து தொடர்பாக மனம் திறந்தார்.
அப்போது குறுக்கிட்ட கரண் ஜோஹர், நாக சைதன்யாவுக்கும் உங்களுக்கும் இடையே கசப்பான எண்ணங்கள் இருந்ததா என கேள்வி எழுப்ப அதற்கு, கூர்மையான பொருட்களை மறைத்துவைத்துள்ள ஒரு அறையில் இருவரையும் அடைத்து வைத்தால் எப்படியிருக்கும் அது போன்ற உணர்வு அப்போது இருந்தது. இப்போதும்கூட அந்த உணர்வு உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாறி இணக்கம் வரலாம் என்று பதில் கூறியுள்ளார் சமந்தா.
இராமானுஜம்