நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 9) வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து சமந்தா நடிப்பில் சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அதில், மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ’சாகுந்தலம்’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சமந்தா, சகுந்தலா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சமந்தாவிற்கு ஜோடியாக நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி, மோகன் பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.
சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் 2022 நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாகாமல் படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படுவதாகப் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
வரலாற்றுக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு செட் அமைக்கப்பட்டு சாகுந்தலம் படமாக்கப்பட்டுள்ளது.

டிரெய்லரில் சமந்தாவை அறிமுகம் செய்யும் காட்சிதான் படத்திலும் சமந்தாவின் அறிமுக காட்சியாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. சகுந்தலாவின் காதல், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை விளக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

டிரெய்லர் முழுவதும் சமந்தாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புராணக் கதை படமாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லர் முழுவதும் வசனங்கள் தூய தமிழில் இடம்பெற்றுள்ளன.
டிரெய்லர் இறுதியில், “மாய சக்தியால் காதலை மறக்க வைக்கலாம். ஆனால் அனுபவித்த அவமானத்தை எந்த மாயையும் மறைக்காது” என்ற வசனம் கவனம் ஈர்க்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

டிரெய்லர் வெளியானதில் இருந்து தற்போது வரை 24 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது சாகுந்தலம் டிரெய்லர்.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் 17 ஆம் தேதி சாகுந்தலம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.
மோனிஷா