சமீபத்தில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து, பாபா சித்திக்கின் நெருங்கிய நண்பர் நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் சதித் திட்டத்துடன் சுற்றித்திரிந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேரந்த சுகா என்ற சுக்பீர் பல்பீர் சிங்கை மும்பை போலீஸார் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்தனர். இதையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, மும்பை போக்குவரத்து போலீஸாருக்கு வாட்ஸ்அப்பில் வந்த மிரட்டல் செய்தியில், சல்மான் கான் உயிரோடு இருக்கவேண்டும் என்றால் ரூ.5 கோடியை தர வேண்டும். லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர சல்மான்கான் இந்த பணத்தை கட்டாயம் தர வேண்டும். இல்லையென்றால், சல்மான் கானின் முடிவு பாபா சித்திக்கை விட மிக மோசமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் பாலிவுட்டை கதிகலங்க செய்தது. சல்மானின் முன்னாள் காதலி சோமி அலி கூட, லாரன்சுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சல்மான் கான் தனது பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால், குண்டுதுளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யுவி காரை ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த காரை துபாயிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். வெடிகுண்டு எச்சரிக்கை அலாரம், குண்டுகள் துளைக்க முடியாத பக்கவாட்டு கண்ணாடிகள், பயணிகள் மற்றும் டிரைவரை பாதுகாக்கும் வகையிலான திரை மறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்தக காரில் உள்ளது.
ஏற்கனவே, சல்மான்கானிடத்தில் புல்லட் புருப் கார் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சல்மானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்,அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 18 நிகழ்ச்சியின் அரங்குக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”வந்து விளையாடிட்டு ஒரே நாள்ள போயிடுங்க” : பாகிஸ்தான் ஐடியா!
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : பூரட்டாதி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)