விஜயகாந்த் பாணியில் ‘ஹைடெக்’ ஆக்ஷன் படம்!
ஒரு திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களைத் தயாரிப்பதில் இந்தி திரையுலகம் பிஸியாக இயங்குகிறது. ‘தூம்’ படம் ஆக்ஷன் மற்றும் ஹெய்ஸ்ட் வகைமையில் அடுத்தடுத்த பாகங்களைத் தந்த காரணத்தால், அதே பாணியில் ‘ஸ்பை ஆக்ஷன் யூனிவர்ஸ்’ படங்களைத் தந்து வருகிறது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்.
அந்த வரிசையில் ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படங்களுக்குப் பிறகு டைகர் 3யை வழங்கியுள்ளது. நம்மூரில் எல்சியு குறித்து ரசிகர்கள் அளாவளாவுவதுபோல, அங்கு இந்த ‘ஸ்பை ஆக்ஷன் யூனிவர்ஸ்’ படங்களில் உள்ள குறியீடுகள் குறித்து விவாதிப்பார்கள் போலும்..!
‘அவர்கள் என்னவோ செய்யட்டும், இந்த டைகர் 3 படம் பார்க்கும்படியாக உள்ளதா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பேமிலிமேன் அவதாரம்!
ரா தலைவர் மைதிலி மேனன் (ரேவதி), தனது நம்பிக்கைக்குரிய ஏஜெண்டான அவினாஷ் ‘டைகர்’ ரத்தோரை (சல்மான்கான்) பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். அங்கு எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இன்னொரு ஏஜெண்டான கோபியை (ரன்வீர்சிங் ஷோரி) அவர் காப்பாற்றி இந்தியா அழைத்து வருகிறார். நமது ஆட்களில் ஒரு ‘டபுள் ஏஜெண்ட்’ உள்ளார் என்றும், அவர் ஒரு பெண் என்றும் டைகரிடம் சொல்லிவிட்டு, கோபி இறந்துவிடுகிறார்.
ஆஸ்திரியாவில் மனைவி ஸோயா (கேத்ரினா கைஃப்), மகன் சகிதம் வாழ்ந்து வருகிறார் டைகர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் வேலை பார்த்த ஸோயா தற்போது ‘தானுண்டு தன் குடும்பம் உண்டு’ என்று இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரு ஆயுத வியாபாரியின் உயிரைக் காக்கும் பொருட்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்கிறார் டைகர். அங்கு, ஒரு பெண் ஏஜெண்ட் அந்த நபரைக் கொல்ல முயற்சிக்கிறார். அதனைத் தடுக்க முற்படும்போது, அந்த நபர் தனது மனைவி ஸோயா என்று அறிகிறார் டைகர். அப்போது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து தாக்குகிறார்.
டைகரின் மயக்கம் தெளியும்போது, மகன் மற்றும் கணவன் உயிரைக் காப்பதற்காக இப்படியொரு மிஷனில் ஸோயா இறங்கியது தெரிய வருகிறது. அதனைச் செய்ய வைத்தது, ஸோயாவின் முன்னாள் ’பாஸ்’ ஆதிஷ் ரஹ்மான் (இம்ரான் ஹாஷ்மி). அவரது பிடியில் மனைவியும் மகனும் இருப்பதைக் காண்கிறார் டைகர். வேறு வழியில்லாமல், ஆதிஷ் சொல்வதைச் செய்யச் சம்மதிக்கிறார்.
இஸ்தான்புல் நகரில் சீனா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் குளறுபடி செய்ய ஒப்புக்கொள்கிறார் டைகர். அவர்கள் வசமிருந்து ஒரு சூட்கேஸை திருடி வருகிறார். அதில் ஒரு ஏவுகணையை ஏவுவதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அதனை ஆதிஷ் ரஹ்மானிடம் ஸோயா ஒப்படைக்க, அடுத்த நொடியே டைகரைக் கைது செய்கிறது பாகிஸ்தான் பாதுகாப்பு படை. அந்தச் செய்தி உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. டைகர் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்.
அடுத்து என்ன நடந்தது? டைகர் பாகிஸ்தான் பிடியில் இருந்து தப்பித்தாரா? இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிடுவதால் ஆதிஷ் ரஹ்மான் பெறும் ஆதாயம் என்ன என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ‘டைகர் 3’.
முந்தைய இரண்டு படங்கள் போல, இதிலும் அதிர வைக்கும் ஆக்ஷன் அவதாரத்தை எடுத்திருக்கிறார் சல்மான்கான். திரையில் அவரை எப்படிக் காட்டினால் ரசிகர்கள் கொண்டாடுவார்களோ, அதை மட்டுமே நுணுக்கமாகச் சிந்தித்து திரையில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மனீஷ் சர்மா. அதேநேரத்தில், அவரை ஒரு ‘பேமிலிமேன்’ ஆகவும் காட்டியிருக்கிறார். அந்த வகையில், தொண்ணூறுகளில் வெளியான விஜயகாந்த் படங்களைச் சிறப்பான தொழில்நுட்பத்தில் பிரதியெடுத்தது போன்று தென்படுகிறது இப்படம்.
விறுவிறுப்பான முன்பாதி!
தனது தயாரிப்புகளில் வெளியாகும் படங்களின் கதையைத் தானே எழுதும் வழக்கம் கொண்ட ஆதித்ய சோப்ரா, இதிலும் அதையே மேற்கொண்டிருக்கிறார். ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்’ போன்ற ஹாலிவுட் ஸ்பை ஆக்ஷன் படங்களைப் போல, கணவனும் மனைவியும் நேருக்குநேர் மோதும் காட்சிகள் இதில் அதிகமில்லை. அதேநேரத்தில், அதனை ஒரு பகுதியாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஸ்ரீதர் ராகவன்.
ப்ரீதம் இசையில் இரண்டு பாடல்கள் துள்ளலை அளிக்கும் விதமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று, படம் முடிந்தபிறகு திரையில் ஓடுகிறது.
தனுஷ் டிகுவின் பின்னணி இசை, காட்சிகளில் நிரம்பியிருக்கும் பரபரப்பை மேலும் ஒருபடி உயர்த்திக் காட்ட மெனக்கெட்டிருக்கிறது. குறிப்பாக, சூட்கேஸை கடத்தும் காட்சியிலும், பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சியில் சுதந்திர தின உரையாற்றும் காட்சியிலும் மிரட்டியிருக்கிறது.
ஓரிரு பாத்திரங்கள் தென்படும் ஷாட்கள் முதல் ஓராயிரம் பேர் வரை காட்டும் ஷாட்கள் வரை, அனைத்திலும் ஒளியமைப்பிலும் கோணங்களிலும் தனது மெனக்கெடலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனய் கோஸ்வாமி. மிக முக்கியமாக, சண்டைக்காட்சிகளில் ‘க்ரீன்மேட்’ பின்னணியில் இடம்பெறும் விஎஃப்எக்ஸை கருத்தில்கொண்டு அவரது கேமிரா சுற்றிச் சுழன்றாடியிருக்கிறது.
ஒவ்வொரு ஷாட்டையும் தனித்தனியாகப் பார்த்துச் சிலாகிக்கும் அளவுக்கு, ஒவ்வொன்றிலும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றைக் கவனமாகக் கோர்த்துச் சேர்த்த வகையில் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது இயக்குனர் மனீஷ் சர்மாவின் உழைப்பு.
அதேநேரத்தில், முன்பாதியைப் போல பின்பாதி விறுவிறுப்பாக நகரவில்லை. ‘பிளாஷ்பேக்’ காட்சிகளில் நிறைந்திருக்கும் ‘அதீதமான’ செண்டிமெண்டும் கூட ஒரு காரணம் எனலாம். ஆனால், அதுவே கடைக்கோடி ரசிகனையும் எளிதாகப் பிணைக்கும் என்பதால் கொஞ்சம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் ஒருசேர இந்தப் படத்தைப் பார்க்கும்போது, இருவருமே அசூயைப்படாத அளவுக்கு ஒரு படைப்பைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
நல்ல ஜோடி!
சில ஆண்டுகளாக சல்மான்கானின் தோற்றத்தில் தென்பட்ட முதிர்ச்சியும் அயர்ச்சியும் திரையில் உறுத்தலாகத் தெரிந்தது. தனக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்காமல், சிறப்பான ஒப்பனையைக் கையாளாமல் இருக்கிறாரே என்று எண்ண வைத்தது. ‘டைகர் 3’யில் தாடி மீசையுடன் வந்து அதனை ஈடுகட்டியிருக்கிறார் சல்மான்கான். சட்டை அணியாமல் ஒரு ஷாட்டிலாவது வருவேன் என்று அவர் அடம்பிடிக்காமல் இருந்ததும் நல்லதொரு அம்சம். அவரிடம் இருந்து நேர்த்தியான நடிப்பை இதில் காண முடிகிறது.
அம்மா வேடத்திற்கு மாறினாலும், கேத்ரினா கைஃப் திரையில் கவர்ச்சியாகத் தோன்றுகிறார். அது அவருக்குப் பாந்தமாகப் பொருந்துகிறது என்பது நல்ல விஷயம். அதையெல்லாம் தாண்டி, அவரும் சல்மானும் சேர்ந்து வரும் காட்சிகளில் ‘நல்ல ஜோடி’ என்ற எண்ணம் நம்மைத் தொற்றுகிறது.
இந்த படத்தில் வில்லனாக இம்ரான் ஹாஷ்மி வருகிறார். நம்மூர் விஜய் சேதுபதி போல, அவருக்கு இது ‘இரண்டாவது இன்னிங்ஸை’ தொடங்கி வைக்கக் கூடும்.
ரேவதியும் சிம்ரனும் இதில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஒரேயொரு சண்டைக்காட்சியில் ‘கவுரவமாக’ தலைகாட்டியிருக்கிறார் ஷாரூக் கான். ‘பதான்’ படத்தில் சல்மான்கான் தோன்றியதற்கு ‘நன்றிக்கடன்’ போல இதில் வந்தாலும், அவருக்கே உரித்தான ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ அந்த காட்சியில் நன்கு வெளிப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர்த்து, குறைந்தபட்சம் இரண்டு டஜன் பேராவது திரையில் வந்து போயிருப்பார்கள்; ஒரு ஆயிரம் பேராவது காட்சிகளில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளாக இடம்பெற்றிருப்பார்கள்.
மேற்சொன்னவற்றில் இருந்தே, இது ஒரு பிரமாண்டப் படம் என்பது தெரிய வந்திருக்கும். வேறுபட்ட பல லொகேஷன்களில் கலைஞர்களை நடிக்க வைத்து, தரமான விஎஃப்எஸ் உதவியோடு அந்த பிரமாண்டத்தை ரசிகர்கள் உணரும்படி செய்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.
லாஜிக் குறைபாடுகளைத் தேடினால், இதில் ஓராயிரம் விஷயங்களைத் தேற்ற முடியும். அவற்றையெல்லாம் விசிறிக் கடாசிவிட்டு மூளையைக் கழற்றி ஓரமாக வைக்கத் தயாரானால், ’நல்லதொரு ஆக்ஷன் படமாக’ டைகர் 3 அமையும். ’பதான்’ பாணியில் தெலுங்கு, தமிழ் ரசிகர்களைக் கவர்வதற்காக, இப்படமும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அது ’ஜுனூன்’ தமிழில் இல்லை என்பதால், பற்களை நறநறக்காமல் பார்க்க முடிவது ஆறுதலான விஷயம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
ஸ்டான்லியில் இருந்து ஓமந்துராருக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி
சிறையில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?: அமர் பிரசாத் பேட்டி!