சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன்: சாய் பல்லவி

சினிமா

பிளாக்கி ஜெனி மற்றும் மை லிஃப்ட் புட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் கார்கி. இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜூலை 15 அன்று வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

இயக்குநர் கவுதம் ராமசந்திரன், “என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இந்தப் படம் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறுவீர்கள். சாய் பல்லவி இந்தப் படத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார்” என்றார்.

நடிகை சாய் பல்லவி, “சாய் பல்லவியால்தான் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினையை படமாக கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக இயக்குநருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குநர் கவுதம் எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார். படத்தில் பணியாற்றியவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்துக்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் பார்த்ததில் எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்று கூட தெரியவில்லை. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ஃபேன். அவரைப் பார்த்து உறைந்து போனேன்” என்றார்.

2டி ராஜசேகர் பேசும்போது, “கார்கியோட இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய் பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை புத்திசாலிதனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். சூர்யா இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு இந்தப் படத்தை நாமே வெளியிடுவோம் என்றார். இந்தப் படத்தை சாதாரணமாக எடுக்கவில்லை. குறைந்த செலவிலும் எடுக்கவில்லை” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இந்தப் படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 2டிக்குச் சென்ற பிறகு தான் நிம்மதியாக இருந்தது. இந்தப் படத்தின் கதையைக் கேட்கும்போது பதற்றமாக இருந்தது. ஏனென்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் பார்க்கும்போது இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார்” என்றார்.

-இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *