நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பாரம்பரிய உடையில் வந்த சாய் பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகே உள்ள கோத்தகிரியில் பிறந்தவர் நடிகை சாய்பல்லவி. சிறுவயது முதலே நடனத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அவருக்கு 2008ம் ஆண்டு சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
அதே நேரத்தில் படிப்பிலும் அவர் முதல் மாணவி தான். ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் சாய்பல்லவி நடித்த பிரேமம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது. அப்போது முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் நடித்த ஷியாம் சிங்க ராய் மற்றும் கார்கி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
அடுத்து பாலிவுட்டிலும் கால் பதிக்க தயாராக இருக்கும் சாய்பல்லவி தற்போது நீலகிரிக்கு தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் தங்களின் மூதாதையான ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம் கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழா கடந்த சில தினங்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் படுகர்கள் கூட சிறப்பு விடுப்பு எடுத்து இந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி படுகர் இனத்தைச் சேர்ந்த நடிகை சாய்பல்லவி, கோத்தகிரிக்கு வந்து பாரம்பர்ய உடையான ஹெத்தையம்மன் உடையணிந்து விழாவில் பங்கேற்றுள்ளார்.
படுகரின பெண்கள் பாரம்பர்யமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் வந்ததுடன் பாரம்பர்ய அணிகலன்களான வெள்ளி நகைகளையும் அணிந்து கொண்டு ஹெத்தையம்மன் கெட்டப்பில் தன் உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றிருக்கிறார்.
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை ஹெத்தையம்மன் அவதாரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதே பாரம்பரிய உடையில் உறவினர்களுடன் செல்ஃபி, போட்டோஷூட் என சாய் பல்லவி எடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
பின் அதனை சமூகவலைதள பக்கங்களிலும் வெளியிட, தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை பல்லடம் இணைப்பு சாலை: புதிய பெயர் சூட்டிய முதல்வர்!
டிஜிட்டல் திண்ணை: தலைவர் பஞ்சம்… ஸ்டாலினை தாக்குகிறாரா திருமா?