மும்பை பாந்திராவிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 16-ஆம் தேதி இரவு நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதன் முதலில் ஆகாஷ் ககோஜியா என்ற 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பிறகு, அவருக்கும் சைஃப் அலிகான் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதை அறிந்து பாந்திரா போலீசார் அவரை விடுவித்தனர்.
பின்னர், வங்கதேசத்தை சேர்ந்த ஷெரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தவறுதலாக கைது செய்யப்பட்டதன் காரணமாக ஆகாஷ் கனோஜியாவுக்கு வேலை போனதோடு, திருமணமும் நின்று போயுள்ளது.

இதுகுறித்து ஆகாஷ் கனோஜியா கூறுகையில், “துர்க் என்ற இடத்திலுள்ள எனக்கு நிச்சயம் செய்த பெண்ணை பார்க்கபோன போது ரயில்வே போலீசார் என்னை கைது செய்தனர்.
பின்னர், பாந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாந்திரா போலீசார் என்னை மிகவும் மோசமாக நடத்தினர். நான் கைது செய்யப்பட்டதை அறிந்து எனது குடும்பத்தினர் மிகுந்த வேதனையடைந்தனர்.
எனக்கு வேலையும் போச்சு, திருமணமும் நின்று போச்சு. மும்பை போலீசார் எனது வாழ்க்கையை அழித்து விட்டனர் . சைஃப் அலிகான் வீடு முன்பு நின்று எனக்கு நடந்த மோசமான அனுபவத்துக்கு நீதி கேட்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், ஆகாஷ் கனோஜியா தன் மீது இரு திருட்டு வழக்குகள் உள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளார். சைப் அலி கான் தாக்குதலில் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர் 7 மாதங்களுக்கு முன், மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் விஜயதாஸ் என்று பெயரை மாற்றி ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். பின்னர், கடந்த 5 மாதங்களாக மும்பையில் வசித்துள்ளார். அங்கு, தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.