நடிகை சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர். இவர் நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற குன்னூர் அவிலா கான்வென்டில் படித்தவர். இந்த பள்ளியின் 58வது ஆண்டு விழா கடந்த 23 ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை சாய்பல்லவி கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது, ‘இந்த பள்ளிக்குள் நுழைந்த போதே பழைய நினைவுகளில் மூழ்கினேன். இப்போது, நான் பேசிக் கொண்டிருக்கும் ஆடிட்டோரியத்தில்தான் நடன பயிற்சி எடுப்பேன். அப்போது, கொஞ்சம் அறிவாளியாக இருந்தேன் என்று நினைக்கிறேன். கிளாசை கட் அடித்து விட்டு நடன பயிற்சி செய்வேன்.
நான் வகுப்பில் இல்லாதது எனது ஆசிரியைகளுக்கு தெரியும். ஆனாலும், எனது முயற்சி தெரியுமென்பதால் என்னை கண்டித்தது இல்லை. இள வயதிலேயே மேடை பயம் என்பது எனக்கு இல்லாமல் போனதுதான் எனது முன்னேற்றத்துக்கு காரணமென்று நினைக்கிறேன்.
இப்போது படிக்கும் குழந்தைகளிடத்தில் சோசியல் மீடியா ஆதிக்கம் உள்ளது. கவன சிறதல் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதற்கு, இடம் கொடுக்காதீர்கள் குழந்தைகளே. இது போன்ற பள்ளியும், ஆசிரியைகளும் ஊக்கமளிக்கும் பெற்றோரும் கிடைப்பது கடினம் என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் நன்றாக படித்தேன். டாக்டரானேன். இதற்கெல்லாம் இந்த பள்ளி கொடுத்த ஒழுக்கம்தான் காரணம். நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை அறிய உங்களுடன் உரையாட வேண்டும். ஒழுக்கம், நல்ல முறையிலான வாழ்க்கை முறை நமக்கும் வேண்டியதை பெற்று கொடுக்கும்.’ இவ்வாறு அவர் பேசினார்.
அமரன் படத்தைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ’தண்டெல்’ தெலுங்கு படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார்.