விமர்சனம்: ரன் பேபி ரன்!

சினிமா

ரேடியோ நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் வர்ணனையாக இருந்தாலும் சரி, ஆர்ஜே பாலாஜி இருந்தால் கலகலப்பாக இருக்கும். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், அவரே கதை வசனம் எழுதிய எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுமே அப்படித்தான் இருந்தன.

கிட்டத்தட்ட பாக்யராஜ் ஏற்ற பாத்திரங்களின் ‘டூப்ளிகேட்’ போலவே அவர் திரையில் தோன்றி வந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரும் அப்படித்தான் நினைத்தாரா என்று தெரியவில்லை. விடியும் வரை காத்திரு, பொய் சாட்சி படங்களில் பாக்யராஜ் சீரியசாக நடித்தது போலவே, ‘ரன் பேபி ரன்’ படத்தில் சீரியசாக முகத்தைக் காட்டியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.  

’அவர் சீரியஸா வந்தது சரி, படம் நம்மளை சீரியசா ஆக்கிடாதே’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நாயகனின் ஓட்டம்!

தானுண்டு, தனக்குப் பார்த்த பெண் உண்டு என்று கல்யாணக் கனவுகளுடன் திரியும் ஒரு சாதாரண வங்கி ஊழியர் தான் சத்யா (ஆர்ஜே பாலாஜி). அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் (இஷா தல்வார்) கூட அதே போன்றதொரு மனநிலையில் இருக்கிறார்.

ஒருநாள் சத்யாவின் காரில் ஏறும் தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண், தன்னைச் சில நபர்கள் துரத்துவதாகக் கூறுகிறார்; ’உங்கள் வீட்டில் அடைக்கலம் தாருங்கள்’ என்று கேட்கிறார். வீணாகப் பிரச்சனைகளில் சிக்கக் கூடாது என்று நினைக்கும் சத்யா, ஒருகட்டத்தில் அவருக்கு உதவத் தயாராகிறார்.

ஓரிரு மணி நேரத்தில் தனது கார்டியன் வந்து அழைத்துச் செல்லவிருப்பதாகச் சொல்கிறார் தாரா. அதேநேரத்தில், அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதன் காரணமாக வீட்டில் தாரா இருப்பதையே மறந்துவிடுகிறார் சத்யா.

Run baby run Movie Review

அடுத்த நாள் காலையில், சத்யா வீட்டு பாத்ரூமில் இறந்து கிடக்கிறார் தாரா. அவர் எப்படிக் கொலையானார்? யார் வீட்டிற்கு வந்து போனார்கள் என்று எதுவுமே சத்யாவுக்குத் தெரியவில்லை. அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி பதிவுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

இதையடுத்து, காவல் துறையில் பணியாற்றும் நண்பனின் ஆலோசனைப்படி தாராவின் சடலத்தை அப்புறப்படுத்த முயற்சிக்கிறார் சத்யா. அப்போது பல தடைகள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதைக் கண்டறிகிறார் சத்யா. அதனால் ஏற்படும் சிக்கல்களால் அவரது வாழ்வே தடம் புரளும் அபாயம் ஏற்படுகிறது.

தாராவின் மரணத்திற்கான பின்னணி என்ன? யார் அதன் பின்னணியிலிருக்கின்றனர் என்பதை சத்யா கண்டறிவதோடு படம் முடிவடைகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டதைப் போன்று தொடக்கம் முதல் இறுதி வரை உண்மைகளைத் தேடி ஓடுகிறார் நாயகன்.

‘ரன் பேபி ரன்’ கதை ரொம்பவும் புதிதானது என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில், முதல் ஒருமணி நேரம் நகம் கடிக்கும் அளவுக்கு சீரியசாக நகர்வதென்னவோ உண்மை.

சீரியஸ் முகம்!

சிரிக்கச் சிரிக்கப் பேசும் பாலாஜி, இதில் அளந்துவைத்தாற் போல வார்த்தைகளை உதிர்க்கிறார். அதற்காக, முகத்தில் மருந்துக்கு கூட புன்னகை கீற்று தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பதை என்னவென்று சொல்ல..

நகைச்சுவை நாயகன் என்று மிர்ச்சி சிவா, சந்தானம் வரிசையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று திட்டமிட்டு இவ்வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதில் தவறில்லை. ஆனால், அவரது முகத்தில் தெரியும் முதிர்ச்சிக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் பலன் தரும்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதில் பெரிய பாத்திரமில்லை. ஆனால், தான் வரும் காட்சிகளுக்கு உயிர் தந்திருக்கிறார். அந்த அளவுக்கு கூட இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட்டுக்கு வாய்ப்பு கிட்டவில்லை.

விவேக் பிரசன்னா, விஸ்வாந்த், நாகிநீடு, தமிழ், பக்ஸ், ஹரீஷ் பேரடி, தமிழ் என்று பலரும் சீரியசாக கதை நகர உதவியிருக்கின்றனர். ஜார்ஜ் மரியானும் கேபிஒய் பாலாவும் அடித்திருக்கும் காமெடி ‘பன்ச்’கள் களேபரக் கதையமைப்பில் காணாமல் போயிருக்கின்றன.

‘ரன் பேபி ரன்’ படத்தின் பெரிய பலம் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை. முதல் பாதி விறுவிறுவென்று நகர அதுவே உதவியிருக்கிறது.இயல்பான லொகேஷன்களில் படமாக்கியிருப்பதன் மூலம் கதைக்கு அழுத்தம் கூட்டியிருக்கிறது எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு.

Run baby run Movie Review

சில காட்சிகள், ஷாட்கள் விடுபட்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஜி.மதனின் படத்தொகுப்பு. திரைக்கதையும் காட்சியாக்கமும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார், மருத்துவக் கல்வியில் நிகழ்ந்துவரும் தொடர் பிரச்சனையொன்றைக் குறி வைத்து இப்படத்தைத் தந்திருக்கிறார். கிளைமேக்ஸில் தெரியவரும் அந்த திருப்பம் ஓகே தான். ஆனால், அதனைத் தெளிவாக முன்பாதியிலேயே ஆங்காங்கே கோடிட்டுக் காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

என்ன நடந்தது?

த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் மிகப்பெரிய அபாயம், ஆரம்பத்தில் வரும் பில்டப்களோடு கிளைமேக்ஸ் பொருந்திப் போவதுதான். பல படங்களில் முக்கால் கிணறு தாண்டியதோடு திரைக்கதை பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். மிகச்சில படங்களே அந்த ஆபத்தை எதிர்கொண்டு விதிவிலக்காக மாறியிருக்கின்றன.

தொடர்ச்சியாக தினசரி வாசிப்பவர்களுக்கு, இப்படம் சொல்ல வரும் விவகாரம் ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், அது தெரியாதவர்களுக்கும் புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்படவில்லை. என்னவென்று சொல்லாமலேயே ஒரு விவகாரம் குறித்து விவாதிப்பது, வடிவேலு காமெடி போல ‘அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க’ என்பதாகவே மாறும்.

அதேபோல, கிறித்தவ மத அமைப்புகளுக்கு எதிராகப் படம் இருக்கிறதோ என்ற எண்ணத்தையும் திரைக்கதை ஏற்படுத்துகிறது. பக்ஸ் தோன்றும் காட்சியொன்று அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை.

என்னதான் திரைக்கதை ட்ரீட்மெண்ட் யதார்த்தத்தை திரையில் உண்டு பண்ணியிருந்தாலும், படத்தில் லாஜிக் மீறல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல் இருக்கை நுனியில் அமர்ந்து ரசிகர்கள் படம் பார்க்க வைக்கவும், திருப்தியோடு திரையரங்கை விட்டு வெளியே வரவும் திரைக்கதையில் தெளிவு அவசியம்.

முன்பாதியில் ஒரு கோட்டைக் கிழித்து பின்பாதியில் இன்னொரு கோட்டைக் கிழித்து, இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது நேர்கோடு கிடைக்கவில்லை என்றால் வருத்தமாகத்தானே இருக்கும். அப்படித்தான் இருக்கிறது ‘ரன் பேபி ரன்’!

உதய் பாடகலிங்கம்

கலைமூச்சை நிறுத்திக் கொண்ட கூத்துப் பறவையின் இறுதி காலம்!

இன்று தைப்பூசம்: முருகன் வேல் வாங்கிய நாள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.