பவானி ஆற்றில் மூழ்கி இறப்பது தொடர்பாக பாக்யராஜ் வீடியோவில் கூறியது வதந்தி என்று போலீசார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கடந்த 12ஆம் தேதி ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆற்றில் நடக்கும் கொலை!
அதில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் குளிக்க செல்பவர்கள் அங்குள்ள பாறையில் சிக்கி அடிக்கடி இறக்கிறார்கள் என்று அந்த பகுதியில் ஷூட்டிங் சென்றபோது கூறுவார்கள்.
அதற்கு பின்னால், பாறையில் சிக்கிய உடல்களை மீட்பவர் தான் இருந்துள்ளார். தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவர் தவறாகப் பயன்படுத்தி ஆற்றில் இறங்குபவர்களை திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை காசு வாங்கி கொண்டு மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். எனவே அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதில் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
அடிப்படை ஆதாரமற்றது!
இதனையடுத்து, வீடியோவில் நடிகர் பாக்யராஜ் கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. வதந்தி என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்தார்.
அதில் “பாக்யராஜ் தெரிவித்த குற்றச் சம்பவம் தொடர்பாக ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பவானி ஆற்றில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் கடந்த 2023 ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் கடந்த 2023ம் ஆண்டு 914 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது” என்று பாக்யராஜின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பாக்யராஜ் மீது புகார்!
இதற்கிடையே பவானி ஆற்றில் போலீசார் மேற்கொள்ளும் பல்வேறு மீட்புப் பணிகளுக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்கிறார்கள். அந்தப் பணிகளில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாக்யராஜின் பேச்சு உள்ளது. எனவே, வதந்தி பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மக்களும் ஊடகங்களும் பாக்யராஜிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவரே தனது எக்ஸ் பக்கத்தில் தனது பேச்சு குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
காவல்துறையை குறை கூறவில்லை!
வதந்தி! என்ற police அறிக்கைக்கு பாக்யராஜ் பதில் (நெஞ்சு பொறுக்குதில்லையே!) #tamil #shortstories #bhagyaraj pic.twitter.com/ufdYKAv4gf
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) February 16, 2024
அதில், “நான் கடந்த 12ஆம் தேதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பெயரில் வெளியிட்ட வீடியோவை சமீபத்தில் உயிரிழந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணத்துடன் நான் பேசியதை தொடர்படுத்தி சில யூடியுபர்கள் பேசியுள்ளனர். காவல் துறையினரும் நான் பேசியது வதந்தி என்றும் வதந்தியைப் பரப்பியது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்திருந்தனர். எனவே ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.
நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கோவை மேட்டுபாளையம் பகுதியில் படப்பிடிப்பிற்குச் செல்லும் போது, அங்குள்ள மக்களால் நான் கேள்விபட்ட விஷயத்தையே வீடியோவில் தெரிவித்தேன். அந்த வீடியோவில் காவல்துறையை எந்த ஒரு இடத்திலும் குறை கூறி தவறாகச் சொல்லவில்லை.
மேலும் காவல்துறை 2022 மற்றும் 2023-ல் இதுபோன்ற எந்த ஒரு விஷயமும் காவல்துறை பதிவேட்டில் பதிவாகவில்லை என்று தெரிவித்து இருந்தார்கள். அதனை வரவேற்கிறேன்.
சினிமா நிகழ்ச்சிகளில் இதுகுறித்து நீண்ட காலமாக இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஒரு காரணத்தாலேயே இதைப் பற்றிப் பேசி வீடியோ பதிவிட்டேன். மற்றபடி இதனால் எனக்கு எந்தவொரு ஆதாயமும் இல்லை, காவல்துறை பற்றி நான் குறை கூறவும் இல்லை” என்று அந்த வீடியோவில் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பழனி : கெட்டுப்போன 70,000 பஞ்சாமிர்த பாட்டில்கள் அழிப்பு!