அமெரிக்காவில் நடைபெற்ற சியாட்டில் விமர்சகர்கள் விருதுகள் விழாவில் சிறந்த சண்டைக் காட்சிகள் அமைந்துள்ள படம் என்ற விருதினை ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் பெற்றுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியதற்காக ராஜமவுலிக்கு சிறந்த இயக்குநர் விருது கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்குப் பிறகு உலக திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது “நாட்டு நாட்டு” பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. இதனைப் படக்குழுவினர் கொண்டாடினர்.

மேலும், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு’ விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் மேலும் 2 சர்வதேச விருதுகளை ஆர் ஆர் ஆர் படம் வென்றது. ராஜமவுலி நேரில் சென்று இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று சிறந்த சண்டைக் காட்சிகள் அமைந்துள்ள படத்திற்கான சியாட்டில் விமர்சகர்கள் விருதை வென்றுள்ளது ஆர் ஆர் ஆர் திரைப்படம்.
ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை வரும் ஜனவரி 24 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
ஆர் ஆர் ஆர் திரைப்படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று வருவதால் நிச்சயம் ஆஸ்கர் விருதை வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மோனிஷா
“அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை” – மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்!