ஹாலிவுட் கிரிடிக்ஸ் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர். ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜப்பான் நாட்டிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்காகக் கடந்த ஜனவரி மாதம் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். இதனைப் படக்குழுவுடன் நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அதனைத்தொடர்ந்து உலகின் உயர்ந்த திரைப்பட விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரிடிக்ஸ் எனப்படும் சர்வதேச விருதை 4 பிரிவுகளில் வென்றுள்ளது ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.
சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த பாடல், சிறந்த சண்டைக்காட்சி ஆகிய 4 பிரிவுகளில் ஹாலிவுட் கிரிடிக்ஸ் விருதுகளை ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்ட போதும் இதில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, ராம்சரண், கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் கைத்தட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
மோனிஷா