திறமைக்கு வயது தடையா?: யார் இந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள்

சினிமா

ராக்ஸ்டார் என இசைப்பிரியர்களால் அழைக்கப்படும் நாட்டுப்புற பாடகி ரமணியம்மாள் இன்று (ஏப்ரல் 4) தனது 69 வயதில் காலமானார். 

செங்கல்பட்டு அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணியம்மாள். குடும்ப வறுமை காரணமாக படிக்க முடியவில்லை. வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காக அக்கம் பக்கத்தினர் வீடுகளுக்கு பத்து பாத்திரம் தேய்க்க வேலைக்கு சென்றார். ஓரிரு வீடுகளுக்கு சென்றால் வாழ்க்கையை நடத்த முடியாது என கிட்டத்தட்ட 10 வீடுகளில் வேலை பார்த்து வந்தார். 

வேலை பார்க்கும் போது அலுப்புத் தட்டாமல் இருக்க பாட்டுப்பாடுவது வழக்கம். இவர் பாட்டுமீது ஆர்வம் கொள்ள வைத்தது எம்.ஜி.ஆரின் கருத்துடைய பாடல்கள் தான் என சில பேட்டிகளில் அவரே சொல்லியிருக்கிறார். 

அப்படி பால சாங்கல்யன் என்பவரது வீட்டில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் போது பாட்டு பாட, அதை கேட்ட வீட்டு உரிமையாளர் யார் பாட்டுப்பாடுவது என்று கேட்டுள்ளார். 

அதற்கு,  ‘ஆடி பாடி வேல செஞ்சா… அலுப்பு இருக்காது,.. அதனால நான் தான் பாடுறேன் சார்’ என பதில் கூறியிருக்கிறார் ரமணியம்மாள்.  சினிமா மெட்டுகளுக்கு சொந்த வரிகளை போட்டும் பாடுவேன் என்றும் சொல்லியிருக்கிரார்.

இதை கேட்ட வீட்டின் உரிமையாளர் நீங்க, நல்லா பாடுறீங்க என்று வாழ்த்தியதோடு சன் டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் பாட வைக்க ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறார்.  

இப்படி வந்த வாய்ப்பு மூலம், முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான  ‘காதல்’ படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலான ‘தண்டட்டி கருப்பாயி’ பாடல் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். 

அதைத்தொடர்ந்து 2008ல் வெளியான காத்தவராயன், அதே ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு, 2013ல் வெளியான ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறார். 

இருந்தாலும் மற்ற பாடகர்கள் போல் இவர் பிரபலமாகவில்லை. தொடர்ந்து வீடுகளுக்கு பத்து பாத்திரம் தேய்க்கச் சென்று வாழ்க்கையை நடத்தி வந்த அவர், மீண்டும் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். 

ரமணியம்மாள் 63 வயதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இவருடன் போட்டி போட்டவர்களுக்கு எல்லாம் பேரன் பேத்திகள் வயது இருக்கும். 

அப்போது, 63 வயதில் பாடுகிறாரே, நல்லா பாடுவாரா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. அதற்கு, “இளமை மீண்டும் வருமா… மனம் பெருமா… முதுமையே சுகமா… காலம் போகும் பாதையை இங்கு யார் காணுவார்” என்ற கண்ணதாசன் வரிகளை பாடி பதிலடி கொடுத்தார். 

அதுபோன்று தன்னம்பிக்கையை சிறிதும் இழக்காமல் பாடி, தன் குரலால் அரங்கில் இருந்த அத்தனை பேரையும் கவர்ந்தார். குறிப்பாக தனக்கு பிடித்த எம்ஜிஆர் பாடலான “நான் ஆணையிட்டால்” பாடலை பாடி அனைவரையும் எழுந்து நிற்க வைத்தார். அதே மேடையிலேயே ராக்ஸ்டார் ரமணியம்மாள் என பெயரும் பெற்றார். 

விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்த சசிக்குமார், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அத்தனை பேரும் இவரை பாராட்ட தவறியதில்லை. 

அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வந்து சென்ற யுவன் சங்கர் ராஜா சண்டக்கோழி 2 படத்தில், பாட வாய்ப்புக்கொடுத்தார். அந்த படத்தில் ‘செங்கரட்டான் பாறையில’ பாடலை பாடி அசத்தியிருப்பார். 

அதுபோன்று சரிகமப நிகழ்ச்சியிலும் முதலிடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து 2018ல் வெளியான ஜுங்கா, 2019ல் வெளியான காப்பான், 2019ஆம் ஆண்டில் வெளியான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, பொம்மை நாயகி ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளிலும் பாடியிருக்கிறார். 

இருந்தாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதற்காக 10 வீடுகளில், இல்லை என்றாலும் 2 வீடுகளிலாவது  பத்துபாத்திரம் தேய்க்கும் வேலையை தொடர்ந்து செய்து வந்தார். 

இந்தநிலையில் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்ரல் 4) அவர் காலமானார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தன் வாழ்க்கையில் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இறுதி வரை போராடிய ராக்ஸ்டார் ரமணியம்மாள் தனது குரலால் இனி நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

பிரியா

அரிசி திருடியதாக இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மோடி வருகை: மூடப்படும் புலிகள் காப்பகம்!

rockstar ramaniyammal death
+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *