ஆந்திரதேசத்து தயாரிப்பாளர் ஒருவர் நம்ம ஊரு நடிகரான மாஸ்டர் மகேந்திரனை ஹீரோவாக போட்டு ‘அர்த்தம்’ என்ற படத்தை எடுத்துள்ளார்.
டைரக்டர் மணிகாந்த் தாலகுட்டியும் ஆந்திரக்காரராம். இந்த ‘அர்த்தத்தின்’ டீசர் வெளியீட்டு விழா சென்னை அண்ணாநகர் வி.ஆர்.மாலில் உள்ள பி.வி.ஆர்.சினிமாஸில் ஆக.20—ஆம் தேதி காலை 9.15—க்கு நடப்பதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் மணி 11.15 ஆகியும் விழா தொடங்கியபாடில்லை.
இதனால் பொறுமையிழந்த பிரஸ் பீப்பிள்ஸ் என்னாச்சுன்னு விசாரிச்சப்ப, சென்சார் சர்டிபிகேட் இல்லேன்னா டீசரைக்கூட ஸ்க்ரீன் பண்ணாதாம் பி.வி.ஆர். காலை 10 மணிக்குள் எப்படியாவாது சென்சார் சர்டிபிகேட்டை வாங்கிவிடலாம் என எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்துள்ளார் ஹீரோ மகேந்திரன்.
ஆனால் எதுவுமே கைகூடாததால் மீடியாக்களிடம் சாரி கேட்டுக் கொண்டார். இதனால் ஸ்கீரினிங் இல்லாமலேயே தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், படத்தில் நடித்த ரோபோ சங்கர் ஆகிய ஐந்து பேர் மட்டும் மேடையில் பேசி, அரை மணி நேரத்தில் விழாவை முடித்துவிட்டனர்.
இந்த ‘அர்த்தம்’விழாவில் ரொம்பவே அர்த்தங்கெட்டத் தனமாக நடந்து கொண்டவர் ரோபோ சங்கர் தான். ஏன்னா விழாவில் பேசுவதற்கு பிரபலங்கள் யாரும் வராததால் நாம தான் பிரபலம்னு நினைச்சுட்டாரோ என்னவோ?
இவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் மேடைக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் “யாரு இது ஹீரோயினா, நல்லாயிரும்மா” என ரோபோ சொன்னதும்,
“ஹீரோயின் இல்லீங்க படத்தோட எக்ஸ்கியூடிவ் புரொடியூசர்ங்க” என ஒருவர் காதைக் கடித்தார். “இருக்கட்டும் இருக்கட்டும் நல்லா இருக்கட்டும்” என சமாளித்தார்.
கொஞ்ச நேரத்தில் ஹீரோயின் ஸ்ரத்தா தாஸ் வந்ததும், “இந்தப் பொண்ணு ஹீரோயினாத்தான் இருக்கணும்.
ஏம்மா நீ ஹீரோயின் தானே” என ரோபோ கேட்க, “ஆமா சார்” என்றார் அந்தப் பெண். ஒருவழியாக பேசி முடித்து ரோபோ உட்கார்ந்ததும் ஹீரோயின் பேச வந்தார். ஆங்கிலத்தில் ஹீரோயின் பேச ஆரம்பிக்க, குபீரென எழுந்து போய் அவரின் அருகில் நின்று கொண்டு தமிழில் மொழி பெயர்த்தார் ரோபோ.

கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களில் உச்சஸ்தாயியில் ஒருவர் ஆங்கிலத்தில் பேச, அதை ஒருவர் தமிழில் சொல்லுவாரே அந்த டிசைனில் ரோபோவின் ஆக்டிவிட்டீஸ் இருந்ததைப் பார்த்துக் கடுப்பான மீடியாக்காரர்கள், “ஹலோ நீங்க உட்காருங்க, ஹீரோயின் பேசுறது எங்களுக்குப் புரியுது” என சவுண்ட் விட்டதும் கப்சிப்பானார் ரோபோ சங்கர்.
விழா முடிந்ததும் விசாரித்தால், “காலையிலேயே நாக்கு நனச்சுட்டாருங்க. அதான் இப்படி உளறிக் கொட்டுனாரு” என்றார்கள்.
இன்னும் சில மாதங்களில் ‘ஆ ஆ அஞ்சு நிமிஷம்’ அதாவது ‘ஆனது ஆகிப்போச்சு அஞ்சு நிமிஷம்’ அப்படிங்கிற படத்தை டைரக்ட் பண்ணப் போறாராம் ரோபோ சங்கர். வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறீர்கள். விவேகமாகவும் இருங்கள் ரோபோ சங்கர்.
’ஏ’ சர்டிபிகேட்டில் இவ்வளவு சிக்கல்களா? விக்ரம் கோப்ராவுக்கு குடைச்சல்!