‘குட் நைட்’ , ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என வெகு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் டீசர் நேற்று(அக்.31) தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘ஹேப்பி எண்டிங்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் 4 நிமிட டைட்டில் டீசரில், சமகால காதல் உறவு, சமீபத்திய பிரபல கலாசார முறை, டார்க் ஹியூமர் போன்றவைகள் கலந்த நவயுக திரைப்படமாக இந்தப் படம் இருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இந்தப் படத்தின் டேக்லைனில் ‘அன் அன்ரொமாண்டிக் காமெடி (an unromantic comedy)’ என்கிற வாசகத்தை படக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று(அக்.31) வெளியான இந்த டீசருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த எந்த வித தகவலும் அப்படக்குழுவால் அறிவிக்கப்படவில்லை.
மேலும், மற்றொரு அறிமுக இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சொர்கவாசல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தின் டீசரும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும், அவரது நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
– ஷா