உதயசங்கரன் பாடகலிங்கம்
சிறைச்சாலைக்குள் ஒரு உலகம்!
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களை, அவற்றின் உள்ளடக்கத்தைக் கிண்டலடிப்பவராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. பண்பலை வானொலியில் அவரது ரசிகர் ஆனவர்களில் பலர், திரையில் அவரது நகைச்சுவை நடிப்பை ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ உள்ளிட்ட சில படங்களில் கண்டு ‘கூஸ்பம்ஸ்’ ஆனார்கள்.
பிறகு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கவனிப்பைப் பெற்றவர், ’எல்கேஜி’ வழியாக திரைக்கதையாசிரியராகவும் நாயகனாகவும் ஆனவர் ’மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ படங்களின் இயக்கத்தில் பங்கேற்றார்.
பிறகு நகைச்சுவை நாயகனில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் படங்களில் நாயகனாகத் தோன்றினார். அந்த வரிசையில் இருந்து முற்றிலுமாக வேறுபட்ட அனுபவத்தைத் தந்தது ‘சொர்க்கவாசல்’ படத்தின் ட்ரெய்லர்.
தற்போது தியேட்டர்களில் இப்படம் வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது ‘சொர்க்கவாசல்’ தரும் அனுபவம்?
மாறுபட்ட திரையனுபவம்!
முழுக்க சினிமாத்தனமாகவோ அல்லது யதார்த்தமாகவோ அமைந்த பல படங்களைக் கண்டிருப்பார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவை குறிப்பிட்ட களத்தை, தொழிலை, மக்களின் கலாசாரத்தை, வாழ்வைக் காட்டுவதாக இருந்திருக்கும். அவற்றில் இருந்து வேறுபட்டவை தண்டனைக்குரியதாக கருதப்படும் வாழ்க்கை. அப்படிச் சிறையொன்றில் தள்ளப்படும் ஒரு அப்பாவியின் கதையைச் சொல்கிறது ‘சொர்க்கவாசல்’.
சென்னையிலுள்ள ஒரு பகுதியில் தள்ளுவண்டியில் உணவகத்தை நடத்தி வருகிறார் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி). அவரது தாய் யானைக்கால் வியாதியால் அவதிப்படுகிறார். பூ வியாபாரம் செய்துவரும் ரேவதியை மூன்றாண்டுகளாகக் காதலித்து வருகிறார். அது, அவரது தாய்க்கும் தெரியும். இருவருக்கும் அவர் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்.
தனியாக ஓரிடத்தில் ஹோட்டல் நடத்துவதற்காக, அரசிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்க முயற்சிக்கிறார் பார்த்திபன். அவருக்கு உதவி செய்கிறார் சண்முகம் எனும் அரசு அதிகாரி. ஐஏஎஸ் ஆக இருக்கும் அவர் ரொம்பவும் நேர்மையானவர். அதனால், அவருக்குச் சிலரோடு பகைமை இருந்து வருகிறது.
இந்த நிலையில், சண்முகம் தன்னை அலுவலகத்திற்கு வருமாறு சொன்ன தேதிக்கு முந்தைய நாளன்று அவரது வீட்டுக்குச் செல்கிறார் பார்த்திபன். அங்கு பழுதுபட்டிருக்கும் குடிநீர் குழாயைச் சரி செய்கிறார்.
சண்முகத்திடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல், அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேறுவதை எதிர்வீட்டில் வசிப்பவர் பார்க்கிறார். அடுத்தநாள் காலையில் சண்முகம் கொலையான தகவல் தெரிய வருகிறது. தனக்குத் தேவையான உதவியைச் செய்யாமல் போய்விட்டாரே என்று வருத்தப்பட்டாலும், பார்த்திபன் தனது கடையில் வழக்கம்போல இருந்து வருகிறார்.
ஆனால், சண்முகத்தின் எதிர்வீட்டில் வசிப்பவர் கொடுத்த புகாரையடுத்து பார்த்திபன் கைதாகிறார். சாட்சிகள் அவருக்கு எதிராக இருக்க, அந்த கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்படுகிறது.
எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று பார்த்திபன் மன்றாடினாலும், அந்தக் கொலைக்குக் காரணமான ரவுடி சிகாமணியின் ஆள் என்றே சிறைச்சாலையில் இருப்பவர்கள் அவரை நோக்குகின்றனர். ஆனால், அவருக்குச் சிகா யார் என்றே தெரியாது.
சிகா (செல்வராகவன்) தற்போது மனம் திருந்தி வாழும் நிலையில் இருக்கிறார். சிறையில் தனது ஆட்கள் கூட எந்த வம்பிலும் சிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தனது வழக்கில் சிகா சாட்சி சொன்னால் மட்டுமே தப்ப முடியும் என்கிற நிலையில், அவரை நேரில் பார்க்க முயற்சிக்கிறார் பார்த்திபன். ஆனால், என்ன ஏதுவென்று கேட்காமல் அவரைச் சிகாவின் ஆட்கள் அவமானப்படுத்துகின்றனர்; அடித்து உதைக்கின்றனர்.
இந்த நிலையில், சிகாவைச் சிறையிலேயே கொல்ல சிலர் சதி செய்கின்றனர். புதிதாக வந்த சிறைக் கண்காணிப்பாளர் சுனில்குமாருக்கும் சிகாவுக்கும் இடையே பகைமை முளைக்கிறது. சிகாவின் ஆட்களால் பார்த்தி பாதிக்கப்பட்டதை அறிந்து, அவரைத் தனது குயுக்திக்குப் பயன்படுத்த முனைகிறார் சுனில்.
அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்கிறது ‘சொர்க்கவாசல்’ படத்தின் மீதி.
சிறைச்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாக, ஒருநபர் விசாரணை கமிஷன் தலைவரான நீதிபதி இஸ்மாயில் (நட்டி) சிலரிடம் தகவல்களைக் கேட்டுப் பதிவு செய்வதாக நகர்கிறது திரைக்கதை.
புழல் சிறை உருவாக்கப்பட்டபிறகு, 2008 காலகட்டத்தில் சென்னை மத்தியச் சிறைச்சாலையைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பார்க்கத் தவறியவர்களுக்கு, அங்கு கைதிகளாகத் தண்டனை அனுபவித்தவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் சேர்த்துக் காணத் தருகிறது இப்படம்.
அதுவே, ‘சொர்க்கவாசல்’ படத்தை இதர படங்களில் இருந்து வேறுபடுத்துகிறது.
அசத்தும் பாத்திர வார்ப்பு!
ஆர்ஜே பாலாஜி வாயைத் திறந்து சிரிக்காமல், எதிரேயிருப்பவரைக் கலாய்க்காமல், சமூகம் குறித்து கருத்துகளைப் பகிராமல், வெறுமனே ஒரு கதாபாத்திரமாக வந்து போயிருப்பாரா? இந்த கேள்வி மட்டுமே ‘சொர்க்கவாசல்’ பார்க்கும் முன்னர் மனதில் இருந்தது. அதற்கு ‘என்னால் முடியும்’ என்று திரையில் அவர் பதிலளித்திருப்பது அருமை.
சிறைக் கண்காணிப்பாளராக வரும் மலையாள நடிகர் ஷரப் யூ தீன் ஒரு பக்கம் மிரட்ட, படம் முழுக்க ஆர்ப்பாட்டமில்லாமல் வந்துபோகும் கருணாஸ் கிளைமேக்ஸில் தனக்கான முக்கியத்துவத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.
ரவுடி சிகாமணியாக நடித்திருக்கும் செல்வராகவனுக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக முத்திரைக் காட்சிகள் தரப்படவில்லை.
நீதிபதியாக வரும் நட்டி, மணியாக வரும் ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், ரவி ராகவேந்திரா, சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, சந்தானபாரதி என்று பலர் இப்படத்தில் ’யார் இவர்’ என்று கேட்கும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.
நாயகி சானியா அய்யப்பன் திரையில் தோன்றும் காட்சிகளில், அந்த பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தத் தடுமாறியிருக்கிறார். சில காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தவர் போன்று துருத்தலான ஒப்பனையுடன் வந்ததைத் தவிர்த்திருக்கலாம்.
காக்கா காமெடி கோபால், பாலாஜியின் தாயாக நடித்தவர், சிறைவாசிகளில் வெவ்வேறு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சிலரது திரையிருப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தில் சண்முகம் என்ற பாத்திரம் கொலை செய்யப்படுவதுதான் திரைக்கதையின் பிரதானமாக உள்ளது. ஆனால், அது குறித்த விவரிப்பு ஏதும் இல்லை.
மிக முக்கியமாக, பாலாஜி அப்பாவியா அல்லது அடப்பாவியா என்ற கேள்விக்குப் பதில் தெரியாத வகையில் அவரது முரட்டுத்தனம் குறித்துச் சில காட்சிகள் வந்து போகின்றன.
போலவே, கிளைமேக்ஸில் வரும் வசனங்களும் காட்சிகளும் ‘பார்வர்டு’ செய்தது போலச் சட்டென்று ஒலித்து நிறைவுறுகின்றன.
இப்படத்தின் பலவீனங்கள் என்று அதையே குறிப்பிட வேண்டும். மற்றபடி, நம்மில் பலர் அறியாத சிறைச்சாலை வாழ்வு குறித்து சில அதிர்ச்சிகரமான தகவல்களோடு விரிகிறது திரைக்கதை. ’சிறைப் படம்’ எனும் வகைமையில் உலகப்படங்கள் பல கண்டவருக்கு இப்படம் புதுமையாகத் தெரியாது.
அதனை உணர்ந்தே, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத், தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் கூட்டணி அமைத்திருக்கிறது.
ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய வேண்டுமென்று யோசித்தவர்கள், ஒட்டுமொத்தமாகத் திரைக்கதையின் ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதைக் கவனிக்கத் தவறியிருக்கின்றனர். அதனால் இப்படம் முழுமையற்றதாகத் தென்படுகிறது.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்கே, கலை இயக்குனர் ஜெயச்சந்திரன் உடன் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியரும் இணைந்து, இயக்குனரின் பார்வையில் சிறைச்சாலைக்குள் இருக்கும் இன்னொரு உலகத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
திரையில் தெரியும் இருளும் வெளிச்சமும் அங்கிருக்கும் மனிதர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிற விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப டிஐ வழியே ஒட்டுமொத்தக் காட்சிகளின் வண்ணச்சிதறல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர சண்டைக்காட்சியை வடிவமைத்த தினேஷ் சுப்பராயன் முதல் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பைச் சிறப்பாக ஒருங்கிணைத்து ‘சொர்க்கவாசல்’ படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.
தமிழில் ‘வட சென்னை’, ‘ஜெயில்’, ‘விசாரணை’ உட்படச் சில படங்கள் சிறைச்சாலையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘மதிலுகள்’ போன்ற சில படங்கள் அதனைச் சிலகாலம் முன்னதாகவே நமக்குத் தந்திருக்கின்றன. ஆனாலும், சிறை வாழ்க்கையின் வெம்மையை, அங்கிருக்கும் சிலரது கொடிய மனநிலையை, எந்தக்கணமும் கொந்தளிப்பு நிகழலாம் என்கிற சூழலைக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது இப்படம். அது தரும் அதிர்ச்சியே இப்படத்தின் யுஎஸ்பி.
1999ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறையில் நடந்த கலவரத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ எனும் எண்ணத்தை, இதில் வரும் கதாபாத்திரப் பெயர்களும் சில காட்சிகளின் அமைப்பும் ஏற்படுத்துகின்றன. ’விருமாண்டி’ படம் வெளியானபோதும், இது போன்றதொரு சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.
இதைத் தாண்டி சமூக, அரசியல், மனநல ரீதியில் இப்படத்தின் காட்சிகளும் கதாபாத்திர வார்ப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கொண்டாடப்படலாம் அல்லது அவதூறுக்கு உள்ளாகலாம். அது மட்டுமல்லாமல் இப்படம் நம் மனதின் அமைதியை, மகிழ்ச்சியை, உத்வேகத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கும்; ’சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் குறித்து என்றாவது யோசித்ததுண்டா’ எனும் கேள்வியை எழுப்பும். அந்த வகையில் தனக்கான இடத்தைப் பெறுகிறது ‘சொர்க்கவாசல்’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு : பாத யாத்திரையில் பதற்றம்!