’காந்தாரா’ கன்னட திரைப்படத்தின் டிரெய்லர் தமிழில் இன்று (அக்டோபர் 12 ) வெளியிடப்பட்டது.
கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் கன்னட நிறுவனம், ’காந்தாரா’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.
கடந்த 30 ஆம் தேதி வெளியான இந்த படம், கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’பொன்னியின் செல்வன்’ வெளியாகி பெரிய ஹிட்டைக் கொடுத்து தியேட்டர் எல்லாம் நிரம்பி வழிந்தாலும் காந்தாராவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல மெல்ல சினிமா ரசிகர்கள் காந்தாரா குறித்து பேசவே படத்தின் மீது மக்களின் பார்வையும் விழுந்தது.
இந்நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் டப்பிங்கில் இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 12 ) பதிவிட்டுள்ளார்.
காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர், ஒரு காட்டுக்கு வந்தபோது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார்.
பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதிக் கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும்போது ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.
மகன் ஷிவா (ரிஷப் ஷெட்டி) கம்பளா ரேஸ் மூலம் 20 வருடம் கழித்து என்ட்ரி கொடுக்கிறார். இந்த முறை அந்த நிலத்தை ஊர் மக்கள் அபகரித்து விட்டனர் என வனத்துறை பிரச்சனையை கிளப்புகிறது.
வன அதிகாரியாக கிஷோர் நடிப்பில் மிரட்டி உள்ளார். இந்த பிரச்சனையை நாயகன் எப்படி சரி செய்கிறார் என்பதை வெறித்தனமான கிளைமேக்ஸ் உடன் சொல்லி இருக்கும் படம் தான் காந்தாரா. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே பிரம்மிப்பாக இருக்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வெங்கட்பிரபுவின் டாஸ்மாக் கடை: அடித்து நொறுக்கிய மக்கள்!
தேவர் சிலை பூசாரி இறப்பு:சசிகலா இரங்கல்!