விமர்சனம்: ரிப்பப்பரி!

Published On:

| By Kavi

ஒரு பேய்ப்படம் பார்க்க வேண்டுமானால் முதலில் என்ன செய்ய வேண்டும்? நம் மூளையைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு தியேட்டர் வாசலை மிதிக்க வேண்டும். அதனைச் செய்யாமல் விட்டுவிட்டு, ‘அது எப்படி இது எப்படி’ என்று திரையில் லாஜிக் தேடிக் கொண்டிருப்பதைப் போல முட்டாள்தனம் வேறில்லை. அதனை நன்றாக உணர்ந்ததாலோ என்னவோ, ‘அப்படிப்பட்டவங்க மட்டும் படம் பார்த்தா போதும்’ என்று களமிறங்கியிருக்கிறது ‘ரிப்பப்பரி’ குழு.

சரி, பேய்ப்படம் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கும்பல் இருக்கிறதே. அவர்களை இந்த படம் திருப்திப்படுத்துகிறதா? இந்த கேள்வியோடு ‘ரிப்பப்பரி’ படத்தை பார்த்து முடித்தால் நம் மனதிற்குள் சில கேள்விகள். அவை என்ன?

ஒரு ஊர்ல ஒரு பேய்..!

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியோர்களுக்கும் கதை சொல்லும்போது ‘ஒரு ஊர்ல’ என்றுதான் தொடங்க வேண்டும். அதனை வழிமொழிவதுபோல, ‘கொடுமுடி’ எனும் ஊரில் வாழும் மூன்று இளைஞர்களில் இருந்து கதை தொடங்குகிறது. அதாகப்பட்டது, நாயகனும் அவரது நண்பர்களும் தான் அந்த இளைஞர்கள் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் வேலை எதுவும் பார்ப்பதில்லை; அதனால், வெட்டி எனும் பெயரைச் சம்பாதிக்கவும் தவறுவதில்லை. இப்படி ஊர் சுற்றும் நண்பர்கள் தனக்கேற்ற பெண்ணைத் தேடித் தேடிக் காதலிப்பதுதானே தமிழ் சினிமாவின் வழக்கம்.

‘ரிப்பப்பரி’யில் நாயகனை யூடியூபில் பின்பற்றி காதல் சேதி அனுப்புகிறார் நாயகி. அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிவதில் இருக்கிறது நாயகனின் சாமர்த்தியம். அதற்கு உதவுவது போல நிகழ்கிறது ஒரு சம்பவம்.

நாயகனைத் தேடி, தலைக்கரை எனும் ஊரில் இருந்து வருகிறார் அவரது நண்பரொருவர். உடன் அவர் காதலிக்கும் பெண்ணும் வந்திறங்குகிறார். இருவரும் நாயகன் வீட்டில் தஞ்சம் புக, அவரோ ‘உங்கள் காதல் திருமணத்திற்கு என்னால் உதவ முடியாது’ என்று கைவிரிக்கிறார். அதனால், அங்கிருக்கும் பைக்கை எடுத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டரை பார்க்கச் செல்கிறார் அந்த நண்பர். செல்லும் வழியில், அந்தரத்தில் பறக்கும் பேய் ஒன்று அவரைக் கொடூரமாகக் கொன்று தீர்க்கிறது. நாயகன் வீட்டு வாசலில் இருக்கும் பால் கேனில் அவரது தலை கிடக்கிறது.

பால் கேனுக்குள் தலையை நுழைக்கும் திறமை மனிதர்களுக்கு கிடையாது என்பதால், அது பேயின் வேலை என்று முடிவெடுக்கிறார் இன்ஸ்பெக்டர். அதே போன்றதொரு கொலை தலைக்கரையில் நடப்பதைப் பார்த்த அனுபவத்தில், இதற்கு ஒரு பேயே காரணம் என்று நாயகன் மற்றும் அவனது நண்பர்களிடம் விவரிக்கிறார். அது மட்டுமல்லாமல், சாதீய அடக்குமுறைகளை மீறித் திருமணம் செய்துகொள்பவர்களை அந்த பேய் ஆணவக்கொலை செய்வதாகக் கூறுகிறார்.

சரி, அவர்களிடம் ஏன் அந்த உண்மையைக் கூறுகிறார்? அந்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, ‘அந்த பேயின் குடும்பத்தினர் தலைக்கரையில் இருக்கிறார்களா’ என்பதை அறிய உதவுமாறு கோருகிறார். முதலில் தயங்குபவர்கள், பின்னர் ஒருவாறு சம்மதிக்கின்றனர். அந்த ஊருக்குச் சென்றபிறகு, அம்மூவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் உண்மையொன்று தெரிய வருகிறது. வேறொன்றுமில்லை, இறந்து போன நாயகியின் சகோதரர் தான் பேயாகத் திரிகிறார்.

அப்புறமென்ன, அடுத்தடுத்து நிகழும் கொலைகளைக் கண்டு பதைபதைக்கும் நாயகனும் அவரது நண்பர்களும் அந்த பேயின் பிளாஷ்பேக்கை கண்டறிய முயல்கின்றனர். அப்போது, ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கதையொன்று தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதுடன் படம் முடிவடைகிறது.

கிண்டலாகக் கதையைச் சொன்னாலும், ஒரு கமர்ஷியல் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் அளவுக்கு இதில் கதை சொல்லல் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதனை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாமே என்று வருத்தப்பட வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ந.அருண் கார்த்திக்.

பேய் காமெடியா, காமெடி பேயா?

பேய்க்கதையில் நகைச்சுவை என்பது ‘சந்திரமுகி’ காலத்திற்கு முன்பே திரையுலகில் தொடர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பேயையே கிண்டலடிக்கும் படங்களும் வந்திருக்கின்றன. அவை ‘ஸ்பூஃப்’ ரகம். ‘ரிப்பப்பரி’யில் சீரியசாக பேயைக் காட்டி, இதர பாத்திரங்களைக் கொண்டு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதனைத் திரைக்கதை முழுக்கத் தொடராத காரணத்தால் ‘இது பேய் காமெடியா, காமெடி பேயா’ என்ற எண்ணம் மனதில் எழுகிறது.

‘ரிப்பப்பரி’யில் ஆணவக் கொலை செய்யும் பேய் என்பதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சம். ஆனால், திரைக்கதையில் அது அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படவில்லை. அதுவே, அதற்கு மாறான ஒரு பிளாஷ்பேக்கை பார்க்கையில் நம் மனதில் அதற்குரிய பிரமிப்பு ஏற்படாமல் போகவும் காரணமாகிறது. அதையும் தாண்டி, அந்த பிளாஷ்பேக் பகுதி கொங்கு வட்டாரம் தொடர்பான சில செய்திகளை, அதிகாரப்பூர்வமற்று வெளியான கிசுகிசுக்களைப் பிரதிபலிப்பதை மறுக்க முடியாது.

நடிகர்கள் எந்த வட்டார மொழியில் பேசுகின்றனர் என்பது இது போன்றதொரு கதைக்கு மிக முக்கியம். டப்பிங்கில் அதைக் கவனிக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

அதற்கெல்லாம் மேலாக, பல இடங்களில் பட்ஜெட் குறைவு தன்னிருப்பைக் காட்டுகிறது. பல இடங்களில் நாயகனையும் அவரது நண்பர்களையும் தவிர வேறு எவருமில்லை. வில்லன்களாக வருபவர்களோ, ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை ‘ரீவைண்ட்’ செய்து பார்த்தவர்களாகக் கதையில் உலா வருகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரை தவிர வேறு யாருமில்லையோ என்ற எண்ணம் எழுகிறது. பேய்களின் மீதும், ஆன்மாக்களின் சாந்தமின்மை மீதும் அவருக்கு ஏன் அத்தனை ஆர்வம் என்ற கேள்விக்கும் பதில் இல்லை. ‘இவ்வளவுதானா உங்க ரியாக்‌ஷன்’ என்பது போலவே, பல பாத்திரங்கள் எறும்பு கடித்தாற்போல பேய் பயத்தை வெளிக்காட்டுகின்றன.

பேய்க்கதையில் லாஜிக் தேவையில்லை என்றபோதும், இது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் படம் பார்க்கையில் ரசிகர்கள் மனதில் எழாமல் இருப்பது அவசியம். அந்தக் குறைகளையும் மீறி, ‘ரிப்பப்பரி’யை ரசிக்க வைப்பது நாயகன் கோஷ்டி அடிக்கும் லூட்டி தான். அவை, அப்படியே ‘காஞ்சனா’ முதல் பாகத்தை நினைவூட்டுகின்றன.

நம்பிக்கையான முயற்சி!

‘ரிப்பப்பரி’யில் மாஸ்டர் மகேந்திரன், அராதி பொடி, காவ்யா அறிவுமணி, ஸ்ரீநி, நோபிள் கே ஜேம்ஸ், மாரி, நக்கலைட்ஸ் தனம், செல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து படங்கள் தந்திருக்க வேண்டிய மகேந்திரன், கொஞ்சம் தாமதமாக ‘ரிப்பப்பரி’யில் நடித்துள்ளார். லேசாக அருண்விஜய் சாயல் தெரிந்தாலும், திரையில் அவரது இருப்பு இயல்புடன் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவரது நகைச்சுவை நடிப்புக்கு மாரியும் நோபிளும் தோள் கொடுத்திருக்கின்றனர். சீரியல் நடிகர் செல்லாவுக்கு இதில் இன்ஸ்பெக்டர் வேடம். அவர் சீரியசாக தோன்றுவதா, சிரிப்பூட்டுவதா என்று குழம்பியிருக்கிறார். நாயகனின் தாயாக வரும் நக்கலைட்ஸ் தனம், கிளைமேக்ஸ் காட்சியில் சிரிப்பூட்டியிருக்கிறார்.

நாயகியாக வரும் அராதி பொடிக்கு பெரிய வாய்ப்பில்லை; அவரைவிட காவ்யா அறிவுமணிக்கு திரையில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு. போலவே, காவ்யாவின் ஜோடியாக வரும் ஸ்ரீநியும் கூட பிளாஷ்பேக்கில் அசத்துகிறார். ஸ்ரீநியின் நண்பராக வருபவருக்கோ, வில்லன் கோஷ்டிக்கோ அந்த அளவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இவர்கள் தவிர்த்து ஊர் மக்களாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர்.

தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர்ஃபுல்லாக இருக்க உதவியிருக்கிறது. அதேபோல சுரேஷின் கலை வடிவமைப்பு, முகன்வேலின் படத்தொகுப்பு இவற்றோடு திவாகர தியாகராஜனின் பின்னணி இசையும் ஒரு கமர்ஷியல் படம் பார்க்கும் உணர்வை ஊட்டுகின்றன. புதுமுகம் என்றபோதும், திவாகர தியாகராஜனின் இசையில் டைட்டில் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

ஸ்டன்னர் சாமின் சண்டை வடிவமைப்பு இந்த பேய்க்கதைக்குப் பலமாக அமைந்துள்ளது. அதே அளவுக்கு ஒலி வடிவமைப்பும் பின்னணி இசையும் பயமூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆங்காங்கே சில காட்சிகள் சுவாரஸ்யப்படுத்தியிருக்கும் நிலையில், அதேபோன்று முழு திரைக்கதையையும் செப்பனிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மிக முக்கியமாக, கொங்கு வட்டாரத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் இப்படத்தில் அந்த வட்டார வழக்கைச் சில பாத்திரங்கள் மட்டுமே கையாள்வது பலவீனமான விஷயம். அதேபோல, இந்த கதையில் சில சாதிகள் முன்னிறுத்தப்படுகின்றன; அந்த குறிப்புகள் அந்த வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பிடிபடும் விஷயம். அதுவும் கூட சர்ச்சையை எழுப்ப வாய்ப்புண்டு.

இது போன்ற குறைகளைத் தாண்டி, சுவாரஸ்யமாக ஒரு ஹாரர் காமெடி படமொன்றைத் தர விரும்பியிருக்கிறார் இயக்குனர் அருண் கார்த்திக். அவரது நம்பிக்கை மிகுந்த முயற்சிக்கு படக்குழுவினர் அனைவருமே தோள் கொடுத்திருக்கின்றனர்; தியேட்டரில் சரியான கவனிப்பைப் பெறாதபோதும், ஓடிடியில் வெளியாகும்போது ‘ரிப்பப்பரி’ கொண்டாடப்படலாம்; சர்ச்சைகளையும் எதிர்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் முன்னிருந்தும் பின்னிருந்தும் ஒரேமாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ‘பாலிண்ட்ரோம்’ (palindrome) என்று சொல்வார்கள். ‘ரிப்பப்பரி’யின் ஆங்கில உச்சரிப்பு அப்படிப்பட்டதுதான். அதற்கேற்ப, வித்தியாசமான திரைக்கதை அமைப்பு இருக்குமென்று எதிர்பார்த்தால் கிடைப்பது ஏமாற்றமே. அதற்கென்ன செய்வது? அந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய பாவத்திற்கேற்ப அடுத்த படத்தை இக்குழுவினர் தருவது பரிகாரமாக இருக்கும். செய்வார்களா?

உதய் பாடகலிங்கம்

பன்னீருக்கு மிகப் பெரிய பின்னடைவு: ஜெயக்குமார்

எடப்பாடியின் திட்டமிட்ட சுயநல நடவடிக்கை : நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share