விமர்சனம்: யுத்ரா!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

மாளவிகா மோகனனை ரசிக்கத் தயாரா?

தமிழில் ‘பேட்ட’ படம் மூலமாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதில் சசிகுமார் ஜோடியாக பிளாஷ்பேக்கில் வருபவர், பிறகு சனந்தின் தாயாக நரைத்த தலையுடன் வந்து போவார். அதனைச் சுத்தமாக மறந்துவிட்டு, ‘மாஸ்டர்’ படத்தில் அவரை ரசித்தார்கள் நம்மூர் ரசிகர்கள்.

இடைப்பட்ட நாட்களில் மலையாளத்தில் அவர் நடித்த ‘பட்டம் போலே’ உட்படச் சில படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகின. அது போக ‘மாறன்’ படத்தில் மின்னலாக வந்து போயிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘தங்கலான்’னில் ஆரத்தியாக வந்து நம்மை ‘மெஸ்மரிசம்’ செய்தார். 

தான் நடிக்கும் படங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்களை வெளியிடுவது மாளவிகாவின் வழக்கம். அவற்றைப் பார்த்தவர்கள், ’இதே மாதிரி கவர்ச்சிகரமாகப் படம் முழுக்க வந்தால் எப்படியிருக்கும்’ என்று நிச்சயம் ‘கமெண்ட்’ செய்திருப்பார்கள். அவற்றுக்குப் பதிலளிக்கும்விதமாக, மாளவிகா நடித்த ‘யுத்ரா’ எனும் இந்திப்படம் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 

இதன் ட்ரெய்லரை பார்த்தாலே திகட்டத் திகட்ட ஆக்‌ஷனும் ரொமான்ஸும் இருக்குமென்று தெரிந்துபோகும். படம் அதற்கேற்றவாறு இருக்கிறதா? நம்மைத் திருப்திப்படுத்துகிறதா? 

கதை பழசு!

’ஒரு ஊர்ல ஒரு போலீஸ் ஆபிசர் இருந்தார். அவரோட மனைவி கர்ப்பமா இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரு பார்ட்டியில கலந்துகிட்டாங்க. 

அப்போ அந்த தம்பதியை சக அதிகாரிகள் ரெஹ்மான், கார்த்திக்னு ரெண்டு பேரு ரொம்பவே புகழுறாங்க. பிறகு, அந்த தம்பதி வீடு திரும்புறாங்க. அப்போ, அவங்க போகுற கார் மேல ஒரு லாரி மோதுது. 

தம்பதி ரெண்டு பேருமே இறந்து போயிடுறாங்க. ஆஸ்பத்திரிக்குப் போனா, அந்த அதிகாரி மனைவி வயித்துல இருக்குற குழந்தை உயிரோட இருக்குறது தெரிய வருது. அதை வெளியே எடுக்குறாங்க. 

ஏற்கனவே நாம சொன்ன ரெண்டு பேர்ல ஒருத்தர் அந்த குழந்தைய தானே வளர்க்குறதா சொல்றாரு. அதன்படியே வளர்க்கிறாரு. 

அந்த குழந்தையோட பேரு தான் யுத்ரா. கோபம் வந்தாலே, யாராலயும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதுக்கு கோபம் வரும். அப்படித்தான், தன்னோட படிக்குற மாணவர்களை அந்த பையன் அடிச்சிடுறாரு. அதையடுத்து, அவருக்கு மூளை வளர்ச்சியில பிரச்சனை இருக்குன்னு சொல்லி இன்னொரு ஸ்கூல்ல சேர்க்குறாங்க. 

பிறகு, யுத்ராவை ஒரு ‘ஆபீசர்ஸ் அகாடமி’யில சேர்க்குறாரு வளர்ப்பு தந்தை கார்த்திக். அங்கேயும் ஒரு பிரச்சனையில யுத்ரா மாட்டிக்கிறாரு. ஆறு மாசம் ஜெயில் தண்டனை விதிக்குறாங்க. 

அப்பதான், அப்பாவோட ரெண்டு ப்ரெண்ட்ஸ்ல இன்னொருத்தரான ரெஹ்மானை சந்திக்கிறாரு யுத்ரா. அவரு, மும்பையை உலுக்குற ஒரு போதைப்பொருள் கும்பல்ல ‘அண்டர்கவர் ஏஜெண்டா’ போய் சேருறியான்னு கேட்கிறாரு. அவ்வளவுதான். யுத்ராவும் ஓகேன்னு சொல்லிடுறாரு.

அந்த கேங்கோட தலைவன் ஃபெரோஸ். அவரோட பையன் ஷபீக். தங்களுக்கு எதிரா வேலை செய்றவங்களை கொடூரமா தண்டிக்குறது அவங்க வழக்கம் 

பெரோஸ்கிட்ட சேர்ந்து நல்ல பேரு வாங்கும் யுத்ரா, ஒரு முறை சீனாவுக்குப் போறாரு. அங்கயிருந்து 500 கிலோ மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திட்டு வர்றதுதான் அவங்க திட்டம். அந்த தகவலை முன்கூட்டியே ரெஹ்மான்கிட்ட சொல்றாரு யுத்ரா. 

சீனாவுல இருந்து புறப்படுற அந்த கப்பல் இந்தியாவுக்கு வருது. அப்போ ஒரு ரகசிய கும்பல் கடல் பகுதியில இருக்கிற அந்த கப்பல்ல புகுந்து தாக்குதல் நடத்துறாங்க. கப்பல்ல இருக்குற கண்டெய்னரையும் கண்டுபிடிக்கிறாங்க. 

ஆனா, அந்த கண்டெயினர் காலியா இருக்கு. கப்பல்ல வந்த யுத்ராவுக்கே அது அதிர்ச்சி தர்ற விஷயமா இருக்கு. அதுக்குப் பிறகு யுத்ராவை துப்பாக்கியால சுடுறாங்க. அதனால, அவர் கடலுக்குள்ள விழுறாரு.

யுத்ரா உயிர் பிழைச்சாரா? கண்டெயினர் எங்கன்னு கண்டுபிடிச்சாரா? ரெஹ்மானை தேடிப் பிடிச்சு உண்மைய எல்லாம் சொன்னாரா?’ 

இந்த கேள்விகளுக்குப் பதில்களைத் தருகிறது ‘யுத்ரா’வின் மீதி. இந்தக் கதையைப் படித்தவுடனேயே, ‘யுத்ரா’ எப்படிப்பட்ட படம் என்ற ஐடியா மனதுக்குள் வந்து போகும். கூடவே, ‘இப்படியொரு அரதப்பழசான கதையை எப்படி எடுத்து வச்சிருப்பாங்க’ என்கிற எண்ணமும் தோன்றும். 

பல புதுமையான திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ‘எக்சல் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதனை உருவாக்கியிருப்பதால், ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்ற எண்ணத்தில் இப்படம் ஆக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பலன் என்னவோ ‘பூஜ்யம்’ ஆகத்தான் இருக்கிறது. 

திரைக்கதை ‘ட்ரீட்மெண்ட்’ ரொம்ப பழசு!

வீடியோகேம் விளையாடுவது போன்று திரைப்படங்களில் ‘ஸ்டண்ட்’ காட்சிகள் இருக்க வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கின்றனர். அவர்களை மகிழ்விக்கிற பாணியில் இதில் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. 

போலவே நாயகனும் நாயகியும் அரைகுறை ஆடையில் தோன்றுவதைக் குறிப்பிட்ட சில ரசிகர்கள் வெகுவாக விரும்புகின்றனர். அவர்களில் ஆண்களும் உண்டு; பெண்களும் உண்டு. அவர்களுக்கு ஏற்றவாறு, இதில் சித்தாந்த் சதுர்வேதி, மாளவிகா மோகனன் ஜோடி திரையில் ‘ஹாட்’டாக உலா வருகிறது. 

லாலிபாப் சாப்பிட்டவாறு குழந்தைத்தனமாகத் தோற்றமளிக்கும் சித்தாந்த், சண்டைக்காட்சிகளில் ‘உக்கிரம்’ காண்பிக்கிறார். 

கல்லூரி புரபொசர் போன்றிருக்கும் ஒருவருக்கு கான்வெண்ட் பள்ளி மாணவியின் சீருடையைத் தந்து அணிய வைத்தது போன்று இப்படம் முழுக்க வந்து போயிருக்கிறார் மாளவிகா மோகனன். அதனால், ‘பேட்ட’யில் நரைத்த முடியுடன் இளமையாகத் தெரிந்தவர், இதில் கல்லூரி மாணவி பாத்திரத்தில் வயதானவராகத் தெரிகிறார். 

இப்படி இந்த படத்தில் உள்ள சில விஷயங்கள் சிலருக்கு ‘ப்ளஸ்’ ஆகவும், சிலருக்கு ‘மைனஸ்’ ஆகவும் தெரியலாம். 

‘பாடி ஷேமிங்’கை தவிர்த்து விட்டால், இதில் சித்தாந்த் உடன் மாளவிகா வரும் பாடல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இளமைத் துள்ளலுடன் இருக்கும். ‘அது போதுமே’ என்பவர்கள் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்கள் நடிப்பு சராசரிக்கும் சற்று மேலே என்பதாகவே இருக்கிறது.

அதற்குச் சேர்த்து வைத்து, இந்தப் படத்தில் ’பதாய் ஹோ’ கஜராஜ் ராவ், ராம் கபூர், ராஜ் அர்ஜுன், ஷில்பா சுக்லா உட்படப் பலர் நடித்துள்ளனர். 

வில்லனின் மகனாக வரும் ராகவ் புயால் ஏற்கனவே ‘கில்’ படத்தில் அசத்தியிருந்தார். இதிலும் அதே போன்றதொரு பாத்திரச் சித்தரிப்பு இதிலும் உண்டு. ஆனால், அவர் ‘ஸ்கோர்’ செய்யத்தான் வாய்ப்பு குறைவாகத் தரப்பட்டுள்ளது. 

ஜெய் பினக் ஓஸாவின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் ‘ஜெட்’ வேகத்தில் பறக்கிறது. ஷாட்கள் ஒவ்வொன்றும் நிலை கொள்ளாமல் சுற்றிச் சுழல்வதாகவே உள்ளன. யுத்ரா பிரமாண்டமாகத் தெரிய, அவரது பங்களிப்பு முக்கியக் காரணம். 

ருபின் சுசாக்கின் தயாரிப்பு வடிவமைப்பு, துஷார் பரேக் – ஆனந்த் சுபாயாவின் படத்தொகுப்பு, சஞ்சித் பல்ஹரா – அங்கீத் பல்ஹராவின் பின்னணி இசை, நடனம், சண்டைக்காட்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இதில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. 

சங்கர் – இஷான் – லாய் இசையில் அமைந்த பாடல்கள், நமக்கு பழைய படங்களை நினைவூட்டுகின்றன. 

இப்படத்தின் கதை, திரைக்கதையை ஸ்ரீதர் ராகவன் எழுதியிருக்கிறார். பர்ஹான் அக்தர், அக்‌ஷத் கில்டியால் இருவரும் வசனம் எழுதியிருக்கின்றனர். 

ஸ்ரீதேவி இறுதியாக நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உதய்வார் இதனை இயக்கியிருக்கிறார். 

ஆங்கில சீரியல் பாணியில் நடிப்புக்கலைஞர்கள் இதில் இடம்பெற்றிருந்தாலும், அதே தொனியில் நடித்திருந்தாலும், அதற்கு மாறாகத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு இதில் அபாரமான முறையில் உள்ளது. ஆனால் காட்சியமைப்போ, கதாபாத்திர வடிவமைப்போ கொஞ்சம் கூடப் புதுமையானதாக இல்லை. 

சொல்லப்போனால், எண்பதுகளில் வந்த படங்களைப் பார்த்தது போன்றிருக்கிறது இதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட். அதில் கொஞ்சம் கூடப் புதுமையின் வாசனை இல்லை. 

அதனால், ’யுத்ரா’ படத்தைப் பார்க்கையில் அடுத்தடுத்து நாயகனோ, வில்லனோ என்ன செய்வார்கள் என்பது நமக்கு முன்பே தெரிந்துவிடுகிறது. இறுதியாக, படம் முடிவடைகையில் ‘ஏண்டா இதனைப் பார்த்தோம்’ என்ற எண்ணமே மீதமிருக்கிறது. 

அப்போதும் சித்தாந்த் சதுர்வேதி – மாளவிகாவின் ஆட்டத்தோடு ஒரு பாடல் திரையில் ஓடுகிறது. அதுவே, இந்த படத்தின் யுஎஸ்பியாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர் எதனை முன்னிறுத்துகின்றனர் என்பது புரிந்து போகிறது. 

’மாளவிகா மோகனன் ரசிகரா நீங்கள்’ என்று கேட்காத குறையாக, ’யுத்ரா’வில் சில காட்சிகளில் அழகுப்பதுமையாக (?!) அவர் வந்து போயிருக்கிறார். அதனைப் பார்க்கத் தயார் என்பவர்கள் மட்டும் ‘யுத்ரா’வைக் கண்டுகளிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

போலீஸ் நடத்தும் வாகன வசூல்- சட்டம் ஒழுங்குப் புகார்கள்… ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் சிறப்புப் பேட்டி!

டெல்லி முதல்வரானார் அதிஷி

 

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *