ஒரு சமையலறை எப்படி இயங்குகிறது என்பதை வைத்து அந்த வீட்டுப் பெண்ணின் மனநிலை எத்தகையது என்று அறியலாம். ஆமாம்! அந்தப் பெண் எத்தனை மணி நேரம் சமையலறையில் இருக்கிறார்? அங்கிருக்கும் பாத்திர பண்டங்கள் சுத்தமாக இருக்கின்றனவா?,
மிக முக்கியமாக, அந்த பெண்ணின் முகத்தில் எண்ணெய் பிசுக்கும் சோர்வும் படிந்திருக்கிறதா? வீட்டில் உள்ளவர்களுக்குச் சமைத்துப் போடுவதே அவரது வாழ்க்கை என்றிருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்களே, அந்த வீட்டில் அப்பெண் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாரா என்பதைச் சொல்லிவிடும்.
அடுப்படி எனப்படும் சமையற்கட்டிலேயே பொழுதைக் கழித்தால், ஆணாதிக்கத்தை மட்டுமே அவர் எதிர்கொள்வதாகத்தான் கருத வேண்டியிருக்கும். அதையே சொல்கிறது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம்.
2021ஆம் ஆண்டு மலையாளத்தில் ஜியோபேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் டைட்டில் முதல் காட்சிகள் வரை அனைத்தையும் அப்படியே தமிழில் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
களையிழக்கும் கனவு!
வசதியான பின்புலம் கொண்ட, பட்டப்படிப்பு படித்த ஒரு இளம்பெண். அவரைப் பெண் பார்க்க வருகிறது ஒரு குடும்பம். பெற்றோருடன் வசிக்கும் அந்த நபர், பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்குத் திருமணமாகிவிட்டது.
இந்த தகவல்களைக் கேட்டதுமே, தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு ஊரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண பெண்களைப் போலவே, அவரது திருமண வாழ்க்கையும் பழமை புதுமை கலந்ததாக இருக்குமென்று தோன்றும். அப்பெண்ணும் அப்படித்தான் மனதில் கனவு காண்கிறார்.
மாறாக, சமையலறையே கதி என்றிருக்கும் அளவுக்கு வேலைகள் பிழிந்தெடுக்கின்றன. அதற்குத் தகுந்தவாறு அவரது மாமியாரும் தன் மகள் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். சமைப்பது, துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, மீண்டும் சமைப்பது, பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவது என்ற வட்டத்தை விட்டு அவரால் வெளியே வரவே முடியவில்லை.
மனதில் பெருகும் வெறுமையைப் போக்க, தன்னால் இயன்றதைச் செய்ய முயற்சிக்கிறார் அப்பெண். அவர் நாட்டியம் கற்றவர். அதனால், நடன ஆசிரியர் ஆக விரும்புகிறார். ஆனால், அவரது மாமனார் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
விறகடுப்பில் சமையல் செய்ய வேண்டும், கைகளால் துணிகளைத் துவைக்க வேண்டுமென்று விரும்புகிற மனிதர் அவர். சரி, தன் கணவராவது உதவுவார் என்று எதிர்பார்த்தால், அவரும் ஆணாதிக்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும் மேலே, மாதவிடாய் காலத்தில் இருவருமே அவரை அற்பமான ஒரு பிறவி போன்று நடத்துகின்றனர்.
வாழ்க்கை முழுக்க இது போன்ற ரணங்களுடன் தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, அந்த பெண் என்ன முடிவெடுக்கிறார் என்பதோடு படம் நிறைவடைகிறது. ஒரு பெண்ணின் கல்யாணக் கனவுகள் எப்படியெல்லாம் தன் நிறமிழக்கிறது என்பதைச் சொல்கிறது.
ஐஸ்வர்யா மயம்!
எங்கும் எதிலும் ஐஸ்வர்யம் என்று விளம்பரங்களில் சொல்வது போல, இந்த படம் முழுக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மயம். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கல்யாண தேதி முடிவானவுடனே பெண் ஒரு சுற்று எடை கூடுவதாகச் சொல்வார்களே, அதனைத் திரையில் உணரச் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் கணவராக வரும் ராகுல் ரவீந்திரனுக்கு பொண்டாட்டியை நாகரிக அடிமையாய் நடத்தும் வேடம். அளவோடு நடித்திருக்கிறார் என்பதற்கு ரெஸ்டாரெண்டில் ஐஸ்வர்யாவிடம் அவர் கோபப்படுவதே உதாரணம். என்றாலும், வேறு யாரேனும் நடித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ’மாஸ்கோவின் காவேரி’, ‘வணக்கம் சென்னை’ படங்களில் வந்தது போல ராகுல் ‘க்ளீன் ஷேவ்’ தோற்றத்துடன் வந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம்.
மாமனாராக வரும் நந்தகுமார், எந்தக் காட்சியிலும் அதிர்ந்து பேசவில்லை. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாடம் எடுக்கவில்லை. ஆனால், தாய்மார்கள் வசை பாடும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் பெற்றோர், உறவினர்கள், நடனத் தோழி வரும் காட்சிகள் செயற்கையாகத் தெரிகின்றன. யோகிபாபு, கலைராணி இருவரும் ஆளுக்கொரு காட்சியில் வந்தாலும், அவை கதையின் ஒரு பகுதியாகத் தெரிந்தாலும், அதுவரையிலான திரைக்கதை போக்கில் இருந்து விலகி ‘ஓவர்டோஸ்’ வகையறாவில் சேர்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சமையலறை என்றால் எப்போதும் இருள் படிந்திருக்கும் என்பதையும் தாண்டி, ஒவ்வொரு பிரேமையும் ‘கலர்ஃபுல்’லாக தர முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம். ராஜ்குமாரின் கலை வடிவமைப்பு, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு, ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்டின் இசை அனைத்துமே மூலக்கதைக்கு நியாயம் செய்யும் விதமாக அமைந்திருக்கின்றன.
பக்கம் பக்கமாக வசனம் பேச வாய்ப்பளிக்கிற ஒரு கதைக்களம். என்றபோதும், முழுக்கவே எளிமையாக, சரியாக அமைந்திருக்கின்றன சவரிமுத்து, ஜீவிதாவின் வசனங்கள்.
’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மலையாளத்தைப் போலவே தமிழிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாராட்டவும் முடியும்; அதைத் தவிர்த்திருக்கலாமே என்று கூறவும் முடியும். இரண்டுமே இயக்குனர் ஆர்.கண்ணனுக்கு உரித்தானவை.
தமிழர் அடையாளம்!
இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் நிகழ்வதாக நம்மால் ஊகிக்க முடியும். வீட்டின் அகன்ற உள்ளமைப்பும், அத்தாச்சி போன்ற சொற்பிரயோகங்களும் செட்டிநாட்டில் பாத்திரங்கள் உலாவுவதாக எண்ணத் தூண்டுகிறது. ஆடை அணிகலன்கள், பேச்சு வழக்கு, சமையல் முறை எல்லாமே தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. அதையும் தாண்டி, ஒரு வீட்டின் சமையலறையிலேயே பெண்ணைச் சிறைப்படுத்தும் நூதனமான ஆதிக்கமும் வசனங்களில் காணக் கிடைக்கிறது.
எல்லாம் சரி, இந்த படத்தில் அந்த பெண்ணின் கணவரும் மாமனாரும் சபரிமலைக்குச் செல்லவிருப்பதாகக் காட்டியிருப்பது தாக்கம் ஏற்படுத்துகிறதா? அதற்கு இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மலையாளத்தில் இதன் மூலத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும், இதனைச் சொல்லக் காரணம் இருக்கிறது.
சபரிமலையில் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு நிறைய பெண்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். அந்த பெண்கள் எல்லாம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அந்த விவகாரத்தினால், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துபோனது. சபரிமலைக்குச் செல்ல முயலும் பெண்களை வெறுக்கும் மனநிலையே, பெரும்பாலான மக்களிடம் இருந்தது. சாதாரண பெண்களில் பலர் அதனை ஆதரிக்கவில்லை.
2000வது ஆண்டுக்குப் பிறகும் ஆணாதிக்கம் கேரள மண்ணில் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவ, சபரிமலை விவகாரத்தை திரைக்கதையில் பயன்படுத்தியிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஜியோ பேபி. அதையும் தாண்டி, அப்போது அந்த விவகாரம் பேசுபொருளாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். இப்போது, கேரள அரசே குறிப்பிட்ட வயதுள்ள பெண்களைச் சபரிமலைக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
தற்போதைய சூழலைச் சிறிதளவும் விமர்சிக்காமல், அந்த விவகாரத்தின் மீதான தமிழ்நாட்டுச் சமூகத்தின் பார்வையை முன்வைக்காமல், மலையாளத்தில் இருந்ததை தமிழிலும் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆர்.கண்ணன். அதுதான் இப்படத்தைக் கொண்டாடத் தடையாக இருக்கிறது. அதற்காக ‘மோசமான படம்’ என்றும் ஒதுக்கிவிட முடியாது.
இன்னும் சில நாட்கள் கழித்து, ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் பலரது வீடுகளில் ஓடலாம்; அப்போது சமையலறையில் இருந்து லேசாய் ஒரு விசும்பல் எழுந்தால் கூட, இப்படம் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.
உதய் பாடகலிங்கம்