ஒரு கதைக்குள் பல கதைகள்!
ஒரு ஓவியம். அதில் வரையப்பட்டுள்ள உருவம் பார்வையாளரை நோக்கும் வகையில் இருக்கிறது. ஒருவர் 180 டிகிரியில் எந்த புள்ளியில் நின்றாலும், அவரைப் பார்க்கும்படியாக வரையப்படும்போது அந்த ஓவியம் ஆச்சர்யப்படுத்தும்.
மிகமிக அரிதாக, சில திரைப்படங்களும் கூட அது போன்றதொரு மாயாஜாலத்தை நிகழ்த்தும். அத்திரைப்படத்தில் இடம்பெறும் விஷயங்களை, நம்மால் கதை நிகழும் களத்தோடு தொடர்புடைய பல உண்மை நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்க முடியும்.
உருவகப்படுத்துதல், படிமப்படுத்துதல், நினைவூட்டல், பிரதியெடுத்தல் என்று அறிவுரீதியாக ஆயிரம் பெயர்களைச் சூட்டினாலும், அந்த வகை கதை சொல்லல் அப்படத்தை எக்காலத்திற்குமானதாக மாற்றும். அந்த வகையில், நம்மைப் பலவாறாக யோசிக்க வைக்கிறது, இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் பிரசன்ன விதாங்கேவின் ‘பாரடைஸ்’.
மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளிலும் கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன. இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக் என்று இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் திகழும் தொழில்நுட்பக் கலைஞர்களின் இருப்பும் இப்படத்தில் உண்டு. இந்த ‘பாரடைஸ்’ தரும் அனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
கதைக்குள் கதை!
கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) தங்களது ஐந்தாம் ஆண்டு மண வாழ்வைக் கொண்டாடும் வகையில் இலங்கைக்குச் சுற்றுலா செல்கின்றனர்.
அங்கிருக்கும் ஒரு தங்குமிடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார் வழிகாட்டியாக வரும் ஆண்ட்ரூ (ஷ்யாம் பெர்னாண்டோ). அந்த இடத்தில் சமையல்காரர்களாக ஸ்ரீயும் (சுமித் இளங்கோ), இக்பாலும் (அஸார் சம்சுதீன்) இருக்கின்றனர்.
அப்போது, தனது புதிய விஷுவல் புராஜக்டை நெட்பிளிக்ஸில் சமர்ப்பித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார் கேசவ். அதனால், ஊர் சுற்றும் மனநிலையில் முழுமையாக ஊறாமல் கொஞ்சம் பரபரப்போடு இருக்கிறார்; எந்நேரமும் லேப்டாப், மொபைல் சகிதம் தனது புராஜக்ட் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்.
அன்றைய தினம் ராமாயணம், ராவணன், சீதை, அனுமனோடு தொடர்புள்ளதாகக் கூறப்படும் கோயில்களை, சில இடங்களைத் தம்பதியருக்குச் சுற்றிக் காட்டுகிறார் ஆண்ட்ரூ. சீதை தொடர்பாகத் தான் அறிந்த தகவல்களையும் கூறுகிறார். அதனைத் தனது வலைப்பூவில் பகிர விரும்புகிறார் அம்ரிதா.
அவர்கள் சென்ற காலகட்டத்தில், இலங்கையில் பொருளாதார நிலைமை சீர்குலைந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறியிருக்கிறது. பெட்ரோல், டீசல் நிரப்ப பங்க்களில் வாகனங்கள் பெரும் வரிசையில் காத்து நிற்கின்றன. அப்போது, எந்தச் சிக்கலும் இல்லாமல் கேசவ், அம்ரிதா பயணிக்கும் கார் அவ்விடத்தை வலம் வருகிறது.
அன்றிரவு கேசவ், அம்ரிதா படுத்திருக்கும் அறைக்குள் ஜன்னல் வழியாக இரண்டு மர்ம நபர்கள் நுழைகின்றனர். கத்தி முனையில் அவர்களிருவரையும் மிரட்டி, அவர்களது லேப்டாப், மொபைலை திருடிச் செல்கின்றனர்.
அதற்கடுத்த நாள், அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க முனைகிறார் கேசவ். அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி சார்ஜெண்ட் பண்டாரா (மகேந்திரா பெரைரா), ‘நாடு இருக்கும் சூழலில் இதனை விசாரிப்பது வீண் வேலை’ என்கிறார். அதனைக் கேட்டவுடன், ’எனது புகாரை விசாரிக்காவிட்டால் இந்தியத் தூதரகத்தை நாட வேண்டிவரும்’ என்கிறார் கேசவ்.
அதையடுத்து, அந்த புகாரைப் பதிவு செய்கிறார் பண்டாரா. அதற்கடுத்த நாள் மூன்று பேரைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார். அவர்கள் தான் அந்த திருட்டைச் செய்ததாக கேசவ், அம்ரிதாவிடம் கூறுகிறார்.
அந்த நபர்களோ, ‘எங்களுக்கும் இந்த திருட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கின்றனர். அவர்களை மேற்கொண்டு பேசவிடாமல் தடுக்கும் பண்டாரா, அங்கிருந்து கேசவ்வையும் அம்ரிதாவையும் வெளியேற்றுகிறார். ‘நாளை நீங்கள் வரும்போது அந்த பொருட்களை ஒப்படைக்கிறேன்’ என்று தம்பதியரிடம் உறுதியளிக்கிறார்.
ஆனால், சொன்னவாறு பண்டாராவால் அதனைச் செய்ய முடியவில்லை. அடுத்த நாள் காலையில் கேசவ்வும் அம்ரிதாவும் காவல்நிலையத்திற்குப் போகும்போது, எஸ்டேட் தொழிலாளிகள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு இருக்கின்றனர்.
காரணம், போலீசார் கைது செய்த மூன்று பேரும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒரு நபர் திருட்டை ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார் பண்டாரா. ஆனால், போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுகிறார். ‘பேச இயலாத நிலையில் இருக்கும் அவரால் மட்டுமே அப்பொருட்கள் எங்கு மறைக்க வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்’ என்று கூறுகிறார் பண்டாரா.
அதேநேரத்தில், காவல் நிலையத்தில் இருக்கும் மற்ற இருவரும் ‘நடந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர் இறந்து போகிறார். அதையடுத்து, அந்தப் பகுதியில் அமைதியின்மை உருவாகிறது.
பண்டாரா இருக்கும் காவல்நிலையத்தை சூறையாடுகின்றனர் அக்கிராம மக்கள். அங்கிருந்து தப்பிக்கும் போலீசார், அவ்வழியாக வரும் கேசவ் – அம்ரிதா காரை வழிமறித்து அருகிலிருக்கும் நகரத்திற்குப் பயணிக்கின்றனர். கலவரத்தை அடக்கப் படையொன்றை அனுப்ப வேண்டும் என்று காவல் துறை தலைமையகத்திற்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
பின்னர், கேசவ் – அம்ரிதா பாதுகாப்புக்காக பண்டாராவும் இன்னொரு போலீஸ்காரரும் அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்கின்றனர். அன்றிரவு அங்கு வேலை செய்யும் ஸ்ரீ, இக்பாலைக் காண்கிறார் பண்டாரா. எடுத்த எடுப்பிலேயே, அவர்கள் தான் நடந்த குற்றத்திற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்ததாகச் சந்தேகிக்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? அவர்கள் இருவரிடமும் பண்டாரா எப்படி நடந்து கொண்டார்? கேசவ்வும் அம்ரிதாவும் அதற்கு எவ்வாறு ‘ரியாக்ட்’ செய்தார்கள் என்று சொல்கிறது ‘பாரடைஸ்’ படத்தின் மீதி.
இப்படத்தின் திரைக்கதையில் ராமாயண நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டதாக, இலங்கையில் உள்ள சில இடங்கள் காட்டப்படுகின்றன. அப்போது ஆண்ட்ரூ பகிரும் தகவல்கள் ஆணாதிக்கம் மிகுந்ததாக, வால்மீகி மற்றும் மேலும் பலர் எழுதிய ராமாயணக் கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றன.
போலவே, இரண்டாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நிகழ்ந்த பொருளாதாரச் சீர்குலைவினால் சாதாரண மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறது இப்படம்.
அதனால், இப்படத்தின் கிளைமேக்ஸ் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு முன்னர் நிகழ்ந்த சில வரலாற்று நிகழ்வுகள், அது தொடர்பான திரிபுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் வழியே, ‘ஒரு கதைக்குள் பல கதைகளை ஒளித்து வைத்திருக்கிறாரா இயக்குனர்’ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது ‘பாரடைஸ்’.
புயலுக்கு முன்னே..!
‘பாரடைஸ்’ படத்தைப் பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில், நாம் இலங்கைக்குச் சுற்றுலா சென்ற உணர்வு மேலெழுகிறது. அந்த அளவுக்கு, அங்குள்ள இயற்கை கொஞ்சும் சூழல் திரையில் நிறைந்து நிற்கிறது.
ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும் இடங்களைக் காட்டுகையில், அது இன்னும் அதிகமாகிறது. அதனால், யூடியூப்பில் சுற்றுலா வீடியோக்கள் காணும் உணர்வே நமக்குள் இருக்கிறது.
அதற்கேற்ப, இப்படத்தில் பல ஷாட்கள் காருக்குள் இருந்து வெளியுலகைக் காணும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. அதன் வழியே, முக்கியப் பாத்திரங்கள் கதை நிகழும் களத்தினையும், அங்கு வாழும் மனிதர்களையும் எப்படிப் பார்க்கின்றன என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவையனைத்தும் புயலுக்கு முன்னிருக்கும் அமைதியைப் போலவே திரையில் தெரிகின்றன.
இந்தப் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோரோடு ஆண்ட்ரூவாக வரும் ஷ்யாம் பெர்னாண்டோ, சார்ஜெண்ட் பண்டாரா ஆக வரும் மகேந்திரா பெரைரா நடிப்பும் நம்மை வசீகரிக்கிறது.
ஸ்ரீ, இக்பால் பாத்திரங்களில் சுமித் இளங்கோவும், அசார் சம்சுதீனும் சும்மா வந்துபோவது போலத் தோன்றினாலும், இறுதிக்கட்டத்தில் அப்பாத்திரங்களும் முக்கியத்துவம் உள்ளதாக மாறுவது நாம் எதிர்பாராதது.
கொய்யா விற்கும் மலையகச் சிறுவர் சிறுமிகள், அந்த இடத்தில் வாழும் சாதாரண தொழிலாளிகளின் குடும்பத்தினர் ஆகியோரோடு அந்த மலைச்சரிவுகளும், கோயில்களும் கூட இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களாகத் திரையில் தெரிகின்றன.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, இலங்கையில் உள்ள இயற்கையின் வனப்பை அள்ளியெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் வழியே உருவான இதமான உணர்வை கிளைமேக்ஸ் காட்சியில் நிறைந்திருக்கும் இருண்மை வழியே முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருப்பதையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் கே. மிகச்சில காட்சிகளில் மட்டுமே அவரது உழைப்பு வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அவை அக்காட்சிகளின் தன்மையை ஏந்தி நிற்பதாக உள்ளன.
சலசலத்துப் பாயும் நீரோடையில் கைகளால் நீரை அள்ளிப் பருகும்போது என்ன உணர்வோமோ, அது போன்றதொரு உணர்வை நமக்கு ஊட்டுகிறது ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு. காட்சிகளை, கதாபாத்திரச் செயல்பாடுகளை ஒரு பார்வையாளராக நின்று பார்க்கச் செய்வதே தனது கடமை என்று அவர் செயல்பட்டிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் என்று சில தொழில்நுட்பப் பணிகள் அச்சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் பிரசன்ன விதாங்கே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அனுஷ்கா சேனநாயகே இதற்குத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இவர்களது எழுத்தாக்கம் மற்றும் காட்சியாக்கம் முன்பாதியில் சோர்வுற வைக்கிறது. அதற்குச் சேர்த்து வைத்து, பின்பாதியில் நம்மை நிமிர்ந்து அமர வைக்கிறது. அதேநேரத்தில், பிரசன்ன விதாங்கேவின் கதை சொல்லலை அவரது படங்களில் ரசித்தவர்களுக்கு ‘பாரடைஸ்’ ஒரு விருந்தாகத்தான் தெரியும்.
எழுப்பப்படும் கேள்விகள்!
‘திருடியது இவர்கள்தான்’ என்று பண்டாராவிடம் கேசவ் உறுதியளிக்கும்போது, ‘இருட்டுக்குள் அவர்களது முகங்கள் தெரியவில்லையே, பிறகு ஏன் உறுதிப்படுத்துகிறாய்’ என்று சொல்வார் அம்ரிதா. அதற்கு, ‘எனக்கு நிச்சயமாகத் தெரியும்’ என்பார் கேசவ்.
போலவே, மானை வேட்டையாடச் சென்ற இடத்தில் அதனைக் கொல்வதற்கான வாய்ப்புகள் நூறு சதவீதம் இருந்தும் ‘சுட வேண்டாம்’ என்று தடுப்பார் அம்ரிதா. அந்த மான் தப்பியோட, கேசவ் சலித்துக் கொள்வார்.
அந்தச் சூழல்களில் தம்பதிக்குள் விளையும் முரண், இறுதியில் மிகப்பெரியதாக மாறும். அதுவே இப்படத்தின் மையப்புள்ளி.
ஒரு காட்சியில், ‘இவங்க உயிருக்கு என்ன மதிப்பு’ என்று கைது செய்யப்பட்ட மலையகத் தமிழர்கள் பற்றி அம்ரிதா கேட்க, ‘ஒரு ஓட்டு; அதுதான் அவங்களுக்கான மதிப்பு’ என்று பதில் சொல்லிவிட்டு சக போலீசாரிடம் எக்காளத்துடன் பண்டாரா சிரிப்பார்.
மலையகத் தமிழர்கள் குறித்த ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தின் பார்வையாக அக்காட்சி இருப்பதாக, நம்மை உணர வைத்திருப்பார் இயக்குனர்.
மலைப்பகுதி சாலைகளில் சிறுவர் சிறுமிகள் ‘கொய்யாக்கா, புளிச்ச கொய்யாக்கா’ என்று விற்பதை, காருக்குள் இருந்தவாறே பார்ப்பார் அம்ரிதா. அவர்கள் பேசுவதைப் புகைப்படம் எடுப்பார். கதை நகர நகர, அச்சிறுவர் சிறுமிகளின் செயல்பாடுகளில் மாற்றத்தை உணர்வார்.
அந்தக் காட்சிகளில் இரு தரப்புமே வெவ்வேறுவிதமான பார்வைகளைப் பரஸ்பரம் வெளிப்படுத்துவதாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.
‘இங்குதான் மலையுச்சியில் இருந்து கீழிருக்கும் சீதையை அனுமன் பார்த்தார்’ என்று ஒரு கோயிலைக் காட்டி ஆண்ட்ரூ விளக்குவதாகக் காட்சியொன்று வரும். அப்போது, ‘போரில் சீதையே ராவணனைக் கொன்றதாகவும், ராமர் அவருக்குத் தேரோட்டியாக இருந்ததாகவும் ஜெயின் ராமாயணத்தில் சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்பார் அம்ரிதா. அதற்கு, ஆண்ட்ரூ சொல்லும் ‘தெரியாது’ என்ற பதிலில் ஆணாதிக்கத்தின் தலைகுனிவு அடிக்கோடிட்டுக் காட்டப்படும்.
இப்படிப் பல கேள்விகள், சந்தேகங்கள், பதில்களைப் போகிற போக்கில் நமக்குள் விதைத்துச் செல்கிறது ‘பாரடைஸ்’. சமகாலச் சமூக, அரசியல் நிகழ்வுகள் தாண்டி கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் கூட இக்கதையோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்திருப்பதே, இப்படத்தைப் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கவிடாமல் நம்மைத் தடுக்கிறது.
நிச்சயமாக, ‘பாரடைஸ்’ திரைப்படம் விமர்சகர்களால் பல திசைகளில் இருந்து நோக்கப்படும்; எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் ஒருசேரச் சம்பாதிக்கும். அந்த விமர்சனங்கள் பற்றிய அறிதலும் புரிதலும் இல்லாதவரையும் கூட, சிறப்பான காட்சியாக்கமும் எழுத்தாக்கமும் மிக்க படமாக ‘பாரடைஸ்’ ஈர்க்கும்.
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை : தேர்தல் வெற்றி குறித்து மோடி பேச்சு!