உதயசங்கரன் பாடகலிங்கம்
தி பெர்பெக்ட் கமர்ஷியல் சினிமா!
இரண்டு நாயகர்கள். ’அக்னி நட்சத்திரம்’ கார்த்திக், பிரபு போல இருவரும் எதிரும்புதிருமாக மோதிக் கொள்கின்றனர். நேருக்கு நேர் இருவரும் சந்திக்கும்போதெல்லாம் திரையில் அனல் பறக்கிறது. இடைவேளையில் அந்த முட்டல் மோதலாக மாறுகிறது. ’இப்படியொரு படத்தின் இரண்டாம் பாதி எப்படியிருக்கும்? படம் எப்படி முடிவடையும்’ என்பதையெல்லாம் தொடர்ந்து தியேட்டர் செல்கிற சிறு குழந்தையும் சொல்லிவிடும். கிளைமேக்ஸில் அந்த இருவரும் கைகோர்த்து எதிரியைப் பந்தாடுவார்கள் என்பதெல்லாம் புளித்துப்போன பழங்கதை.
மேற்சொன்னது போலவே, திரையில் விரிகிறது புதுமுகம் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த ‘லப்பர் பந்து’. ஆனால், இப்படம் தரும் ஆசுவாசம் இருக்கிறதே அது ‘ஆஹா.. அடடா..’ரகம்..!
வெகுநாட்களுக்குப் பிறகு தியேட்டரில் குடும்பத்தோடு கண்டுகளிக்கக்கூடிய, திருவிழா சூழலை உருவாக்கக்கூடிய, அதே கொண்டாட்ட மனநிலையோடு வீட்டுக்குத் திரும்பச் செய்கிற ஒரு படமாக இருக்கிறது. வெறுமனே ஒரு கமர்ஷியல் படமாக நின்றுவிடாமல், அழுத்தமாக ‘சமத்துவ சமுதாயம் வேண்டும்’ என்கிற கருத்தையும் சொல்லிச் சொல்கிறது.
இப்படிப் புகழும் அளவுக்கு இப்படத்தில் என்ன இருக்கிறது என யோசிக்கிறீர்களா?
கிரிக்கெட் ‘வெறி’!
வாரம் ஒருமுறை அல்லது இருமுறை அல்லது தினமும் கிரிக்கெட் ஆடுவது, நள்ளிரவில் கண் விழித்து டிவியில் இந்திய அணி ஆடும் ‘மேட்ச்’ பார்ப்பது, தன்னிலை மறந்து கிரிக்கெட் வேட்கையோடு திரிவது என்றிருக்கும் பலரை நாம் கண்டிருப்போம் அல்லது வாழ்வின் ஒருகட்டத்தில் நாமே அவ்வாறு இருந்திருப்போம்.
மாறாக, மிகச்சிலர் தலை நரைத்தபோதும், முடி அடர்த்தி வற்றியபோதும், அதே வெறியோடு அடுத்தடுத்த தலைமுறைக்குச் சரிசமமாக கிரிக்கெட் மைதானத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள்.
அப்படியொரு அரிதான நபர் கெத்து என்கிற பூமாலை (அட்டகத்தி தினேஷ்).
கடலூர் வட்டாரத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்தவர். சுவரில் பெயிண்டிங் வரைவது அவரது தொழில். ஆனாலும், அவ்வட்டாரத்தில் எங்கு கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலும் முதல் ஆளாகக் களமிறங்குவார் என்பதே அவருக்கான முதல் அடையாளம்.
கிரிக்கெட்டுக்குப் பிறகு, பூமாலை தன் உயிராக மதிப்பது காதல் மனைவி யசோதையை (சுவாசிகா)..
இருவரும் கலப்புத்திருமணம் செய்தவர்கள். இவர்களது மகள் துர்கா (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி). மருத்துவமனையொன்றில் நர்ஸ் ஆக பணியாற்றுகிறார்.
சிறு வயதில் பூமாலையைப் பார்த்து மலைத்துப்போய், ‘எதிர்காலத்தில் இவரைப் போன்று கிரிக்கெட் ஆட வேண்டும்’ என்று நினைத்தவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்பு (ஹரீஷ் கல்யாண்).
அந்த அன்புவும் அவரது நண்பரும் (பாலசரவணன்) சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு பூமாலையின் கிரிக்கெட் ஆட்டத்தைக் காண்கின்றனர்.
மைதானத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் அவரது ஆட்டம் பற்றி விமர்சிக்கின்றனர். அப்போது, ‘நான்லாம் ஒரே ஓவர்ல அந்த அண்ணனை அவுட் ஆக்கிடுவேன்’ என்கிறார் அன்பு. அங்கிருக்கும் கழிவறையில் இருந்து வெளியே வரும் பூமாலையின் நண்பர் (ஜென்சன் திவாகர்) அதனைக் கேட்டுவிடுகிறார். அவர் பூமாலையிடம் அதனைச் சொல்லி விடுகிறார்.
பதிலுக்கு, அன்புவைப் பார்த்து ‘சின்னப்பையன் பேசிட்டுப் போறான் விடு’ என்று சொல்லிச் செல்கிறார் பூமாலை. அந்த நொடியில், இருவருக்குள்ளும் ‘ஈகோ’ மோதல் தொடங்குகிறது.
ஒரு ஆட்டத்தில் வேண்டுமென்றே பூமாலையின் அணிக்கு எதிரான அணியில் சேர்ந்து களமிறங்குகிறார் அன்பு. அவரை ஒரே ஓவரில் ‘அவுட்’ செய்கிறார்.
அதற்குப் பதிலடியாக, வேறு டீம் சார்பில் களமிறங்கி ‘பேட்டிங்க்’கில் பொளந்து கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார் பூமாலை.
இந்த களேபரங்களுக்கு நடுவே, பூமாலையின் மகள் துர்காவை ஒரு குடும்பத்தினர் பெண் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். அன்றைய தினம் பூமாலை வீட்டில் இல்லை. ஏன், அந்த மாப்பிள்ளையும் அன்று வரவில்லை.
ஏனென்றால், துர்காவைப் பார்க்க வந்தது அன்புவின் பெற்றோர். அன்புவும் துர்காவும் காதலிக்கின்றனர்.
’இன்று தனது ஆட்டத்தில் பொறி பறக்க வேண்டும்’ என்று காலையிலேயே பூமாலை தயாராகி நிற்கிறார். அன்றைய தினம் துர்காவைப் பார்க்க, அவரது வீட்டிற்குச் செல்கிறார் அன்பு.
அன்புவும் பூமாலையும் நேருக்குநேர் சந்திக்கின்றனர். மாமனாரோடு தான் மல்லுக்கட்டுகிறோம் என்று தெரிந்ததும் அன்பு விக்கித்து நிற்க, இன்னொரு பக்கம் ‘இவனையா மகள் கல்யாணம் செய்யப் போகிறாள்’ என்று பூமாலை திகைத்து நிற்கிறார்.
அதன்பிறகும் இருவரது ஈகோ மோதல் தொடர்ந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
மேற்சொன்ன கதையில் இருந்தே, இப்படத்தின் மையப்புள்ளியாக கிரிக்கெட் வேட்கை இருப்பதை அறிய முடியும். அதற்கேற்றாற் போல சென்னை 600028, கனா, ப்ளூஸ்டார் உள்ளிட்ட சில படங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அதையும் தாண்டி, ஒரு ’கம்ப்ளீட் எண்டர்டெயினர்’ ஆக விளங்குகிறது ‘லப்பர் பந்து’.
இந்தப் படத்தில், தனது கணவன் வேலைக்குச் செல்லாமல் கிரிக்கெட் மைதானமே கதி என்று கிடக்கிறார் என்பது யசோதைக்குத் தெரியாது. தந்தையோடு தான் காதலன் மல்லுக்கட்டுகிறான் என்பது துர்காவுக்குத் தெரியாது.
அது தெரிய வரும்போது, கிரிக்கெட்டைத் தாண்டி உறவுகளுக்குள் என்ன சிக்கல் வந்தது என்பது இக்கதையின் இன்னொரு பக்கத்தைச் சொல்லும்.
அந்தவொரு அம்சமே, ‘லப்பர் பந்து’வை வெறுமனே ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’வாக அல்லாமல் ஒரு குடும்பச் சித்திரமாக மாற்றுகிறது.
அசத்தும் உள்ளடக்கம்!
அட்டகத்தி தினேஷ் இதில் ஹரீஷ் கல்யாணின் மாமனாராக வருகிறார்.
என்னதான் பதினேழு வயதிலேயே கல்யாணம் ஆனதாகக் காட்டினாலும், இப்படியொரு பாத்திரச் சித்தரிப்பை ஏற்கத் துணிவு வேண்டும். அது மட்டுமல்லாமல், அதனைத் திறம்பட வெளிப்படுத்தும் திறமையும் தனக்கிருக்கிறது என்று தினேஷ் நிரூபித்திருப்பது சிறப்பு.
முதல் பார்வையிலேயே காதல் கொள்வது, கிரிக்கெட் ஆட்டத்தை உயிராக எண்ணுவது என்றிருந்தாலும், தந்தைக்கு உதவியாகக் கடையில் வேலை பார்ப்பவராகவும் வருகிறார் ஹரீஷ் கல்யாண். அளவெடுத்தாற்போலப் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது அவரது நடிப்பு.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியைத் திரையில் கிராமத்துப் பெண்ணாகப் பார்ப்பதில் சிறிதாகச் சிக்கல் தென்படுகிறது. ஆனாலும், ஆம்பளைத்தனமான உடல்மொழி வழியாக அப்பாத்திரத்திற்கு அவர் உயிரூட்டியிருப்பது அழகு.
இந்தப் படத்தில், இவர்கள் மூவரையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது சுவாசிகாவின் நடிப்பு.
தினேஷ் பாத்திரம் மீது கொண்டுள்ள காதலைக் கண்களிலேயே அவர் வெளிப்படுத்தியிருப்பதை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.
பேருந்தில் இருவரும் அமர்ந்திருக்க, ஒரு வயதான பெண்மணிக்கு எழுந்து தினேஷ் இடம் தர, சுவாசிகா கோபக்கனலோடு பார்ப்பதாக ஒரு ஷாட். இரண்டொரு நொடிகள் தான் வருகிறது. அதுவே, மொத்தப்படத்திலும் வழிந்து நிற்கும் அப்பாத்திரங்களின் காதலுக்கான ஒரு பருக்கைப் பதமாக விளங்குகிறது.
ஹரீஷ் கல்யாணோடு வரும் பாலசரவணன் ஒரு பக்கம் ‘கவுண்டர்’ அடிக்க, இன்னொரு பக்கம் ஜென்சன் திவாகர் பவுண்டரியும் சிக்சரும் பறக்க விட்டிருக்கிறார். அவர்களது காமெடி வசனங்கள் காட்சிகளை எளிதாக நகர்த்திச் செல்கின்றன.
தினேஷின் தாயாக வரும் கீதா கைலாசத்திற்குத் திரையில் கொடுக்கப்பட்ட இடம், சுவாசிகாவின் தாயாக வரும் கர்ணன் ஜானகிக்கு இல்லை. ஆனால், இருவருமே நம் மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து காளி வெங்கட், டிஎஸ்கே, தேவதர்ஷினி என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
கிரிக்கெட் மைதானம், நாயகர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், கிராமப்புற வெளி என்று காட்சிக்களங்களை அப்படியே நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.
வீரமணி கணேசனின் கலை வடிவமைப்பு மேற்சொன்னவற்றைத் திரையில் காட்டுவதற்கான சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.
ஆங்காங்கே ‘பிளாஷ்பேக்’ ஆகச் சில காட்சிகள் வந்தாலும், குழப்பமின்றிக் கதை நகர வழி வகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மதன் ஜி. பெரிதாக ‘எபெக்ட்கள்’ கொட்டாமல், கிரிக்கெட் ஆட்டக் காட்சிகளில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடல் சட்டென்று ஒட்டிக்கொள்கிறது மனதோடு.. இதர பாடல்கள் கேட்கும் ரகம்.
பின்னணி இசையில் நம் மனதில் பரபரப்பு கிறுகிறுவென்று ஏறுவதற்கு இடமளித்திருக்கிறார் ஷான் ரோல்டன். மலைப்பயணம் போன்று ஏற்றத்திற்குப் பிறகான இறக்கத்திலும் அதற்குத் தகுந்தாற் போன்ற மனநிலையை உருவாக்கத் தன்னிசையில் முயற்சித்திருப்பது அருமை.
தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இது அவரது முதல் படம் என்று சொன்னால் நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
டெய்லர் கடைக்குச் சென்று அளவு கொடுத்துவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து அவர் தைத்த பேண்ட், சட்டையை அணிந்து பார்க்கும்போது, ‘இதுதாண்டா பிட்’ என்று மனதுக்குள் தோன்றுமே. அப்போது ஒரு மகிழ்ச்சி வருமே. அதனை இப்படத்தில் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் கதையில் நாயகியின் அண்ணியாக ஒரு பாத்திரம் உண்டு. அதற்கும் நாயகனுக்குமான ‘ரிலேஷன்ஷிப்’ தனி ட்ராக் ஆக வரும்.
காளி வெங்கட் தனது பதின்ம வயது மகளை கிரிக்கெட் ஆட அனுப்புவார். அவர் நடத்தும் ஜாலி ப்ரெண்ட்ஸ் அணியில் ஹரீஷ் கல்யாணைச் சேர்க்க விரும்பினாலும், அவரால் அதனைச் செய்ய முடியாது. அது ஏன் என்பது தனி ட்ராக் ஆக வரும்.
அனைத்தையும் தாண்டி, ஊர் ஊராகச் சென்று கிரிக்கெட் ஆடும் அட்டகத்தி தினேஷோடு சேர்ந்து சுற்றுவார் ஜென்சன் திவாகர். இன்னும் சிலரும் அவர்களோடு கூட்டணி சேர்ந்து சுற்றுவார்கள். அது தனி ‘ட்ராக்’ ஆக வரும்.
இது தவிர்த்து சாதி வேறுபாடு, பாலின சமத்துவமின்மை போன்ற பெரும் பிரச்சனைகளும் இக்கதையில் உண்டு. இப்படிப் பல விஷயங்களை ஒன்றுசேர்த்து தந்திருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.
ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் பாத்திரங்களுக்கு முதன்மையான இடம் தரப்பட்டுள்ளதால், சில பாத்திரங்களை நாம் ‘மிஸ்’ செய்ய வேண்டியிருக்கிறது. போலவே, இடைவேளைக்குப் பிறகு கதை மெதுவாக நகர்வதாகத் தோன்றுகிறது. அது போன்ற மிகச்சில குறைகளே இதிலுண்டு.
அவற்றைக் கடந்துவிட்டால், ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் நிறையவே இதிலுண்டு. அதிலும், கிளைமேக்ஸ் காட்சி கவிதையாய் நம் மனதைத் தொடுகிறது.
அனைத்தையும் தாண்டி இதில் ஒரு அம்சம் உண்டு. அது, விஜயகாந்தை திரையில் நினைவூட்டியிருக்கும் விதம்.
மீண்டும் விஜயகாந்த் புகழ்!
தீவிர விஜயகாந்த் ரசிகர்களே பொறாமைப்படுகிற அளவுக்கு, இதில் அட்டகத்தி தினேஷ் பாத்திரத்தை அப்படியொரு ரசிகராகத் திரையில் காட்டியிருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.
வீட்டுத் திண்ணைக்கு அருகேயுள்ள சுவரில் விஜயகாந்தின் சிரித்த முகம் வரையப்பட்டிருப்பது, ஒரு தலைமுறையின் ரசனைக்கான சான்றாக விளங்குகிறது.
நீங்கள் விஜயகாந்த் ரசிகராகக் கூட இருக்க வேண்டாம். ’நீ பொட்டு வச்ச தங்ககுடம்’ எனும் ‘பொன்மனச்செல்வன்’ பாடலைக் கேட்டவுடன் துள்ளிக் குதிப்பவரா இருந்தாலே போதும். இந்தப் படம் பிடித்துப் போகும். காரணம், அந்த பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற விதம் அப்படி.
அதேபோல, ஹரீஷ் கல்யாணை தீவிர விஜய் ரசிகராகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இதில் சினிமா ரசனையைத் தாண்டி அரசியலும் கலந்திருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவது தொடர்பான காட்சிகள் இதிலிருக்கின்றன.
சமூக, கலாசாரக் கூறுகளை நிறைத்திருந்தாலும், ‘லப்பர் பந்து’ தியேட்டரில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கத்தக்க படமாகவும் உள்ளது. ஆபாசம், வன்முறை துளி கூட இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும் என்ற படக்குழுவின் நம்பிக்கைக்கு அதுவே நாம் செய்யும் கைமாறு.
என்னைக் கேட்டால், ‘ஆண் பாவம்’ படத்திற்குப் பிறகு தியேட்டரில் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கிய படங்களில் ‘லப்பர் பந்து’வுக்கு முக்கிய இடம் உண்டு என்பேன். ’தி பெர்பெக்ட் கமர்ஷியல் சினிமா’ என்று புகழும் அளவுக்கு இருக்கிறது இப்படம்.
’லப்பர் பந்து’வுக்கு கிடைக்கும் ரத்தினக் கம்பள வரவேற்புக்கு ஏற்ப, தமிழரசன் பச்சமுத்து தன் குழுவோடு அடுத்த படத்தை இன்னும் சிறப்பாகத் தர வேண்டும்.. வாழ்த்துகள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தோனியின் சாதனையைச் சமன் செய்த ரிஷப் பந்த்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிர்ப்பு… மநீம பொதுக்குழுவில் தீர்மானம்!