ஒரு ‘கொலவெறி’ படம்!
‘தம்பி, எங்க கிளம்புறீங்க. இது ரத்த பூமி. போங்க, போய் ஓரமா உட்கார்ந்து டிவி பாருங்க’ எனும் தொனியில் ‘வின்னர்’ படத்தில் ‘கைப்புள்ள’ வடிவேலு பேசும் ‘டயலாக்’ வரும். அவர் குறிப்பிட்ட ‘ரத்த பூமி’ எப்படியிருக்கும் என்பதை அப்படத்தின் பின்பாதியில் நாம் கண்டிருப்போம்.
அதே பாணியில் பல படங்களில் வன்முறைக் காட்சிகளில் ரத்தம் தரையெங்கும் சிந்தப்படுவதையும் கண்டிருப்போம். சமீபகாலமாகப் பெருவெற்றி பெறும் ‘பான் இந்தியா’ திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் கோரமும் குரூரமும் நிறைந்திருப்பதையும், தியேட்டரில் அதற்குக் கிடைக்கும் வரவேற்பையும் கண்டு வருகிறோம்.
அப்போதெல்லாம் ‘ஃபுல் மீல்ஸ்ல பரிமாறுகிற ஊறுகாய் மாதிரி இந்தக் காட்சிகளை வைக்காம சாப்பாடு முழுக்கவே காரம் சேர்த்தா எப்படி’ என்று அந்தந்த படத்தின் இயக்குனர் முதல் சம்பந்தப்பட்ட அனைவரையும் மனதுக்குள் நினைத்துப் பார்த்து நறநறுத்திருப்போம்.
திரைப்படங்களில் நிறைந்திருக்கும் வன்முறை தொடர்பாக இது போன்று வாதம் செய்யும்போதெல்லாம், ‘முழுக்க முழுக்க வன்முறையில் தோய்க்கப்பட்ட படங்கள் உலகம் முழுக்க வெளிவருகிறது தெரியுமா’ என்று எதிர்க்குரல்கள் கேட்கும்.
அவர்களே வாயடைத்துப்போகும்படி தற்போது இந்தியில் ‘கில்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. நிகில் நாகேஷ் பட் இயக்கியுள்ள இந்தப் படம் நம்மூர் மசாலா படங்களுக்கே உரித்தான சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பதுதான் இதனை விமர்சிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘கில்’ கதை!
‘கில்’ எனும் டைட்டிலே இப்படத்தின் திரைக்கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யூகிக்க வைக்கும்.
தேசிய பாதுகாப்பு படையில் கமாண்டாக்களாக அம்ரித் ரத்தோட் (லக்ஷ்யா), விராத் சத்வால் (அபிஷேக் சௌகான்) வேலை பார்த்து வருகின்றனர். எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும், அதில் வெற்றி பெறுவதுமே அவர்களது தினசரி இலக்காக இருக்கிறது.
துலிகா சிங் (தான்யா மானிக்தலா) எனும் பெண்ணை அம்ரித் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார். அவரது தந்தை பல்தேவ் சிங் தாக்கூர் (ஹர்ஷ் சாயா) மிகப்பெரிய பணக்காரர். செல்வாக்கு மிக்கவர். அவரை எதிர்த்து துலிகாவால் எதுவும் பேச முடிவதில்லை.
துலிகாவுக்கு வேறொரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்கிறார் பல்தேவ். அதனைச் சொன்னதும், விராத்தை அழைத்துக்கொண்டு விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார் அம்ரித்.
நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. அந்த இடத்திற்கு வந்து தன்னைச் சந்திக்கும் அம்ரித்தைக் கண்டு துலிகா மகிழ்ச்சியடைந்தாலும், அவருடன் கிளம்பிச் செல்லத் தயங்குகிறார்.
‘தந்தையுடன் இருக்கும் ஆட்கள் கொலை செய்யச் சிறிதும் தயங்காதவர்கள்’ என்கிறார். ‘வாழ்வதற்காக உன்னோடு வருவேனே தவிர சாவதற்காக வரமாட்டேன்’ என்று அம்ரித்தின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கிறார் துலிகா.
டெல்லிக்கு அடுத்த நாள் ரயிலில் குடும்பத்தினரோடு கிளம்புவதாகவும், அங்கு சென்றபிறகு தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் அம்ரித்திடம் கூறுகிறார் துலிகா.
அதனை விராத்திடம் சொல்கிறார் அம்ரித். ’ஏண்டா ரெண்டு பேரும் இப்படி இருக்குறீங்க’ என்று விராத் அலுத்துக்கொள்கிறார்.
அடுத்த நாள் இரவு, துலிகா தன் குடும்பத்தினரோடு ரயிலில் ஏசி பெட்டியில் பயணிக்கிறார். அதே ரயிலில் விராத்தும் அம்ரித்தும் செல்கின்றனர்.
நள்ளிரவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கிறது. சுமார் நாற்பது பேர் அவர்கள் பயணிக்கும் ஏசி பெட்டிகளில் ஏறுகின்றனர். அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள்.
அக்கும்பலின் தலைவன் ஃபனி (ராகவ் ஜுயால்) பொதுமக்களைப் பயமுறுத்திப் பணத்தையும் நகைகளையும் பிடுங்க வேண்டும் என்று நினைப்பவர். அதற்காக, எந்த எல்லை வரை செல்லலாம் என்றிருப்பவர்.
அவரது தந்தை பெனி சில ஆட்களுடன் இன்னொரு ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கிறார்.
ஏசி பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை அடித்து உதைத்து, அவர்களிடம் இருப்பதைப் பறிக்கின்றனர் அந்தக் கொள்ளையர்கள். அம்ரித், விராத்திடம் இருக்கும் பணத்தையும் அவர்கள் பிடுங்குகின்றனர்.
கொள்ளையர்களின் பயமுறுத்தல் தாக்குதல்களாக எல்லை மீற, விராத்தும் அம்ரித்தும் பதிலடி கொடுக்கத் தொடங்குகின்றனர். அதன்பிறகு, அவர்களது அராஜகம் இன்னும் அதிகமாகிறது.
அந்த நேரத்தில், தங்கை அகானா (அத்ரிஜா சின்ஹா) பாத்ரூம் சென்றுவிட்டுத் திரும்பவில்லை என்பதை அறிகிறார் துலிகா. அவரைத் தேட முனைவதற்குள் அந்த கொள்ளை கும்பல் சுற்றி வளைக்கிறது.
பெரும்பணக்காரர் பல்தேவ் சிக்கிவிட்டார் என்றறிந்ததும், அவரைப் பணயமாக வைத்து நிறையப் பணம் பறிக்கலாம் என்று திட்டமிடுகிறார் ஃபனி.
அதற்குள் அகானாவைத் தேடிச் செல்லும் துலிகாவைச் சந்திக்கிறார் அம்ரித். அவரது பாதுகாப்புக்காக ஒரு கத்தியையும் கையில் கொடுக்கிறார். அடுத்தடுத்த பெட்டிகளில் இருக்கும் கொள்ளையர்களைத் தாக்கத் தொடங்குகிறார்.
ஒருகட்டத்தில் அந்த கொள்ளை கும்பலால் கடுமையாகத் தாக்கப்படுகிறார் அம்ரித். இன்னொரு பெட்டியில் சண்டையிடும் விராத் உடம்பில் கத்தியால் குத்திப் பலத்த காயத்தை ஏற்படுத்துகின்றனர் அந்தக் கொள்ளையர்கள்.
‘இனிமேல் இவர்களை எதிர்ப்பது கடினம்’ என்றான நிலையில், தன்னைப் பிடிக்க முனையும் ஃபனியைத் தாக்குகிறார் துலிகா. அதனால் கோபமுறும் ஃபனி அவரைக் கத்தியால் குத்துகிறார்.
‘சாவதற்காக உன்னோடு வர முடியாது, நாம் வாழ வேண்டும்’ என்று சொன்ன துலிகா கண் முன்னே துடிதுடித்துச் சாவதைக் காண்கிறார் அம்ரித். ஃபனி துலிகாவை வெளியே தள்ள, எதிரில் வரும் இன்னொரு ரயில் அவர் மீது மோதுகிறது.
அந்தச் சத்தமே அம்ரித்துக்குள் இருக்கும் மிருகத்தைக் கிளர்ந்தெழச் செய்கிறது? அதன்பின் என்னவானது?
துலிகாவிடம் சொன்னபடி அஹானாவைக் கண்டுபிடித்தாரா அம்ரித்? அந்த கொள்ளையர் கும்பல் உயிரோடு தப்பியதா என்று சொல்கிறது மீதமுள்ள திரைப்படம்.
சிறு பிரச்சனையும் இன்றித் தங்களது மண வாழ்வைத் தொடங்க வேண்டுமென்று நினைத்த காதலி அந்தக் காதலன் கண் முன்னே கொல்லப்படுவதுதான் இக்கதையின் இடைவேளைப் பகுதியாக உள்ளது.
அதனால் கொள்ளைக்கும்பலின் கோரம் நிறைந்த அட்டகாசங்கள் முதல் பாதியில் இருக்கிறது. அதைவிடக் கொடூரமானதாக, பயங்கரமானதாக இரண்டாம் பாதியில் நாயகனின் செயல்பாடு அமைந்திருப்பதைக் காட்டுகிறது ‘கில்’.
ஒருகட்டத்தில் தியேட்டரில் இருக்கிறோம் என்பதையே மறந்து, தரையில் கால் வைத்தால் வழுக்கிவிடுஇமோ என்றெண்ணும் அளவுக்குப் படம் முழுக்க ஒரே ரத்தச்சகதியாக இருக்கிறது.
‘கில்’ படத்தின் யுஎஸ்பி அதுவே. அதனால், இம்மாதிரிக் கதைகளையும் சண்டைக்காட்சிகளையும் ரசிப்பவர்கள் மட்டுமே இப்படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் இத்யாதிகளைக் காண வேண்டும். அதில், இந்த விமர்சனத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
’பிரில்லியண்ட்’ உள்ளடக்கம்!
’கில்’ படத்தின் கதையோடும் காட்சிகளோடும் ஒன்றுவது கொஞ்சம் கடினம். ஆனால், அதனை மீறி ஒன்றிவிட்டால் ‘போட்டு பொழந்துடுறா அவனை’ என்று கத்திக் கூச்சலிடும் அளவுக்குப் படம் ‘படுபயங்கரமான’ காட்சியனுபவத்தைத் தருகிறது காட்சியாக்கம். அதற்கேற்ப இதன் உள்ளடக்கம் ‘பிரில்லியண்ட்’ ஆக் உள்ளது.
முக்கால்வாசி படம் ரயிலில் நடக்கும் மோதலையே மையப்படுத்துகிறது. கொள்ளை கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரையும் வெவ்வேறுவிதமாக, மிகக்கொடூரமாக நாயகன் கொல்வதாகக் காட்சிகள் அமைந்துள்ளன.
அதனால், இந்த படத்தில் சண்டைப்பயிற்சியாளர்கள் சி யோங் ஓ, பர்வேஸ் ஷெய்க் பங்கு எவ்வளவு, இயக்குனர் நிகில் நாகேஷ் பட் மற்றும் வசனகர்த்தா ஆயிஷா சையத் பங்கு எவ்வளவு என்று நம்மால் வரையறுக்க முடிவதில்லை.
ஒளிப்பதிவாளர் ரஃபி மெஹ்மூத், தயாரிப்பு வடிவமைப்பாளர் மயூர் சர்மா, ஒலிக்கலவையைக் கையாண்ட வினித் காலா மட்டுமல்லாமல் கோரமான மனித உருவங்களைத் திரையில் காட்ட உதவும் வகையில் ப்ராஸ்தடிக் மேக்கப்பை கையாண்ட கலைஞர்களும், விஎஃப்எக்ஸ் கலைஞர்களும் இன்னபிற துறைகளில் பங்களிப்பைத் தந்தவர்களும் இதில் இயக்குனரின் எண்ணவோட்டத்தோடு கைகோர்த்துச் செயல்பட்டுள்ளனர்.
படத்தொகுப்பாளர் சிவகுமார் பணிக்கர் காட்சிகளைத் தொகுத்திருக்கும் விதம், ‘கண்கட்டு வித்தை’யாகப் பல விஷயங்களை நாம் காணாதவாறு மறைக்கிறது. படத்தின் வேகத்திற்கும், திரைக்கதையின் வெற்றிக்கும் பெரும்பங்கினைத் தந்திருக்கிறது.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் சாஸ்வத் சச்தேவ்.
அமைதியை விரும்பும் நாயகியின் மனத்தைப் பிரதிபலிக்க ’மாண்டேஜ் காட்சி’களில் ‘மெலடி’யை தவழவிட்டவர், அதே திசையில் பயணித்து நாயகனின் கொலைவெறியை நியாயப்படுத்தும்விதமான இசையையும் ஒலிக்க விட்டிருக்கிறார். ரயில் சண்டைக்காட்சிகளில் ஒலி வடிவமைப்பாளரோடு கைகோர்த்து அவர் தந்திருக்கும் உழைப்பு ‘வாவ்’ ரகம்!
நாயகனாக இதில் லக்ஷ்யாவும் நாயகியாக தான்யா மாணிக்தலாவும் நடித்துள்ளனர்.
‘என்ன இது பிஞ்சு மூஞ்சியா இருக்கு’ என்று சொல்லும்படியாகத் தென்படும் லக்ஷ்யா, சண்டைக்காட்சிகளில் தனது உடல்மொழியினால் நம் கேள்விக்குப் பதிலளிக்கிறார்.
இந்திப் படங்களில் அறிமுக நாயகிகள் எப்படி இருப்பார்களோ, அவ்வாறே இதில் தோற்றமளிக்கிறார் தான்யா.
தொண்ணூறுகளில் இந்தி டப்பிங் சீரியல்கள் பார்த்தவர்களுக்கு ஹர்ஷ் சாயாவை நன்கு தெரியும். இதில் அவர் பல்தேவ் ஆக வருகிறார்.
விராத் ஆக வரும் அபிஷேக் சௌகானுக்கு இதில் அதிக வேலையில்லை என்றாலும், அவரது இருப்பும் முக்கியத்துவத்தோடு திரையில் காட்டப்பட்டுள்ளது.
நமக்கு நன்கு தெரிந்த ஆசிஷ் வித்யார்த்தி இதில் இருக்கிறார். ஃபனியின் தந்தையாக, கொள்ளை கூட்டத்தின் தலைவன் பெனி ஆக அவர் வருகிறார். சில காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
ஃபனியாக நடித்துள்ள ராகவ் ஜுயால் நம்மூர் கேபிஒய் தீனாவை நினைவூட்டுகிறார் (இதனை தீனா படிக்க வேண்டும், ‘நாமும் ஒரு வில்லனாகலாம்’ என்று நினைக்க வேண்டும் என்பதற்காகவே இது எழுதப்பட்டுள்ளது). அவரது நடிப்பே திரைக்கதையோடு நம்மைப் பிணைக்கிறது.
இவர்கள் தவிர்த்து கொள்ளை கும்பலில் வசனம் பேச வாய்ப்பு தரப்பட்ட நான்கைந்து பேர், ரயில் பயணிகளாக வரும் இளைஞர்கள், அவர்களது குடும்பத்தினர் என்று சுமார் நூறு பேராவது திரையில் தெளிவாகத் தங்களது முகங்களைக் காட்டியிருப்பார்கள்.
இயக்குனர் நிகில் நாகேஷ் பட், நிச்சயமாக ஒரு புதிய கதையில் நமக்குச் சொல்ல முயற்சிக்கவில்லை. ஆனால் திரைக்கதையில் பெரும்பகுதி ரயிலில் நடக்கும் மோதலை மையப்படுத்தியிருப்பதும், அதன் காட்சியாகக்த்தில் நிறைந்திருக்கும் நேர்த்தியும் நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்கிறது.
கொல்கிறதா, வெல்கிறதா?
ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் வகைமை போலவே கொடூரமான காட்சிகள் நிறைந்த படங்களுக்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. அந்த ‘ரசிகக் குஞ்சுகள்’ தனி ரகம்!
நம்மூரிலும் அப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை வழக்கமான ‘கமர்ஷியல்’ படங்களின் சண்டைக்காட்சிகளின்போது அறிய முடியும். வன்முறை அதீதமாகத் தெரிந்தால், அவர்கள் எழுப்பும் உற்சாகக் குரல்களின் வழியே அதனைத் தெரிந்துகொள்ளலாம்.
‘கில்’ அப்படிப்பட்ட ரசிகர்கள் பெரும்பாலான காட்சிகளில் கூக்குரல் எழுப்ப வகை செய்கிற ஒரு திரைப்படம்.
அதனை மனதிலேற்றிக் கொண்டால், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தேவையற்ற மன உளைச்சலுக்கு அமைதி விரும்பிகள் ஆளாக நேராது. அதனால் அப்படிப்பட்ட இளகிய மனதுடையவர்களுக்கு இது ஒரு ‘கொலவெறி’ படம்; இதரர்களுக்கு இது ரசனைக்குரிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.
எது எப்படியானாலும், ‘கில்’ கொண்டுள்ள தொழில்நுட்ப உள்ளடக்கத்தின் செறிவு அபாரமானது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், நிகில் நாகேஷ் பட்டின் முயற்சி ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று தாராளமாகச் சொல்லலாம்!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…