பிச்சைக்காரன் 2 வெளியாவதில் சிக்கல்!
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் பெரும்பான்மையான சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி தயாரித்து படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் ஆண்டனி பிப்ரவரி 27 ஆம் தேதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அந்த தேதிக்குள் நிறைவடையாது என்று கூறப்படுகிறது.
அதனால் விஜய் ஆண்டனி அறிவித்தபடி வெளியாகாது என்கிறார்கள் படக்குழு தரப்பில்.
அதேசமயம், அந்தத் தேதியில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் அப்படம் வராது என்ற நம்பிக்கையில் பிச்சைக்காரன் – 2 படத்தை அறிவித்தாராம் விஜய் ஆண்டனி.
இப்போது ருத்ரன் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. அதனால் போட்டியை தவிர்க்க தன் படத்தைத் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்கின்றனர்.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படங்களில் திரையரங்குகள் மூலம் அதிகம் வசூல் செய்த படம் பிச்சைக்காரன் படம் மட்டுமே.
அதற்கு பின் அவர் நடிப்பில் வெளியான சைத்தான், நம்பியார், எமன், காளி, திமிரு புடிச்சவன், அண்ணாத்துரை படங்கள் அனைத்தும் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் பிச்சைக்காரன் – 2 படத்திற்கான தமிழ் உரிமைக்கான விலையாக விஜய்ஆண்டனி 18 கோடி ரூபாய் கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகராக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துவரும் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் தமிழ்நாடு உரிமை 14 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
விஜய் ஆண்டனி கூறியபடி 18 கோடி ரூபாய்க்கு வாங்குபவருக்கு சுமார் 36 கோடி ரூபாய் வசூல் ஆகவேண்டும் அதற்கான ரசிகர் கூட்டமும், வசூல் வாய்ப்புக்களும் விஜய் ஆண்டனிக்கு இல்லை என்பதால் படம் வியாபாரம் ஆகவில்லை.
இதனால்தான் விஜய்ஆண்டனி அறிவித்தபடி ஏப்ரல் 14 அன்று பிச்சைக்காரன் – 2 வெளியாகாது என்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தில்.
இராமானுஜம்
தேர்வெழுதாத 50 ஆயிரம் மாணவர்களுக்குத் துணைத் தேர்வு!
ஸ்டாலின் வழியில் ரங்கசாமி! புதுச்சேரியில் அதிரடி அறிவிப்பு!