நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை, ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). நேற்றிரவு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு 7.45 மணியளவில் அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார் எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த கார் நடிகை ரேகா நாயருடையது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது கார் ஓட்டுநரான பாண்டி என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து ரேகா நாயர் பாலிமர் சேனலிடம் கூறுகையில், “சம்பவ இடத்தில் மன நிலை பாதித்த பிச்சை எடுக்கக் கூடிய ஒருவர் விழுந்து கிடந்தார். அவர் விழுந்து கிடந்தாரா அல்லது வண்டி வரும் போது சாலையை கடந்தாரா என எதுவும் எனக்குத் தெரியவில்லை.
அங்கிருந்தவர்கள் கத்தினார்கள்… அப்போது நான் ஏதோ சொல்கிறார்கள் என்று டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னேன், டிரைவர் என்னவென்று கண்ணாடி வழியாக பார்ப்பதற்குள், காரை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உடனே நான் கீழே இறங்கிவிட்டேன். எனக்குத் தெரிந்த சிலரை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். போலீசாருக்கும் தகவல் தெரிவித்துவிட்டேன். முதலில் பூனையோ, நாயோதான் குறுக்கே வந்துவிட்டது என நினைத்தோம். நான் காரை ஓட்டவில்லை. தற்போது திருமணம் ஒன்றிற்காக கேரளா வந்துவிட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
நடிகர் ரேகா நாயர் இரவின் நிழல் மற்றும் சின்னத்திரையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பணம் தராமல் அலைகழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!
ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!