கருப்பாக இருப்பதால் நிராகரிக்கப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா

சினிமா

சினிமாவில் நுழைந்த போது தாம் பலமுறை நிராகரிக்கப்பட்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் வளர்ந்தவர்.

18 வயதில் உலக அழகி பட்டத்தை வென்றபோது தனது தேடலைத் தொடங்கியதாகக் கூறும் இவர், கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டத்தை தன்வசப்படுத்தியவர். விஜய் நடிப்பில் வெளியான ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று ( நவம்பர் 10 ) இந்தியா வந்துள்ளார்.

18 வயதில் தொடங்கிய தேடல்

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “நீங்கள் ஒரு ஏணியில் ஏறும்போது, ஒரே நேரத்தில் மேலே செல்லமுடியாது. ​​​​ஒவ்வொரு படியையும் நீங்கள் மிதிக்க வேண்டும். முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு 17 அல்லது 18 வயது. நான் சன்னி தியோலுடன் நடித்த போது எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.

ஏனென்றால் நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவள். நான் பரேலியில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் மருத்துவர்கள். நாங்கள் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் பார்ப்போம்.

நினைத்துக்கூட பார்க்கவில்லை

ஆனால் நானே சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அழகிப் போட்டியில் வென்றபிறகு என் வாழ்க்கை சினிமா திசையில் சென்றுவிட்டது. அந்த வயதில் என் மேல் என்ன திணிக்கப்பட்டது என்று தெரியவில்லை. நான் செய்ததெல்லாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க முயற்சித்ததுதான். நான் நிறைய கற்றுக்கொண்டேன். என் சக நடிகர்களைப் பார்த்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

அழகாக இல்லை

உலக புகழ்பெற்ற நடிகையாவது என்னுடைய கனவு அல்ல. அது நடந்து விட்டது. நான் சிறிய வேடங்களில்தான் நடிக்கத் தொடங்கினேன். ஆனால் பெரிய கதாபாத்திரங்களை அடைய அது தேவை. இது மிகவும் எளிதானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நான் செய்தேன், என்னால் முடிந்தது.

இதற்காக நான் மிகவும் பணிவாக இருக்க வேண்டியிருந்தது. பாலிவுட்டில் நான் செய்த வேலையை ஒவ்வொரு இடத்திலும் காட்ட வேண்டும். நடிப்புப் பயிற்சியாளர்களுடன் பணிபுரிந்தேன், பல ஆடிஷன்களில் கலந்துகொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பலமுறை நிராகரிக்கப்பட்டேன். ஆனாலும் முயற்சியை விடவில்லை. அதற்கு நான் வருத்தப்படவில்லை. உண்மையில் பெருமைப்படுகிறேன். நான் சினிமாவில் நுழைந்தபோது நான் அழகாக இல்லை. கருப்பாக, வித்தியாசமாக இருப்பதாக பலர் கூறினார்கள்” என்று பேசியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

யசோதா வெளியாவதற்கு முன்பே சந்தோஷப்பட்ட சமந்தா!

’அடி ஆத்தி இது என்ன ஃபீலு’: வெளியான ‘வாத்தி’ முதல் பாடல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0