ஜெயம் ரவி நடிப்பில் மார்ச் 10-ஆம் தேதி வெளியாக உள்ள அகிலன் திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படங்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது தான்.
எதிர்வரும் காலங்களில் விநியோகஸ்தர் என்கிற ஒன்று இல்லாமல் போய்விடும். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கடந்து இங்கு சினிமா தொழில் செய்வது இயலாது என்கிற புலம்பல்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகங்களில் அன்றாட நிகழ்வாக மாறிப்போனது.
நேர்மையான கணக்கு, தடையின்றி வெளியீடு, தயாரிப்பாளர்களுக்கு படம் ஓடி முடிந்தவுடன் பங்குத்தொகை செட்டில் செய்வது, திரையரங்குகளுக்கு கொடூரமான மினிமம் கேரண்டி வியாபார ஒப்பந்த நடைமுறையில் இருந்து விடுதலை என ஒட்டுமொத்தமாக திரைப்பட வெளியீட்டை ஒழுங்குபடுத்தும் முயற்சியை உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார். இதனால் சில பாதிப்புகள் இருந்தாலும் பெரும்பான்மை நன்மைகள் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது என கூறப்பட்டது.
இதனால் தனிக்காட்டு ராஜாவாக ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ செலுத்தி வந்த ஆதிக்கத்திற்கு வாரிசு படம் மூலம் கடிவாளம் போட்டது ‘செவன் ஸ்கீரீன்’ நிறுவனம் என்கிறார்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில்.
உதயநிதி தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பு ஏற்கும் வரை ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோக பிரிவின் அணுகுமுறை, செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறது.
உதயநிதி அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்த பின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் பெயரில் படங்களை வெளியிடுவது சட்டசிக்கலை ஏற்படுத்தும் என்பதால் நிறுவனத்தின் பெயரும், உதயநிதி பெயரும் இல்லாமல் படங்களை வெளியிட்டு வந்தனர்.
உதயநிதி நேரடி பார்வையில் தற்போது பட வெளியீடுகள் இல்லை. பட வெளியீட்டு வேலைகளை நிறுவன அதிகாரிகளே மேற்கொள்கின்றனர்.
தங்கள் படத்தை வெளியிட்டு தருமாறு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களிடம் பட வெளியீட்டை கடந்து விளம்பரத்திற்கு தாங்கள் குறிப்பிடும் நபர்களை நியமிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்காமல் கட்டளையாகவே பிறப்பிக்க தொடங்கியுள்ளனர்.
தங்கள் படம் வெளியானால் போதும் என்கிற மனநிலையில் படத்தின் புரமோஷனுக்காக இதுவரை பணியாற்றிய ஊழியர்களை நாணயமற்று பலிகொடுத்த தயாரிப்பாளர்களும் அதற்கு உடன்படாத தயாரிப்பாளர்களும் உள்ளனர்.
முன்னணி நடிகர்கள் நடித்த பட தயாரிப்பாளர்களிடம் இது போன்ற அழுத்தம் கொடுப்பதில்லை, தமிழ் சினிமாவில் திரைப்படங்களை புரமோஷன் செய்வதற்கு பத்திரிகை தொடர்பாளர்கள் வேலை செய்வார்கள்.
ஆனால் தங்களுக்கு வேண்டிய பத்திரிகை தொடர்பாளர்களை தாங்கள் வெளியிடும் படங்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற வரை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதிகாரிகள் பிறருடைய வேலைவாய்ப்பு பறிபோகும் அளவிற்கு அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
இவற்றுக்கு எல்லாம் தீர்வு இல்லையா என்கிற புலம்பல்கள் அதிகரித்த நிலையில், வாத்தி படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கிய செவன்ஸ் கிரீன் லலித்குமார், படத்தின் தமிழ்நாடு உரிமையை மொத்தமாக கொடுத்துவிட வேண்டும் என ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவன பொறுப்பாளர்கள் கூறினார்கள்.
ஒட்டுமொத்த திரையுலகமும் லலித்குமார் அடங்கிப் போக போகிறாரா இல்லை எதிர்த்துப் போவாரா என எதிர்பார்த்தது.
விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல், வாரிசு ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக வெளியிட்டதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக வாத்தி படத்தை அவுட்ரேட் முறையில் வியாபாரம் செய்து படத்தை பிப்ரவரி 17 அன்று தமிழ்நாட்டில் வெளியிட்டார்.
இந்த நிலை தொடருமா என்ற விவாதங்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் நடைபெற்றுவந்த சூழலில் ஜெயம்ரவி நடிப்பில் மார்ச் 10 அன்று வெளியாகவுள்ள அகிலன் படம் வாத்தி படம் வெளியிடப்பட்ட வழியை பின்பற்றி வெளிவரவுள்ளது.
கிரீன்சீன் மீடியா எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. அகிலன்’ திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதனால் படத்தயாரிப்பு நிறுவனம் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை அணுகி இந்தப்படத்தை வெளியிடும்படி கேட்டுள்ளனர். ரெட்ஜெயண்ட் நிறுவனமும் அக்கோரிக்கையை ஏற்று படத்தை வெளியிட ஒப்புக்கொண்டது. ஆனால் அந்நிறுவனத்தின் பெயர் போடாமல் வெளியிடுகிறோம் என்றதுடன் வழக்கம்போல பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கின்றது
அதுமட்டுமின்றி முன்தொகையாக அகிலன் படக்குழு கேட்ட தொகையை தரமுடியாது. நாங்கள் நிச்சயிக்கும் தொகையை மட்டுமே கொடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் ஏற்கவில்லை.
அதனால் தமிழ்நாட்டின் எல்லா விநியோகப்பகுதிகளுக்கும் தனித்தனியாக விநியோகஸ்தர்களை நியமித்து விநியோக முறையில் படத்தை வெளியிடும் வேலைகளை செய்துமுடித்துவிட்டனர்
எல்லாப்படங்களையும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொண்டுபோய்க் கொடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ரெட்ஜெயண்ட் வேண்டாமென செவன்ஸ்கிரீன் லலித்குமார் எடுத்த முடிவை தொடர்ந்து
கீரீன் சீன் நிறுவனமும் துணிச்சலாக முடிவெடுத்திருப்பது தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் விவாத பொருளாகி வருகிறது.
இராமானுஜம்
கோவை: ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு!
நிதியமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர்கள்!