தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட விஷால், சிம்பு, தனுஷ், அதர்வா உள்ளிட்ட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் செப்டம்பர் 13 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடிகர்கள் சிலம்பரசன், தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிலம்பரசனுடன் பல முறைபேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்கத்தின் அறக்கட்டளை நிதியை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா, முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கும் ரெட் கார்டு வழங்குவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெட் கார்டு விதிக்கப்பட்டதன் மூலம் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக உழைப்பாளி படம் வெளியான சமயத்தில் நடிகர் ரஜினி காந்த், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பின் போது நடிகர் சிம்பு உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரெட் கார்டு விதிக்கப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அவை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.