வாலி குறித்து திடீரென உருகிய வைரமுத்து: பின்னணி என்ன?

சினிமா

தமிழ் திரையுலகில் கொண்டாடப்படும் பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து, தனது சக பாடலாசிரியரான வாலியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக கொண்டாடப்படுபவர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்காக திரைப்படத் துறையில் இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதை 7 முறை பெற்றுள்ள இவர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

1980ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலை எழுதி தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து.

அதற்கு அடுத்த ஆண்டில்’அலைகள் ஓய்வதில்லை’ மற்றும் 1986 ஆண்டு ’முதல் மரியாதை’ பட பாடல்களுக்காகவும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து ’சின்ன சின்ன ஆசை’, ’போறாளே பொண்ணுத்தாயி’, ’முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்’, ’நெஞ்சில் ஜில் ஜில் ஜில்’, ’கள்ளிக் காட்டில்’, ’எந்தப்பக்கம் காணும்போதும்’ போன்ற பல்வேறு பாடல்களுக்கு மாநில மற்றும் தேசிய விருதை பெற்றுள்ளார்.

எனினும் தனது சமகாலத்தில் பாடலாசிரியாக புகழ் பெற்றிருந்த வாலியுடனும் போட்டியுடன் கூடிய நட்புறவை வைரமுத்து கொண்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரபல பின்னணி பாடகி சின்மயி, மீ டூ குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து வைரமுத்து திரைப்படத்திற்கு பாடல் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது.

எனினும் மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் தமிழ் சினிமாவில் பொக்கிஷமாக கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வனில் அவர் பாடல் எழுதாதது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் ஆஸ்தான பாடலாசிரியராக இருந்த வைரமுத்து சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் எந்த படங்களிலும் பணியாற்றவில்லை.

மேலும், மணிரத்னம் – ஏ.ஆர் ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பரபரப்பான கவிதையினை பதிவிட்டிருந்தார். அதில், “கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும்;

விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும்; ஒரு பிடிமானம் இருக்கும்;

எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே; காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இதனை படித்தவுடன் ’இன்று வாலியின் பிறந்தநாளும் இல்லை. நினைவு நாளும் இல்லை. பின்னர் எதற்காக வைரமுத்து இந்த ட்வீட் செய்தார் என்று கேள்வி எழுந்திருக்கும். பலர் குழம்பி போயிருக்க கூடும்.

ஆனால் வைரமுத்து காரணத்தோடு தான் இன்று வாலியை நினைவுகூர்ந்து இந்த ட்வீட் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

பொன்னியில் செல்வன் முதல் பாகத்தை போன்றே, பாடல் எழுத வாய்ப்புக் கொடுக்காததுடன், மூத்த பாடலாசிரியர் என்ற முறையில் இன்று நடைபெறும் விழாவுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வரும் மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணியை குறிவைத்து வைரமுத்து இன்று வாலி குறித்து வரியாக உருகியதாக சமூகவலைத்தளத்தில் பேச்சு எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆருத்ரா முறைகேடு வழக்கில் அண்ணாமலை: பகீர் கிளப்பும் கே.எஸ்.அழகிரி

பொன்னியின் செல்வன் 2: இன்ஜினீயர்களை பாராட்டிய ரஹ்மான்

+1
0
+1
1
+1
0
+1
5
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *