சுதிப்தோ சென் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அதில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த முன்னோட்டம் கடும் எதிர்ப்புக்குள்ளானது. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தனிநபர், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட அடிப்படையில் இன்று தி கேரள ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமா என்கிற கேள்விகள் எழுப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க தி கேரள ஸ்டோரி படத்தை திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் தவிர்த்துள்ளனர்.

சென்னையில் 13திரைகளில் 17காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தையொட்டியுள்ள கோவையில் சில மால் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் சரத் சசி மற்றும் அஞ்சு அசோக் தம்பதிகளுக்கு நடைபெற்ற திருமணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மசூதியில் நடைபெற்ற இந்தத்திருமணம் முழுக்க முழுக்க இந்து சடங்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மணப்பெண்ணின் பெற்றோர் மசூதியின் நிர்வாகத்தை நாடியுள்ளனர்.
இதையடுத்து நிர்வாகம் சார்பில் 10சவரன் நகை மற்றும் ரூ.20லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டதுடன் மசூதியிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அந்த பள்ளிவாசலில் புரோகிதர் வரவழைக்கப்பட்டு சடங்குகள் நடத்தப்பட்டு மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுகிறார். தொடர்ந்து 1000பேருக்கு சைவ உணவும் பறிமாறப்படுகிறது.
மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் இந்த காணொலி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தத் திருமணம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி 3ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்வு முகநூலில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று தி கேரளா ஸ்டோரி படம் சம்பந்தமான சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ள சூழலில் ;காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற பக்கத்தில் ‘மற்றொரு கேரளா ஸ்டோரி’ என தலைப்பிடப்பட்ட இந்தக் காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” எனப்பதிவிட்டுள்ளார்.
இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் மதம்மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகக் கூறி ‘திகேரளா ஸ்டோரி’ படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதிவு பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
இராமானுஜம்
‘காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே’: அமைச்சர் பொன்முடி