சில படங்களைப் பார்க்கும்போது, ஏற்கனவே பார்த்தது போன்று தோன்றும். சில படங்கள் இனிமேல் பார்க்கவே கூடாது என்ற பட்டியலில் சேரும் தகுதியைப் பெறும். இன்னும் சில படங்களோ, ‘இதை ஏன் பார்க்கிறோம்’ என்ற கேள்வியை எழுப்பும். சில நேரங்களில் இதையெல்லாம் ஏன் தயாரித்தார்கள் எனும் எண்ணம் பூதாகரமாகும்.
கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உட்படப் பலர் நடித்துள்ள ‘ராயர் பரம்பரை’ படத்தைப் பார்த்தபிறகு, மேற்சொன்ன அனைத்தும் வரிசைக்கிரமமாக நம் மனதில் அணிவகுத்தன. அந்த முடிவை நோக்கித் தள்ளுவது எது என்பதை விளக்கப் படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்தாக வேண்டும்.
‘ஸ்ட்ரிக்ட்’ ராயர்!
’ஒரு ஊர்ல ராயர்னு ஒருத்தர் இருந்தாரு. அவருக்குக் காதல்னாலே பிடிக்காது. ஏன்னா, அவரோட தங்கச்சி ஒருத்தரோட ஓடிப் போயிட்டாங்க. அதனால, ஊர்ல யாருமே காதலிச்சிடக் கூடாதுங்கறதுல கண்டிசனா இருக்காரு.
அப்படிப்பட்ட ராயருக்கு ஒரு பொண்ணு இருக்குது. அந்தப் பொண்ணுக்கு 18 வயசாகும்போது காதல் கல்யாணம்தான் நடக்கும்னு உறுதியா சொல்றாரு குடும்ப ஜோசியர். அதுவும் ராயரோட சம்மதத்தோட நடக்கும்னு சொல்றாரு.
அதுக்காகவே, அந்த ஊர்ல எந்தெந்த பசங்களுக்கெல்லாம் காதல் கல்யாணம் நடக்கும்னு ஜாதகம் பார்த்து அவங்களை வெளிநாட்டுக்கு ‘பேக்’ பண்ணி அனுப்பிடுறாரு ராயரு. அதையும் மீறி அந்த பொண்ணு ஒருத்தரை காதலிக்கிறாங்க. அவரையே கல்யாணம் பண்ணிக்கற முடிவுல, வீட்டை விட்டு ஓடி வந்துடுறாங்க. அதுக்காக ரெண்டு பேரும் கோயில், போலீஸ் ஸ்டேஷன், ரிஜிஸ்டர் ஆபீஸ்னு எங்கயும் போய் நிக்கலை. அதுக்குப் பதிலா சாயங்காலம் 3 மணி வரைக்கும் வெயிட் பண்றாங்க. அந்த கேப்ல, ராயரு அவங்க ரெண்டு பேரையும் தேடி ஊர் முழுக்க அலையறாரு. கடைசியா 3 மணி ஆகுறப்ப, ராயர் கண்ணுல அவங்க சிக்குறாங்க? அதுக்கப்புறம் என்ன நடந்ததுங்கறதுதான் கிளைமேக்ஸ்’ என்று யாரோ ஒருவர் நம்மிடம் கதை சொன்னால் எப்படியிருக்கும்?
ஆங்காங்கே சில அபத்தங்கள் இருந்தாலும், ஒரு சுவாரஸ்யமான சினிமா பார்த்த அனுபவம் கிடைக்குமே என்றுதானே தோன்றும். ’ராயர் பரம்பரை’ திரைக்கதையும் அப்படித்தான் நம்பிக்கையூட்டும்விதமாகத் தொடங்குகிறது. நிமிடங்கள் ஆக ஆக, ‘லொள்ளு சபா’ அல்லது ‘கலக்கப்போவது யாரு’ உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியின் படப்பிடிப்புத்தளத்திற்கு வந்துவிட்டோமா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக்கொள்ளும் அளவுக்குத் திரை முழுக்க ‘வசனம்’ மழை போல நிரம்புகிறது. அவற்றில் சில வரிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன என்பதே ஆறுதல் தரும் விஷயம்.
ரொம்பப் பழைய திரைக்கதை!
மேலே சொன்ன கதையில் ராயராக நடிப்பவர் ஆனந்தராஜ் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. அவரது மகளாக சரண்யாவும், அவரைக் காதலிப்பவராகக் கிருஷ்ணாவும் தோன்றுகின்றனர். நாயகன் நாயகி இவர்கள்தான் என்றபோதும், சம்பந்தமே இல்லாமல் கிருத்திகா, அன்சுலா தவான் இருவரும் கிருஷ்ணாவைச் சுற்றி வந்து, அவர் மேலே விழுந்து பிறாண்டுகின்றனர். நாயகியைக் காதலிப்பது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாமல் இருக்க ஒரேநேரத்தில் இவ்விரு பெண்களையும் காதலிப்பதாக நாயகன் நாடகமாடுவதுதான் அதற்குக் காரணமாம். நாயகி அதைப் பார்த்து, சினிமாத்தனமாக கூட கோபப்பட மாட்டாராம். ‘ஏண்டாப்பா இப்படியொரு கேரக்டரைசேஷனே எங்கயிருந்து புடிக்கறீங்க’ என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
’ஊருக்கு வேட்டைக்காரன் புதூர்னு பேரு வச்சீங்களே, பேருக்காவது ஜூனியர் ஆர்ட்டிஸ்டை நடமாட விடலையா’ என்று கேட்கும் அளவுக்குத் திரையில் ஒரு கிராமம் காட்டப்படுகிறது. வீடுகள் குறைவு என்றபோதும், நாயகன் நடத்தும் இசை வகுப்பில் பத்து இருபது குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களோடு நாயகியும் பர்தா அணிந்து அமர்ந்திருக்கிறார்.
நாயகனுக்கும் அவரது நண்பருக்கும் வீடு வாடகைக்குத் தந்த உரிமையாளரோ (அவரே படத் தயாரிப்பாளர் என்பது உப தகவல்), ‘நாயகன் யாரைக் காதலிக்கிறார்’ என்பதைக் கண்டறிவதையே தன் வேலையாகக் கொண்டிருக்கிறார். நாயகனின் நண்பர் பெயர் அன்வர் (கல்லூரி வினோத்) என்பதால், பர்தா அணிந்த பெண் அவரையே காதலிப்பதாக எண்ணுகிறார் அந்த ஹவுஸ் ஓனர்.
காதலர்களைப் பிரிப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கும் சாந்தமூர்த்தி (மொட்டை ராஜேந்திரன்), அதற்காகவே ஒரு கட்சியை நடத்துகிறார். சில அல்லக்கைகளையும் உடன் வைத்துக்கொண்டு திரிகிறார். அந்தக் கட்சியில் சேர்ந்து, அவருக்கு உதவியாக இருப்பதாக நாயகன் ஏமாற்றுவது ஒரு கிளைக்கதை.
ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராயரை மீறி, அவரது மகள் ஒருவரைக் காதலிப்பது எப்படி? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது போல விரிகிறது இன்னொரு கிளைக்கதை. இரண்டுக்கும் நடுவே, ராயரை விட்டுப் பிரிந்த சகோதரி என்னவானார் என்பது வேறு தனியே சொல்லப்படுகிறது.
அத்தனை விஷயங்களையும் அரதப்பழசான காட்சிகளுக்குள் அடைத்து, ரொம்பவே பழைய திரைக்கதையொன்றைத் தந்திருக்கிறார் இயக்குனர் ராம்நாத். அதனைக் காற்று படுமாறு வைத்தால், நிச்சயம் நெடி ஏறும். அந்தளவுக்குத் தூசி படர்ந்த காட்சிகளும் வசனங்களும் காட்சியாக்கமும் நம்மைப்பாடாய் படுத்துகின்றன. உண்மையைச் சொன்னால், ஒரே டிக்கெட்டில் ஓராயிரம் சினிமா பார்த்த எபெக்டை உண்டுபண்ணுகிறது ‘ராயர் பரம்பரை’.
உருப்படியான விஷயம்!
‘ராயர் பரம்பரை’யில் ஆனந்தராஜையும் மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகரையும் காமெடி வில்லன்களாக காட்டுகிறார் இயக்குனர். அதில் தவறேதுமில்லை. நிச்சயமாக, படம் உருவான காலத்தைக் கணக்கில்கொண்டால் அது பாராட்டத்தக்க அம்சமே! பாவா லட்சுமணன், சேஷு மற்றும் மொட்டை ராஜேந்திரன் உடன் திரிபவர்கள், தொண்ணூறுகளில் வந்த காமெடி பட அடியாட்களை நினைவூட்டுகின்றனர்.
ராயரை ‘ட்ராயர்’ என்று ராஜேந்திரன் அழைப்பது உட்பட மிகச்சில காட்சிகள் நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல, கிளைமேக்ஸில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ ராமராஜன் காஸ்ட்யூமில் வந்து கலகலப்பூட்டுகிறார் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்.
மூன்று நாயகிகள் போதாது என்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நம்மைக் கவர்ந்த ஷாலு ஷம்முவைச் சகிக்க முடியாத அளவுக்குத் திரையில் காட்டுகிறது ‘ராயர் பரம்பரை’.
இது ஒரு காமெடி படம் என்பது கூடத் தெரியாமல், நாயகனாக வரும் கிருஷ்ணாவும் நாயகியாக வரும் சரண்யாவைத் திரையில் காதலைப் பொழிகின்றனர். ஒருபடி மேலேறி, கிருஷ்ணா ஆக்ஷன் காட்சிகளில் அடியாட்களைக் காற்றில் பறக்க விடுகிறார். அனைத்தும் ஒன்று சேரும்போது, மொத்தப் படமும் ‘ஸ்பூஃப் ’ ஆக மாறியிருக்கிறது. ஆனால், இயக்குனர் முதல் படத்தில் பணியாற்றிய ஒருவர் கூட அதனை உணரத் தலைப்படவில்லை. அது நிகழ்ந்திருந்தால், மிர்ச்சி சிவாவுக்குப் பதிலாக கிருஷ்ணாவின் நடிப்பில் மலர்ந்த ‘தமிழ்ப்படம் 3’ ஆக இது மாறியிருக்கும்.
படத்தில் பாடல்கள் ஆங்காங்கே அதன்போக்கில் போகின்றன. பின்னணி இசை பற்றித் தனியே சொல்ல எதுவுமில்லை. ஆனால், பின்பாதியில் இடம்பெற்ற ‘அரபுநாட்டு ஈச்சமரம்’ மட்டுமே மனதைக் கவரும் ஒரேயொரு உருப்படியான விஷயமாகத் தென்படுகிறது. அதற்காகவே இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம் என்று யோசித்தால், சரியாக அதேநேரத்தில் ‘இட்டிலிக்கு மாவு ஆட்டையிலே என்னையும் சேர்த்து ஆட்டிப்புட்டா’ பாடல் நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு, படத்தொகுப்பாளர் சசிகுமார் உட்படப் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக்கலைஞர்கள் என்று பலரும் இதில் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர். திரைக்கதை ட்ரீட்மெண்ட் எப்படியிருக்க வேண்டும் என்பதை இயக்குனரோடு சேர்ந்து முடிவு செய்யாமல், அனைவரும் படப்பிடிப்புத்தளத்தில் தேமேவென்று தங்களது வேலையைப் பார்த்திருக்கின்றனர். அதன் விளைவே, திரையில் நாம் காணும் ‘ராயர் பரம்பரை’ திரைப்படம்.
உண்மையைச் சொன்னால், இதே கதையை விழுந்து புரண்டு சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு நல்ல திரைக்கதையுடன் தந்திருக்க முடியும். தவறுக்கு யார் காரணமாக இருந்தாலும், தியேட்டரில் அனைத்துப் பழியும் இயக்குனரின் தலை மீதே படிகின்றன. அந்தக் கணத்தில், புதிதாகப் படம் தயாரிக்க வருபவர்களுக்கான பாடமாக மாறுகிறது ‘ராயர் பரம்பரை’.
உதய் பாடகலிங்கம்
‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’: பிரியாணி கடையைக்கு பூட்டு!
குறையும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள்!
இன்று முதல் பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு: எதற்கு… எவ்வளவு?