நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆபாசமாக சித்தரித்து பரப்பப்பட்ட அந்த வீடியோவால் வருத்தமடைந்ததாக ராஷ்மிகா மந்தானா தெரிவித்திருந்தார். வேறு பெண்ணுக்கு இதுபோன்று நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அதுபோன்று, மற்றொருவரது உடலுடன் ஒருவரின் முக அமைப்பை மட்டும் மாற்றி இப்படி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானால் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் கொண்ட பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொந்தளித்தனர்.
பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் இதற்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று (நவம்பர் 6) இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுபோன்ற விவகாரம் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
ஒருவரை போல இன்னொருவர் படத்தை மாற்றி வெளியிடக்கூடாது என்பது சட்டவிதி. இத்தகைய விதிமீறலில் தங்கள் பயனாளர்கள் யாரும் ஈடுபடாமல் இருப்பதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். இதுபோல ஒருவரது படத்தை மார்ஃபிங் செய்து விட்டதாக புகார் வந்தால் 24 மணி நேரத்திற்குள் அந்த வீடியோ நீக்கப்பட வேண்டும்.
விதிமீறலில் ஈடுபட்டு படத்தை மார்பிங் செய்து மோசடியில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் ராஷ்மிகா வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டது யார் என்றும் மத்திய அரசு விசாரணையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா