சத்யராஜின் ‘பிரம்மா’வை நினைவூட்டுகிறது..!
காவல் துறை விசாரணைக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளின் உருவங்களை வரைவதற்கு ஓவியர்களைப் பயன்படுத்தும் வழக்கம் உலகெங்கிலும் உண்டு. அதில் கொஞ்சம் ‘பேண்டஸி’யை கலந்து, புகைப்படத்தில் இருக்கும் நபர் பல ஆண்டுகள் கழித்து எப்படியிருப்பார் என்று அப்படியொரு ஒரு ஓவியர் வரைவதாக, கே.சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘பிரம்மா’ படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அதனை நினைவூட்டும் வகையில், வைபவ்வின் பாத்திரத்தைக் காட்டியது ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் ட்ரெய்லர். அது மட்டுமல்லாமல், இது வைபவ்வின் 25வது படம் என்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
சரி, படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா?
என்ன நடக்குது..?
சென்னை மாதவரம் அருகேயுள்ள ஏரியொன்றில் ஒரு பெண் பிணம் கிடைக்கிறது. தடயவியல் நிபுணர்களே திணறும் வகையில், அதன் முகம் உருக்குலைந்துள்ளது. அதனால், ’இறந்து போனது யார் என்று கண்டறிவதற்காகச் சிவாவை வரவழையுங்கள்’ என்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (பத்மன்).
எத்தனை சிதைவுகள் இருந்தாலும், இந்த முகம் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கணித்து வரையும் ஆற்றல் பெற்றவர் சிவா (வைபவ்). அது மட்டுமல்லாமல், விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு ‘க்ரைம் ஸ்டோரி’யையும் எழுதிக் காவல் துறையினருக்குத் தருகிறார்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்ற கனவோடு வாழ்ந்தவர் சிவா. ஒரு பெண் (சரஸ் மேனன்) வந்தபிறகு, அவரது வாழ்வில் எல்லாமே மாறுகிறது. காதல், கல்யாணம் என்று செல்லும் அவரது வாழ்க்கைப் பயணம் திடீரென்று நிகழ்ந்த ஒரு விபத்தால் தடம்புரள்கிறது.
அப்போது முதல் இப்போது வரை, அவருக்குத் தன் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் நினைவில் இல்லை. எப்போதும் உடனிருக்கும் உதவி இயக்குனர் ஒருவர், அவருக்கு அரணாக விளங்குகிறார்.
அப்படிப்பட்ட சிவா, தான் வரைந்து தந்த பெண் ‘காணாமல் போனவர்கள் பட்டியலில்’ இல்லாதது கண்டு துணுக்குகிறார். அதன் தொடர்ச்சியாக, மாதவரம் காவல்நிலைய வாசலில் அட்டைபெட்டியொன்றில் சில உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. அதோடு, பாதி எரிந்தவாறு ஒரு முகமூடியும் உள்ளது. அருகிலுள்ள வேறு பகுதிகளிலும் அது போன்ற அட்டைப் பெட்டிகள் கிடைக்கின்றன.
அவற்றில் இருக்கும் உடல் பாகங்கள் மூன்று வெவ்வேறு நபர்களுடையது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ராஜேந்திரன், தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்று உணர்கிறார். உடனடியாகச் சிவாவை அழைத்து, இந்த வழக்கு விசாரணையில் இனிமேல் தலையிட வேண்டாம் என்கிறார். அடுத்த நாளே அவர் காணாமல் போகிறார். அதையடுத்து, அந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படுகிறது.
ராஜேந்திரன் இடத்திற்குப் புதிதாக இந்துஜா (தான்யா ஹோப்) எனும் ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணைக்கு சிவா உதவுகிறார்.
ஏற்கனவே கிடைத்த பெண் பிணம் ‘எம்பால்மிங்’ செய்யப்பட்டு உள்ளுறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது ஆய்வில் தெரிய வருகிறது. அது போன்று வேறு இடங்களில் பிணங்கள் நீர்நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டனவா என்று ஆராயப்படுகிறது. அதன் முடிவில், நிறைய பிணங்கள் கிடைத்தது தெரிய வருகிறது.
அந்த விஷயத்தைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அமரர் ஊர்தி ஓட்டுநர்களை நோக்கி விசாரணை திரும்புகிறது. அதில் ஒருவர், ஏற்கனவே கிடைத்த முகமூடியோடு சம்பந்தப்பட்டவர். புதைக்கப்பட்ட பிணமொன்றைத் தோண்டியெடுத்து தனது வாகனத்தில் வைத்து அவர் கொண்டுபோவது சிசிடிவி பதிவொன்றில் தெளிவாகத் தெரிய வருகிறது.
அதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடிக்கச் செல்கின்றனர் போலீசார். ஆனால், அவர் தப்பியோடுகிறார். அடுத்தநாள் காலையில், அட்டைப்பெட்டியொன்றில் அவரது முகம் மட்டும் எரிந்த நிலையில் கிடைக்கிறது.
அப்படியென்றால், அந்த கொலைகளுக்குப் பின்னிருப்பது இன்னொரு நபரா? தொடரும் விசாரணையில் கொலையான நபர் யார் என்பதும், அவர் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரிய வருகிறது. கூடவே, புதைக்கப்பட்ட பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டு கடத்தப்பட்டதற்கான காரணமும் தெரிய வருகிறது. அது என்ன என்பது நம்மை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
அதுவே படத்தின் யுஎஸ்பி என்று இயக்குனர் முடிவு செய்தது எல்லாம் சரிதான். ஆனால், மேற்சொன்ன விஷயங்கள் தெளிவாகத் திரையில் நிறையாமல் நம்மைக் குழப்புவதுதான் ‘ரணம் அறம் தவறேல்’ சந்திக்கும் முக்கியப் பிரச்சனை.
நல்ல தொடக்கம்!
படத்தின் முதல் ஷாட்டிலேயே மொத்தக் கதையின் சாராம்சம் தென்பட வேண்டும் என்று ஒரு ‘தியரி’ உண்டு. அந்த வகையில் ஒரு உயரமான கட்டடத்தில் இருந்து நகரத்தின் விஸ்தாரத்தை நாயகன் வைபவ் பார்ப்பதில் இருந்து படத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப். அதையடுத்து வரும் காட்சிகளும் ‘செறிவாக’த் திரையில் வெளிப்படுகின்றன.
ஆனால், ஏரியில் கிடைக்கும் பிணமும் எரிந்த நிலையில் கிடைக்கும் உடற்பாகங்களும் குறித்தான போலீசாரின் விசாரணை ஒரே திசையில் திரைக்கதையை நகர்த்தவில்லை. அந்த இடத்தில் தொடங்கும் குழப்பம், படம் முடிந்த பின்னும் கூடத் தொடர்கிறது.
மேற்கத்திய நாடுகளில் ‘மார்ச்சுரி’யைப் பின்னணியாகக் கொண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில், அந்தச் சூழல் தெளிவாகக் காட்டப்படும். நம்மூர் ‘சென்சார் போர்டு’ நிச்சயம் அதனை அனுமதிக்காது. அது தெரிந்தும், இப்படியொரு கதையை இயக்குனர் ஷெரிஃப் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சர்யம்தான்.
படத்தில் சில ஷாட்கள் அருவெருப்பைத் தரும் அளவுக்குத் திரையில் காட்சியாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் திரைக்கதை தெளிவாக அமையவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.
போலவே, அந்த பிணங்கள் என்னவாகின்றன என்பதைத் திரையில் சொல்ல ஒரு நடிகையின் கதையைச் சொல்கிறார் இயக்குனர். அதனைக் கேட்டு முடித்ததும், நமக்கு அந்த நடிகை மீது அனுதாபம் ஏற்பட வேண்டும். ஆனால், அது வராத அளவுக்கு அக்காட்சி வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தை மேலும் பலவீனமாக்குகிறது.
கதையில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் மொத்த திரைக்கதையோடும் ஒட்டாமல் தனியே தெரிகின்றன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்னவானார்கள் என்பதைப் போதிய தகவல்களோடு திரையில் சொல்வதிலும் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.
அதேநேரத்தில், ஒரு கதையாக இது மிகவும் சுவாரஸ்யமிக்கது. ‘த்ரில்லர்’ வகைமைக்கு மிகவும் ஏற்றது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
விழலுக்கு இறைத்த நீர்..!
‘ரணம் அறம் தவறேல்’ படத்தில் பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு, மணிமொழியன் ராமதுரையின் கலை வடிவமைப்பு, அரோல் கரோலியின் பின்னணி இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் திரையோடு நம்மைப் பிணைக்கின்றன. ஆனால், முனீஸின் படத்தொகுப்பும் இயக்குனர் ஷெரீஃபின் திரைக்கதையும் அதற்குத் தடை போட்டு இப்படைப்பை விழலுக்கு இறைத்த நீராக மாற்றியிருக்கின்றன.
வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோம்ப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பத்மன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நாயகிகளாக மூன்று பேர் இடம்பெற்றிருந்தாலும், போலீஸ் உடையில் விறைப்பாக வந்துபோவதோடு நின்றுவிடுகிறது தான்யாவின் பங்களிப்பு. வைபவ்வின் காதலியாக வரும் சரஸ் மேனனுக்கு டூயட் பாடவும், காதல் காட்சிகளில் புன்னகைக்கவும் மட்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அந்த வகையில், நந்திதாவின் பாத்திரம் மட்டுமே நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் வகையில் சேரும். அதற்கேற்ப, அவருக்கான காட்சிகள் அமைந்துள்ளது என்பது சிறப்பு. ஆனால், அந்த பிளாஷ்பேக் திரைக்கதையில் எந்த இடத்தில் ‘ஓபன்’ ஆக வேண்டும் என்பதை முடிவு செய்வதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர். அது, நந்திதா ஏற்ற பாத்திரத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.
குழந்தை நட்சத்திரம் பிரனதி அழகாக நடித்துள்ளார். ‘சாட் பூட் த்ரி’ போலவே இதிலும் இயல்பாக வந்து போயிருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் பத்மன் வில்லத்தனத்தைச் சரியாக வெளிக்காட்டியிருக்கிறார். அவரும் சரி; இன்னொரு வில்லனாக வரும் சக்தி சரவணன், அவரது மனைவி, மகளாக நடித்தவர்களும் சரி; திரைக்கதையில் மிகச்சரியான இடத்தில் காட்டப்பட்டிருந்தால் போதுமான தாக்கத்தை இக்கதை உருவாக்கியிருக்கும்.
அது மட்டுமல்லாமல், நந்திதா மற்றும் வில்லன் கோஷ்டி அனைவரையுமே இரண்டாம் பாதியில் தான் காட்டுகிறார் இயக்குனர். அதுவே, ‘யார் இது புதுசா இருக்காங்க’ எனும் எண்ணம் நமக்குள் தோன்றக் காரணமாகிறது.
இவர்களைத் தாண்டி, ‘பிக்பாஸ்’ புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியும் இப்படத்தில் உண்டு. ஆனால், அவருக்கு வேறோருவர் ‘டப்பிங்’ கொடுத்திருப்பது அசூயையை உருவாக்குகிறது.
படத்தின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார் நாயகன் வைபவ். ‘சரோஜா’ படத்தின் வழியே தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து கோவா, ஈசன், மங்காத்தா வழியே நம் கவனம் ஈர்த்தார். அதன்பிறகு கப்பல், ஆம்பள, அரண்மனை 2, இறைவி, சென்னை 600028 பாகம் 2, சிக்சர், மலேசியா டூ அம்னீஷியா போன்ற படங்களில் கவனிக்க வைத்தார்.
ஆர்கேநகர், டானா, லாக்அப் போன்ற படங்கள் வைபவ்வின் ‘ஸ்கிரிப்ட்’ தேர்ந்தெடுக்கும் அறிவைச் சிலாகிக்க வைத்தன. ஆனால், அவை போதிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம், அவற்றின் திரைக்கதைகளில் இருந்த சறுக்கல்கள். அவற்றைத் தவிடுபொடியாக்கிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. ஆதலால், இனியாவது அந்த விஷயத்தில் வைபவ் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கான உதாரணங்களில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘ரணம் அறம் தவறேல்’.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: தீர்ப்பு எப்போது?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கடற்பாசி ஸ்வீட்
மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!