மக்கள் நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் ராமராஜன் 80, 90-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்த ராமராஜன் ஒருகட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். இதனால், 13 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் சமீபத்தில் சாமானியன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தை ராகேஷ் என்பவர் இயக்கினார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த மே 23 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும், ஒரே ஒரு தியேட்டரில் சாமானியன் படம் 100 நாட்கள் ஓடியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையரங்கில்தான் ராமராஜனின் சாமானியன் திரைப்படம் 100 நாள்கள் ஓடியுள்ளது. இந்த தியேட்டரில் முதன்முதலாக 100 நாள்களை தாண்டி, ஓடிய முதல் படம் சாமானியன்தான். ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்துக்கான டிக்கெட் விலையை 50 ஆக நிர்ணயித்திருந்தனர்.
இதனால் ஏராளமான சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சாமானியன் திரைப்படத்தை பார்த்தனர். இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழாவுக்கு நடிகர் ராமராஜன் சென்றிருந்தார். பின்னர், அருகில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் நாயகன் ரசிகர் மன்றங்களுக்கும் சென்ற அவர், அந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் ராமராஜன் சாமானியன் 100வது நாள் ஓடியதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவரிடத்தில் 100வது நாள் கேடயத்தையும் காட்டி வாழ்த்தும் பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வேகப்பந்து வீச்சாளர் என்பதை மறந்த மனோஜ் பிரபாகர்… அதிரடி மன்னன் கையில் இலங்கை அணி!
தனுஷ் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?