தொண்ணூறுகளில் தியேட்டர்களில் திருவிழாவை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று ‘ஆடி வெள்ளி’. இந்த படம் மீண்டும் உருவாகிறது என்பது நெடுங்காலமாகவே தமிழ் திரையுலகில் உலா வருகிறது. வெறும் தகவலாக மட்டுமல்லாமல் அது செயல்வடிவம் பெறவிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆம், ‘ஆடி வெள்ளி’ இப்போதைய சினிமா ரசனைக்கு ஏற்ப ‘ரீமேக்’ ஆகவிருக்கிறது. ஆனால், அப்படியென்ன அந்த படத்தில் இருக்கிறது என்று 2கே கிட்ஸ்கள் யோசிக்கலாம்!
வியத்தகு சாதனைகள்!
125 திரைப்படங்களை இயக்கியவர்; கதை வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மராத்தி, பெங்காலி, மலாய் மொழிகளில் படங்கள் தந்தவர்; தயாரிப்பாளர் சங்கம் போன்ற திரைத்துறை சார்ந்த அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்; சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர்.
இப்படிப் பல சிறப்புகள் இருந்தாலும், ‘திரையுலக ட்ரெண்ட்’டை நன்குணர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்பப் படங்களைத் தந்தவர் என்பதே அவரது நிரந்தர அடையாளம். அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திய காரணத்தாலேயே இன்றும் தமிழ் திரையுலகினரால் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார். அந்த சாதனையாளர், இயக்குனர் ராம.நாராயணன். ’ஆடி வெள்ளி’ – அவர் தயாரித்து இயக்கிய படங்களில் முதன்மையானது.
திரைப்படப் பாடலாசிரியராக அறியப்பட வேண்டும் என்பது தான் ராம.நாராயணனின் ஆரம்பகால ஆசை. அப்படித் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், எழுபதுகளின் இறுதியில் தனது நண்பர் எம்.ஏ.காஜா உடன் கைகோர்த்து ‘ராம் – ரஹீம்’ என்ற பெயரில் அறுபது நாள், ரகுபதி ராகவ ராஜாராம், மாந்தோப்பு கிளியே, தெருவிளக்கு ஆகிய படங்களுக்குக் கதை வசனம் எழுதினார். துரை, ரா.சங்கரன், காஜா இயக்கத்தில் அவரது எழுத்துகள் திரை உருவம் பெற்றன.
எழுத்தாளராக மட்டுமல்லாமல், அந்த காலகட்டத்திலேயே ஒரு தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார் ராம.நாராயணன். மீனாட்சி குங்குமம், வேலும் மயிலும் துணை, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை போன்ற படங்களைத் தயாரித்தார். அதில் ‘மீனாட்சி குங்குமம்’ படத்தை இயக்கியவரின் பெயர் காரைக்குடி நாராயணன் என்றே அறியப்படுகிறது. அதனை இயக்கியது ராம.நாராயணன் தானா என்று தெரியவில்லை.
என்றாலும்ம், ’சுமை’யே அவரது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமாக அறியப்படுகிறது. அன்று தொடங்கி இறக்கும் தருவாய் வரை தொடர்ந்து படங்களைத் தயாரிப்பதும் இயக்குவதுமாக வாழ்ந்தார் ராம.நாராயணன்.
ட்ரெண்டுக்கு ஏற்றவை!
ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகைமை சார்ந்த அமைந்த படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறும். அந்த பாணியை உள்வாங்கிக்கொண்டு, அதே போன்ற படங்களைத் தருவதில் ராம.நாராயணன் கில்லாடி.
எழுபதுகளில் விஜயகுமாரின் ‘காதல் நாயகன்’ அந்தஸ்தை பயன்படுத்தி ‘மீனாட்சி குங்குமம்’ தந்தார். சிவகுமாரை வைத்து ‘துர்கா தேவி’யைத் தயாரித்தார். எண்பதுகளில் துரை இயக்கத்தில் ‘பசி’ வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றது போலவே, ‘சுமை’யும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்தில் முதன்முறையாகக் கங்கை அமரனை இசையமைப்பாளர் ஆக்கியது ராம.நாராயணன் தான்.
‘சிவப்பு மல்லி’யில் நாயகர்களான விஜயகாந்தையும் சந்திரசேகரையும் புரட்சியாளர்களாகக் காண்பித்தார்; அதற்கடுத்தாற்போலவே, இளம் காதலர்களின் குறும்புகளைக் காட்டும் ‘இளஞ்சோடிகள்’, ‘சின்னஞ்சிறுசுகள்’ படங்களைத் தந்தார். அந்தக்காலத்தில் நடிகை ராதாவை ஆராதித்தவர்களுக்காகவே ‘கண்ணே ராதா’ படத்தை உருவாக்கினார். பிரபுவின் நாயக அவதாரத்தைக் கொண்டாடும் வகையில் ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’யைக் கண்ணில் காட்டினார்.
மோகன், அர்ஜுனை வைத்து தொடர்ந்தாற்போல நகைச்சுவை கலந்த ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் படங்களை இயக்கியிருக்கிறார். அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத வகையில், ’வேங்கையின் மைந்தன்’ போல ஆக்ஷன் படமொன்றில் விஜயகாந்த் உடன் கைகோர்த்திருக்கிறார். ‘மலையூர் மம்பட்டியான்’ பாணியில் ‘கரிமேடு கருவாயன்’ படத்தை வார்த்தெடுத்தார்.
பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் பிரபுவை ‘மேகம் கருத்திருக்கு’ படத்தில் நடிக்க வைத்திருந்தார். எஸ்.வி.சேகர், எஸ்.எஸ்.சந்திரன் கூட்டணியில் ‘சகாதேவன் மகாதேவன்’ படத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். குழந்தைகள் தியேட்டருக்குப் படையெடுக்கும் வகையில் ‘துர்கா’வில் ஷாமிலியை அறிமுகப்படுத்தினார். அது போன்ற படங்களின் வழியாக, ‘தேவர் பிலிம்ஸ்’ பாணியில் குரங்கு, நாய், யானை, பாம்பு என்று விலங்குகளையும் திரையில் பேச வைத்தது அவருடைய இன்னொரு சாதனை.
அந்த வரிசையில் அவர் தந்த படமே, 1990இல் வெளியான ‘ஆடி வெள்ளி’. அம்மன் கோயில்களுக்குச் செல்லும் பெண்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இந்த டைட்டில் அமைந்தது. படத்திலும் அதற்கேற்பக் காட்சிகளை அமைத்திருந்தார் ராம.நாராயணன். குட்டி யானை உடன் சீதா வருவதும், பாம்பு ஆக்ஷனில் இறங்குவதும், கிளைமேக்ஸில் கம்ப்யூட்டரைக் கொண்டு அமானுஷ்யத்தை அடக்க முயற்சிப்பதுமாகப் பல காட்சிகள் ரசிகர்களை வசீகரித்தன.
சங்கர் – கணேஷ் இசையில் ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றாண்டா’, ‘சொன்ன பேச்சைக் கேட்கணும்’, ‘வண்ண விழியழகி’ பாடல்கள் கொண்டாட்டத்தை ஊட்டியது என்றால் ‘ஆயி மகமாயி’ பாடல் தீவிர ரசிகைகளைப் பரவசப்படுத்தியது. சீதா, அருணா, நிழல்கள் ரவி, சந்திரசேகர், ஒய்.விஜயா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு வெற்றியைப் பெற்றது.
தொடர்ச்சியாக தைப்பூசம், ஆடி விரதம், சிவராத்திரி என்று பல படங்களை இயக்கினார் ராம.நாராயணன். 2000க்குப் பிறகும் கூட ‘ராஜகாளியம்மன்’, ‘பாளையத்து அம்மன்’ என்று அவ்வரிசையில் நிறைய படங்கள் தந்தார்.
அவற்றுக்கு மூலமாகத் திகழும் ‘ஆடி வெள்ளி’ திரைப்படமே தற்போது மீண்டும் உருவாகவிருக்கிறது. அதே கதையை இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப தயாரிக்கவிருக்கிறார் ராம.நாராயணன் மகனான ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி. அது மிகச்சரியாக அமைந்தால், இது ‘பான் இந்தியா’ படமாக மாறவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது.
நீண்டகாலத் திட்டம்!
ஆடி வெள்ளி படத்தை ரீமேக் செய்யப்போவதாக, 2018 வாக்கிலேயே சில தகவல்கள் வெளியாகின. என்றாலும், அது நீண்டகாலமாக வெறும் திட்டமாக மட்டுமே இருந்தது. தற்போது அது செயல்வடிவம் பெறவிருக்கிறது.
‘காந்தாரா’, ‘செவ்வாய்கிழமை’ போன்ற படங்களில் இடம்பெற்றிருந்த அமானுஷ்யத்தன்மை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது அவை இப்படத்திற்கான தூண்டுதலாக அமைந்திருக்கலாம். புதிய படத்தில் சீதா வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்க வாய்ப்புண்டு.
மிகக்குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களைக் கவரும்விதமாகப் படத்தை உருவாக்கும் வித்தை கைவரப்பெற்றவர் ராம.நாராயணன். ஆடியில் அறிவிப்பை வெளியிட்டு, ஆவணிக்குள் ஒரு படத்தை முடித்துவிடும் வல்லமை கொண்டவர். அதேநேரத்தில், ’மெர்சல் போன்ற படங்கள் மூலமாகப் புதிய தலைமுறை ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ். இடைப்பட்ட கால இடைவெளியில் கைக்கொண்ட அனுபவங்களோடு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக இந்த ‘ஆடி வெள்ளி’ அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
பின்குறிப்பு: ஆடி வெள்ளி படம் வெளியாகி, இன்று 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை!
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் நீடித்தால் தென்னிந்தியா தனிநாடாகும்: காங்கிரஸ் எம்.பி
தொடர் இழுபறி: ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்க ஆளுநர் அழைப்பு!