ராமர், அனுமான், இராமாயணம் : தற்கால சினிமாவின் கச்சாப்பொருளா?

Published On:

| By christopher

Ramayana raw material of contemporary cinema?

Ramayana raw material of contemporary cinema?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று (ஜனவரி 22) விமரிசையாக நடைபெற்ற பால ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின் மூலம் இந்திய அரசியலில் தனி நபர் சம்பந்தபட்ட மதவிவகாரங்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமானது என்கிற உளவியல் யுத்தம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கமர்சியல் சினிமாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தென்னிந்திய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஆன்மீகம் சார்ந்த திரைப்படங்களை வணிகம் சார்ந்து தயாரிக்க தொடங்கியுள்ளது.

இராமாயண காவிய கதையை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சி தொடர், திரைப்படங்கள் என இந்திய சினிமாவில் ஏற்கனவே பல தயாரிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது இராமாயண கதையில் முக்கிய கதாபாத்திரங்களான ராமர், அனுமன், லட்சுமணன் குறித்த திரைப்படங்களை வணிக நோக்குடன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தயாராகும் ஹனுமான் 2!

மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 அன்று தெலுங்கில் வெளியான ஹனுமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

பட வெளியீட்டின் போது விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 5 ரூபாய் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

அதன்படி  விற்பனையான 52, 28,211 டிக்கட்டுகள் மூலம் வசூலித்த 2,66,41,055 கோடி ரூபாயை ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக நேற்றைய தினம் அறிவித்தனர்.

அதே போன்று பிரம்மாண்டமான செலவில் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜையும் நேற்று நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளை ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பிரசாந்த் வர்மா பங்கேற்று தொடங்கியுள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, ஆசீர்வாதம் வாங்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம்,  உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன்,  முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும் என இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்.

மேலும் தெய்வத்தின் முன் நின்று ஹனுமான் 2 ஸ்கிரிப்டை காட்டும் புகைப்படமும் வெளியானது. படம் பற்றிய பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்

அதே போன்று கன்னட சினிமாவில் பிரபலமான சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில்,  ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ எனும் பெயரில் புதிய  திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்  நாளில்,  பெருமையுடன் அறிவிப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Image

கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு,  காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும் என கூறியுள்ளனர்.

இயக்குநர் அவதூத் இயக்கும்   ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பாக இருக்கும் என்கிறது படக்குழு.

இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன.  “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும்.

மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது படக்குழு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

’மய்யத்தின் 2 நிபந்தனைகள்… ஏற்காவிட்டால் தனித்துப்போட்டி’ : மவுரியா

தமிழ்நாடு: 2024 மக்களவைத் தேர்தல் தேதி எப்போது?