உதயசங்கரன் பாடகலிங்கம்
மீண்டும் பூரி ஜெகன்னாத்தின் ‘அட்ராசிட்டி’!
சில கமர்ஷியல் பட இயக்குனர்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத் தருவார்கள். அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ‘க்ளிஷேக்களின் குவியலாக’ சில படங்களைத் தந்து தோல்வி முகம் காண்பார்கள். மறுபடியும் மீண்டெழுந்து ‘ப்ரெஷ்’ஷாக ஒரு கமர்ஷியல் படமொன்றை ரசிகர்களுக்குப் பரிசளிப்பார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் இக்காரியத்தைச் செய்து வருபவர்களில் ஒருவர் தெலுங்குப் பட இயக்குனர் பூரி ஜெகன்னாத்.
தமிழில் வெளியான ‘தம்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘போக்கிரி’, ‘அயோக்யா’ படங்களின் மூலங்களைத் தந்தவர் இவரே. அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜுனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடர் தோல்விகளைத் தந்தபோது, அவர்களுக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்த பெருமை இவருக்குண்டு.
அந்த வரிசையில், ராம் போத்தினேனிக்கு ‘இஸ்மார்ட் சங்கர்’ அமையச் செய்தார் பூரி ஜெகன்னாத். அதன் இரண்டாம் பாகமாக, இப்போது ‘டபுள் இஸ்மார்ட்’ தந்திருக்கிறார்.
பூரி ஜெகன்னாத் பட வரிசையில் இது ‘ப்ரெஷ்’ஷான கமர்ஷியல் படமாக உள்ளதா அல்லது க்ளிஷேக்களின் பிறப்பிடமாக இருக்கிறதா?
’டபுள் இஸ்மார்ட்’ கதை!
‘இஸ்மார்ட் சங்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
கோடிக்கணக்கில் பணம் வருமிடங்களைத் தெரிந்துகொண்டு, அங்கு சென்று கொள்ளையடிப்பது, அதனைத் தடுப்பவர்களைக் கொல்வது என்றிருப்பவர் இஸ்மார்ட் சங்கர் (ராம் போத்தினேனி).
ஒரு கொலை வழக்கில் அவரைக் கைது செய்கிறது சிபிஐ. அந்த நடவடிக்கையின்போது, அவரது காதலி கொல்லப்படுகிறார். அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்க இஸ்மார்ட் சங்கர் துடிக்கிறார்.
அந்த நேரத்தில், முக்கியமான வழக்கொன்றில் சில விஷயங்களைக் கண்டறிந்த காரணத்திற்காகக் கொல்லப்படுகிறார் சிபிஐ அதிகாரியான அருண் (சத்யதேவ்). அவரது மூளையிலுள்ள நினைவுகள் இஸ்மார்ட் சங்கருக்கு அறுவைச்சிகிச்சை (இப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா என்று கேட்கக்கூடாது) வழியே மாற்றப்படுகிறது…
அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அருணின் நினைவுகளையும் சுயத்தையும் சமநிலைப்படுத்த முடியாமல் சங்கர் தடுமாறுகிறார். ஒருவழியாக அருணையும் தனது காதலியையும் கொன்றவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களை வேட்டையாடுவதுமாக அப்படத்தின் கிளைமேக்ஸ் அமைந்திருக்கும்.
முதல் பாகத்தில் இருந்த ‘நினைவுகள் பரிமாற்றம்’ எனும் விஷயத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, ‘கோங்குரா சட்னி’யாக ‘டபுள் இஸ்மார்ட்’ தந்திருக்கிறார் பூரி ஜெகன்னாத்.
கோடிகோடியாகப் பணம் இருக்குமிடங்களை அறிந்து, அவற்றை இஸ்மார்ட் சங்கர் கொள்ளையடிப்பதில் இருந்து இக்கதை தொடங்குகிறது.
முந்தைய பாகம் போலவே, இதிலும் நவநாகரிகப் பெண்ணான ஜன்னத்தை (காவ்யா தாப்பர்) சந்திக்கிறார் சங்கர். முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார்.
ஒருகட்டத்தில் தன்னைப் போலவே ஜன்னத்தும் குறி வைத்துப் பணத்தைக் கொள்ளையடிப்பதில் வல்லவர் என்று அறிகிறார். அவர்கள் இருவரும் கொள்ளையடிக்கும் பணம் பிக் புல் (சஞ்சய் தத்) உடையது. வெளிநாடுகளில் சுதந்திரமாகத் திரியும் பிக் புல், இந்தியாவில் தேடப்படும் நபராக இருக்கிறார்.
இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் பிக் புல் இந்தியா வருகிறார். இஸ்மார்ட் சங்கரைக் கடத்தி வந்து, அவருக்குத் தனது மூளையின் நினைவுகளை அறுவைச்சிகிச்சை மூலம் செலுத்த வேண்டுமென்று உதவியாளர் பெண்ட்லியிடம் (பானி ஜெ) கூறுகிறார். அதற்காக டாக்டர் தாமஸைப் (மாகரந்த் தேஷ்பாண்டே) பிடிக்கிறார் பெண்ட்லி. அவர் மூலமாக, இஸ்மார்ட் சங்கருக்கு பிக் புல்லின் நினைவுகளைச் செலுத்த ஏற்பாடாகிறது.
அவர்கள் திட்டமிட்டவாறு கனகச்சிதமாக இஸ்மார்ட் சங்கர் கடத்தப்படுகிறார். அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. மீண்டும் தனது நினைவுகளோடும் பிக் புல் நினைவுகளோடும் போராட ஆரம்பிக்கிறார் சங்கர். அப்போது, ‘இன்னும் நான்கு நாட்களுக்குத்தான் இந்த அவஸ்தை’ என்று அவரிடம் கூறுகிறார் பிக் புல்.
பிக் புல் ஏன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து அந்த அறுவைச்சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்? நான்கு நாட்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருக்கிறார்? அவரது நினைவுகளில் இருந்து இஸ்மார்ட் சங்கர் விடுபட்டாரா?
இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சித்திருக்கிறது ‘டபுள் இஸ்மார்ட்’. ஆனால், பதிலளித்த விதம் தான் நம்மைக் கடுப்பேற்றுகிறது.
உண்மையிலேயே அது ‘இஸ்மார்ட்’டாக உள்ளதா என்றால் நாம் அலறியடித்துக் கொண்டு ‘இல்லை’ என்று கதற வேண்டியிருக்கிறது. ’இஸ்மார்ட் சங்கர்’ எந்தளவுக்கு ‘ப்ரெஷ்’ஷான பொழுதுபோக்கு அம்சங்களைத் தந்ததோ, அதற்கு நேரெதிராக இருக்கிறது இப்படம்.
’அட்ராசிட்டி’ விஷயங்கள்!
எண்பதுகளில் வெளியான பல தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நாயகன் திருடனாகவும், நாயகி போலீஸ் ஆகவும் காட்டியிருப்பார்கள்.
என்னதான் ஸ்டைலிஷாக, சிறப்பான பின்னணி உடையவராக, சுயாதீனமானவராக நாயகி திரையில் தெரிந்தாலும், பேச்சிலும் செய்கையிலும் பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தி அவரைக் கவர்வார் நாயகன்.
நாயகியை நாயகன் ‘வெகுளி’ என்று நினைக்க, அவருக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு ‘நான் உன்னை விடப் பெரிய கேடி’ என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார் நாயகி. எதிர்ப்படும் பெண்களை எல்லாம் அவமரியாதையாக நோக்கினாலும், ‘அம்மா சென்டிமெண்ட்’ என்றால் உருகிவிடுவார் நாயகன்.
எத்தனையோ நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் வாய்த்தாலும், எவராலும் பிடிக்க முடியாத குற்றவாளியை நெருங்க இன்னொரு குற்றவாளியையே போலீசார் பயன்படுத்துவார்கள்.
வெளிநாடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வில்லன், ஒரு நெருக்கடி நிலையால் இந்தியாவுக்கு வருவார். ஆனால், அவரை வரவழைத்ததே நாயகன் தான் என்பது பின்னர் தெரிய வரும்.
அதையெல்லாம் விடப் பெரிய கொடுமையாக, ‘மெயின்’ கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் தன்னை ஒரு கலைவாணராக நினைத்துக்கொண்டு சில நகைச்சுவை நடிகர்கள் தனி ‘ட்ராக்’கில் திரைக்கதையில் தலைகாட்டுவார்கள். இது போன்ற எத்தனையோ ‘அட்ராசிட்டி’களை கமர்ஷியல் படங்களில் பார்த்திருப்போம்.
உண்மையில், இந்த விஷயங்கள் அனைத்தும் முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் வெளிப்பட்டபோது சுவையாகவே இருந்திருக்கும். ’வெற்றிப்படங்களில் இருப்பதை நாமும் பின்பற்றுவோம்’ என்று இறங்கும்போது அவை ‘க்ளிஷே’வாக மாறுவது இயல்பு.
அந்த வகையில், ‘டபுள் இஸ்மார்ட்’ படத்தில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் நிறைத்திருக்கிறார் பூரி ஜெகன்னாத். அதில் பல விஷயங்கள் அவரது முந்தைய படத்தில் இடம்பெற்றவை. குறிப்பாக, ‘போக்கிரி’க்கும் இப்படத்திற்கும் சில ஒற்றுமைகளைக் காண முடியும்.
மேலே சொன்னதைப் படிக்கும்போதே, இந்த படத்தில் லாஜிக் மீறல்களைப் பார்ப்பதென்பது கடல் உப்புநீராக இருக்கிறதா என்று சோதிப்பதற்குச் சமம் என்பது புரிந்திருக்கும்.
எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் பூரி ஜெகன்னாத், ’புதுமையைக் காட்டுகிறேன் பேர்வழி’ என்று அரதப்பழசான திரையனுபவத்தைத் தந்திருக்கிறார்.
அது வெளிப்படையாகத் தெரியாத வகையில் கியானி கியானெல்லி மற்றும் ஷ்யாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவும், கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பும், ஜானி ஷெய்க்கின் தயாரிப்பு வடிவமைப்பும் திரையில் ‘முலாம்’ பூசியிருக்கின்றன.
மணி சர்மாவின் இசையில் பாடல்களில் ‘சத்தம்’ அதிகம். அதேநேரத்தில், விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.
நாயகன் ராம் போத்தினேனி ‘மொஹல்’ ஸ்டைல் ஹேர்கட் மற்றும் தாடியுடன் திரையில் வலம் வருகிறார். அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனாலும், ‘எக்சர்சைஸ்’ செய்வது போல நடனமாடியிருப்பதும், அந்தரத்தில் பறந்து சண்டையிடுவதும், ‘ப்ரிட்ஜில் இருந்து ஆப்பிளை எடுத்து பாலைவன மணலில் உருட்டியெடுத்தாற் போல’ உள்ளன.
ஏ ப்ளஸ் சைஸ் மாடல்களை பின்னுக்குத் தள்ளும்விதமாகத் திரையில் தோன்றியிருக்கிறார் நாயகி காவ்யா தாபர். ஆனால், அவரைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்கு ஏதுவாகக் காட்சியமைப்போ, கதாபாத்திரச் சித்தரிப்போ இப்படத்தில் கொஞ்சம் கூட இல்லை.
வில்லனாக வரும் சஞ்சய் தத் நிலைமையோ இவர்களை விட மோசம். ‘தமிழ்’ படத்தில் வரும் ஆசிஷ் வித்யார்த்தி போலக் காட்டப்பட வேண்டிய ஒருவரை எல்லா படங்களிலும் சொல்லிவைத்தாற் போன்று ‘மாபியா’ தலைவனாகக் காட்டுவது உச்சபட்ச கொடுமை.
‘விலங்குகள், பறவைகள் இப்படத்தில் துன்புறுத்தப்படவில்லை’ என்பது போன்று ‘வட இந்திய நடிகர்களை இப்படத்தில் டான்களாக காட்டவில்லை’ என்று தனியாக ஒரு அறிவிப்பை ‘டைட்டில் கார்டில்’ இடம்பெறச் செய்வது ரசிகர்கள் இது போன்ற அபாயங்களில் இருந்து விலகி உஷாராக இருக்க வழி வகுக்கும்.
இவர்கள் தவிர்த்து பானி ஜே, கெட்டப் ஸ்ரீனு, சாயாஜி ஷிண்டே, மாகரந்த் தேஷ்பாண்டே, பிரகதி, ஜான்சி என்று சுமார் ஒரு டஜன் பேர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
போக்கா எனும் பாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் ஆலி நடித்திருக்கிறார். ஆபாசச் செய்கைகளையும் உச்சரிப்புகளையும் உதிர்ப்பதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவில்லை.
காமெடிக்கு தனி ட்ராக் என்பதே வழக்கொழிந்துவிட்ட நாட்களில் அதனை இதில் கையாண்டிருப்பது இயக்குனர் தன் நினைவுகளின் ஒரு பகுதியை இழந்துவிட்டாரா என்று ஐயப்பட வைக்கிறது.
படத்தைப் பார்க்கும்போதே, ‘சென்சார் போர்டில் இருப்பவர்கள் இவற்றைக் கவனித்தார்களா’ என்ற கேள்வி எழுகிறது.
விஷ விதைகள்!
‘இஸ்மார்ட்’ என்று உச்சரிப்பது தொடங்கிப் படம் முழுக்க நாயக பாத்திரம் தெலங்கானா வட்டாரத் தெலுங்கை வெளிப்படுத்துகிறது.
யதார்த்தம் சிறிதுமற்ற சினிமாத்தனம் திரையில் நிறைந்திருப்பதைக் காணும்போது, தமிழ் படங்களில் ‘ஏலேய்..’ என்றோ, ‘சொன்னாய்ங்க’ என்றோ நெல்லை, மதுரை வட்டாரத் தமிழை உச்சரிப்பது போலத்தான் இதிலும் தெலுங்கை பாடு படுத்தியிருக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.
சில கமர்ஷியல் படங்களில் சாதி, மதம் பெயரில் ‘விஷ விதைகள்’ தூவப்பட்ட நிலையில் இனம் சார்ந்த மோசமான சித்தரிப்பை இதில் கையாண்டிருக்கிறார் பூரி ஜெகன்னாத்.
சென்னையில் தனிநாடு கோரி போராட்டம் நடத்தப்படுவதாக, இதில் ஒரு காட்சி உண்டு. திரைக்கதையில் அந்த விஷயம் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளது.
கமர்ஷியல் படங்களில் இது போன்ற சித்தரிப்புகளை சீரியசாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றாலும், அது எல்லை மீறும்போது சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
அழுக்கான, கந்தலான, மோசமான நெடியைத் தருகிற ஒரு ஆடை மீது நிறமூட்டிகளையும் நறுமணத்தையும் தெளித்துவிட்டு அணியச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது ‘டபுள் இஸ்மார்ட்’.
ஒரு வெற்றிப் படத்திற்குப் பிறகு சில தோல்விப் படங்களைத் தருவது பூரி ஜெகன்னாத்தின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அதனை முன்கூட்டியே நமக்குத் தெரிவித்துவிட்டால் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை விரயமாகாமல் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
அதனைச் செய்வதற்குப் பதிலாக, ‘டபுள் இஸ்மார்ட்’டிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றியிருக்கிறார் பூரி.
சரி, இதனைப் பார்க்கும் சாதாரண ரசிகர்கள் என்ன செய்ய முடியும்? ‘குத்துங்க எஜமான் குத்துங்க, கமர்ஷியல் படம் எடுக்கறவங்கள்ல பாதிபேர் இப்படித்தான்’ என்று கதறத்தான் வேண்டியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன்: மிருகசீரிஷம் (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன்: ரோகிணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் -கிருத்திகை: (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் -பரணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன்: அஸ்வினி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
Comments are closed.