ஒரு ‘ஃபன்’ ரைடு போலாமா?!
ரொம்பவே மொக்கையான தெலுங்கு படங்களாக இருந்தாலும், அவற்றில் மிகச்சில காட்சிகளாவது ரசிக்கும்படியாக இருக்கும், சிரிக்கும்படியாக இருக்கும். சில காட்சிகள் ‘எப்புட்றா இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ என்று கேட்கும்படியாக இருக்கும். ’எல்லாமே என் படத்துல உண்டு’ என்று ‘கியாரண்டி’ தருபவர் தெலுங்கு இயக்குனர் பொயபட்டி சீனு. சமகாலத்தில் கமர்ஷியல் வெற்றிகளைப் பெற்ற தெலுங்கு படங்களில் என்னென்ன அம்சங்கள் சிறப்பாக இருந்தனவோ, தான் ஏற்கனவே வைத்திருக்கும் கதைகளில் அவற்றைச் சரியான அளவில் புகுத்தி வெற்றிகள் கண்டவர்.
அதனாலேயே, இரண்டாயிரத்துக்கு பிறகு சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ரவிதேஜா என்று முன்னணி நாயகர்கள் நடித்த பல படங்களின் கலவையாக அவரது படங்கள் தோற்றமளிக்கும். குறிப்பாக, பாலகிருஷ்ணாவை இயக்குவதென்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. அப்படி ‘அகண்டா’ என்ற சூப்பர்ஹிட்டை தந்த கையோடு, இளம் நாயகன் ராம் போத்தினேனி உடன் இணைந்து அவர் தந்திருக்கும் படம் தான் இந்த ‘ஸ்கந்தா’. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு இது வெளியாகியுள்ளது.
’ஜாலியா ஒரு ஃபன் ரைடு போலாமா’ என்று கிளம்புவது போல பொயபட்டி சீனு ‘ஸ்கந்தா’வில் காட்டும் உலகைப் பார்க்கச் சென்றால் நமக்கு எத்தகைய அனுபவம் கிடைக்கிறது?
என்னமா யோசிக்கிறாங்க..!
காதல், மோதல், வெட்டு, குத்து, ஆட்டம், பாட்டம் என்ற வழக்கமான வளையத்துக்குள் வலம் வந்தாலும், திரைக்கதை ஆரம்பிக்கும் இடத்தில் சில வித்தியாசங்களை அரங்கேற்றுவதன் மூலமாக நம் கவனத்தைக் கவர்வது பொயபட்டி சீனுவின் பாணி. அது மட்டுமல்லாமல், முதல் படமான ‘பத்ரா’ முதல் ‘அகண்டா’ வரை அவரது அனைத்து படங்களிலும் உக்கிரமான வன்முறையைக் கொண்ட சண்டைக்காட்சிகளும் உண்டு.
‘எல்லாவற்றிலும் ஒரு பிடி அதிகம்’ என்கிற பொயபட்டி சீனுவின் இந்த பார்முலா, இளம் நாயகனான ராம் போத்தினேனிக்கு செட் ஆகுமா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால், அவர் இரண்டாயிரத்துக்குப் பிறகு நடிக்க வந்த அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, நானி, நிதின் வரிசையில் இடம்பிடிப்பவர். இன்றைய தலைமுறையினருக்குப் பிடிக்கும் வகையில் கமர்ஷியல் படங்களைத் தர வேண்டுமென்று நினைப்பவர்.
அவரது ’மைண்ட்வாய்ஸ்’ அறிந்து இளசுகளைக் கவரும்விதமாக பப் கலாசாரத்தில் ஒரு பாடல், நாயகியை மெலிதாக ‘டீஸ்’ செய்யும் காட்சிகள், தெனாவெட்டான குணாதிசயம் கொண்ட நாயக பாத்திரம் என்று திரைக்கதையில் வரும் பெரும்பாலான இடங்களைக் கவனமாகக் கோர்த்திருக்கிறார் சீனு. அது மட்டுமல்லாமல், நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்ற தொழிலதிபர் பாத்திரத்தின் பின்னணியை ஒரு முன்னாள் பிரபலத்தை நினைவூட்டும் வகையில் வடித்திருக்கிறார். அனைத்துக்கும் மேலே தெலங்கானா, ஆந்திரா முதலமைச்சர்களின் மகள்களை நாயகன் கடத்துவதாகக் கதையை வடிவமைத்திருக்கிறார்.
’பிட்டு பிட்டா சொல்லி பீதிய கிளப்பாதீங்கடா’ என்று நீங்கள் பதைபதைப்பது புரிகிறது. சரி, படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா?
தெலங்கானா முதலமைச்சர் ரஞ்சித் ரெட்டியின் (சரத் லோகித்சவா) மகள் ஸ்ரீலீலா (ஸ்ரீலீலா) படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேர்கிறார் பாஸ்கர் (ராம்) என்ற மாணவர். முதலமைச்சர் மகளைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக, வகுப்பில் அனைவரது முன்னிலையிலும் பகிரங்கமாகச் சொல்கிறார். ஆனால், ஸ்ரீலீலாவோ தான் யார் என்பதைச் சக மாணவர்களிடத்தில் சொல்லாமல் இருந்து வருகிறார். ஒருகட்டத்தில் பாஸ்கரின் அலட்டல் அதிகமாவதாகக் கருதுபவர், தனது பின்னணியை அவர் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். அதற்காக, தனது சகோதரர் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீலீலா.
அதேநேரத்தில், அந்த திருமணத்தில் கலகம் விளைவிக்கத் தனது ஆட்களை அனுப்புகிறார் ஆந்திரா முதலமைச்சர் ராயுடு (அஜித் புர்கர்). காரணம், அவரது மகள் தான் மணப்பெண். ராயுடு குடும்பத்தினர் கண்ணில் மண் தூவிவிட்டு, திருட்டுத்தனமாக அப்பெண்ணைக் கவர்ந்து வந்துவிட்டார் ரஞ்சித்தின் மகன்.
இந்த நிலையில், குறிப்பிட்ட நாளன்று மணப்பெண்ணோடு சேர்த்து ஸ்ரீலீலாவையும் கடத்திச் செல்கிறார் ஸ்கந்தா எனும் நபர். அவரது தோற்றம் பாஸ்கரை ஒத்திருக்கிறது. இரண்டு முதலமைச்சர் மகள்களையும் அவர் அழைத்துச் செல்லும் இடம் ருத்ரராஜபுரம் எனும் சிற்றூர்.
அந்த ஊரில்தான் பாஸ்கரின் குடும்பம் வாழ்கிறது. அவரது தந்தை மணிகண்ட ராஜு (வேதம் புதிது ராஜா), தனது பால்ய நண்பனும் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபருமான ராமகிருஷ்ண ராஜு (ஸ்ரீகாந்த்) மீது இரு முதலமைச்சர்களும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திச் சிறையில் தள்ளியதாகச் சொல்கிறார். அதைக் கேட்டு, கடத்தப்பட்ட இரு பெண்களும் எவ்வாறு ரியாக்ட் செய்தனர்? மகள்களின் இருப்பிடம் அறிந்தபிறகு அந்த தந்தையர் என்ன செய்தார்கள் என்று சொல்கிறது ‘ஸ்கந்தா’.
இந்தக் கதையைக் கேட்டபிறகும், திரையில் யதார்த்தம் மிளிரும் என்று எதிர்பார்ப்பது பெருந்தவறாகிவிடும். அதேநேரத்தில், ‘எப்படி இப்படியெல்லாம் கதையை யோசிக்கிறார்கள்’ என்று கண்டிப்பாகத் தோன்றும்.
நாயகன் இரண்டு தோற்றங்களில் இடம்பெறுவதால், ஸ்கந்தாவும் பாஸ்கரும் ஒரே ஆளா அல்லது இரண்டு வெவ்வேறு மனிதர்களா என்ற சந்தேகம் எழுவதும் சாதாரணமானது. கண் இமைக்காமல் ஒவ்வொரு பிரேமையும் விழுங்கிய ரசிகர்கள் கூட, பதில் சொல்லத் திணறும் கேள்வியும் கூட அதுவே. அதற்கு இயக்குனர் சொல்லியிருக்கும் பதில் என்ன தெரியுமா? ‘அடிச்சுக் கூட கேட்பாங்க, அதை மட்டும் சொல்லிராதீங்க’ என்பதுதான். ‘அதான் எதுவுமே சொல்லலையே’ என்றால், ‘ஸ்கந்தா 2வில் தெரிஞ்சுக்கோங்க’ என்று கூறி நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர்.
அப்போது, ‘என்னது, திரும்பவும் முதல்ல இருந்தா..’ என்று நாம் ‘ஜெர்க்’ ஆக வேண்டியிருக்கிறது.
கைய புடிச்சி இழுத்தியா..?
‘நேசம் புதுசு’ படத்தில் சங்கிலி முருகன் வடிவேலுவைப் பார்த்து ‘இந்த பொண்ணு கைய பிடிச்சு இழுத்தியா’ என்று கேட்க, பதிலுக்கு அவர் ‘என்ன கைய பிடிச்சு இழுத்தியா’ என்று கேட்பார். அந்த காமெடி காட்சியை ‘பேஸ்மெண்ட்’ ஆக வைத்துக்கொண்டே, தெலுங்கு சினிமா பல நாயக பாத்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த படத்தில் ராம் ஏற்றிருக்கும் பாத்திரங்களும் அந்த வகையறாதான். நாயகியில் தொடங்கி வில்லன்கள், ஊரிலுள்ள உறவினர்கள், இளம்பெண்கள் என்று யார் உரையாடினாலும் நாயக பாத்திரம் அதே தொனியில்தான் பதிலளிக்கிறது.
படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. ஆனாலும், நாயகனின் அறிமுகம் அரை மணி நேரம் கழித்தே காட்டப்படுகிறது. பெரும்பாலும் மலையாள ஆக்ஷன் படங்களில் பின்பற்றப்படும் பார்முலா இது. அதன்பிறகு பெரும்பாலான பிரேம்களில் ராம் இருக்கிறார் என்றபோதும், அந்த விஷயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
அதேபோல, ‘பொலிடிகல் அனலிஸ்ட்’டாக இருப்பவர்கள் செய்துவரும் பணி குறித்து கேள்வி கேட்டு பதில் சொல்லும் ஒரு காட்சி இந்த படத்தில் வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அந்த காட்சிக்குக் கை வலிக்க வலிக்கக் கைதட்டுகின்றனர் ரசிகர்கள்.
’கல்ட் மாமா’ பாடல் சட்டென்று நம் மனதோடு ஒட்டிக் கொள்கிறது. மற்ற பாடல்கள் அந்த அளவுக்கு இல்லையென்றாலும், கால் வலிக்க வலிக்க டான்ஸ் ஆடும் அளவுக்கு தாள லயத்தோடு இருக்கின்றன. ஆனால், பின்னணி இசை முழுக்கத் தான் ஏற்கனவே இட்ட ‘ரங்கு ரக்கர’ பாடலின் இசையைப் பயன்படுத்தியிருக்கிறார் எஸ்.தமன்.
பாடல்கள், சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல் சாதாரண வசனக் காட்சிகளிலும் கூட வண்ணமயமாகத் தெரிய வேண்டுமென்று பாடு பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தேடகே.
காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு இருந்தால் போதுமென்று படத்தைத் தொகுத்திருக்கிறார் தம்மிராஜு. படத்தின் கதையோட்டம் சீராக இருக்கிறதா என்பதை அவர் கொஞ்சம் கூட கவனிக்கவே இல்லை.
ஏ.எஸ்.பிரகாஷின் கலை வடிவமைப்புப் பணிகள், ஒரு பிரமாண்டமான படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வை எளிதாக ஏற்படுத்துகின்றன. அதற்கு ஈடு கொடுத்து, விஎஃப்எக்ஸ் பணிகளும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஏனோ அது கைகூடவில்லை. அதுவே இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் பொத்தல் விழக் காரணமாக உள்ளது.
திரையில் ரத்தம் தெறித்தால் ‘ஏ’ சர்ட்டிபிகேட் கிடைக்குமே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல், படம் முழுக்க எதிரே வரும் நபர்களை எல்லாம் நாயகன் பொளபொளவென்று பொளந்து தள்ளுகிறார். அதற்காக, விதவிதமான ஆயுதங்களைக் கையில் ஏந்துகிறார். அந்த இடங்களை எல்லாம் எண்ணத் தொடங்கினால், இந்த படத்திற்கு ‘ஏஏஏ’ சர்ட்டிபிகேட் தான் கிடைத்திருக்கும். ஆனாலும், முன்யோசனையுடன் மேக்கப்பில் போலி ரத்தத்தைப் பயன்படுத்தாமல் விஎஃப்எக்ஸ் குழுவினரிடம் திரையில் ரத்தம் தெளிக்கும் பணியை ஒப்படைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு கமர்ஷியல் மசாலா படத்தில் நாயக நாயகியர் முதல் சாதாரண பாத்திரங்களில் நடித்தவர்கள் வரை எந்த அளவுக்குக் கடினமாக உழைத்திருப்பார்களோ, அப்படியொரு நடிப்பு ‘ஸ்கந்தா’விலும் காணக் கிடைக்கிறது. இப்படத்தின் வழியே சாதாரண ரசிகர்களைக் கவர முடியும் என்று நம்பிக் களமிறங்கியிருக்கிறார் நாயகன் ராம்.
ஸ்ரீலீலா, சாயி மஞ்ச்ரேகர் இருவருமே அழகாக வந்து போயிருக்கின்றனர். அந்த வகையில், நாயகிகளை எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்ற விஷயத்தில் தெலுங்கு திரையுலகினரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நிச்சயமாக, அழகியல் அம்சங்களை மனதில் வைத்தே இதைச் சொல்கிறேன். தேவையற்ற எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.
ஸ்ரீகாந்த், இந்திரஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வேதம் புதிது’ ராஜா, கௌதமி, பப்லு பிருத்விராஜ் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். அந்த வகையில், பெரும்படையே திரையை நிரப்பி நிற்கிறது.
பொழுது போகும்!
எப்படிப்பட்ட மசாலாதனமான கதையாக இருந்தாலும், முடிந்தவரை அக்கதாபாத்திரங்களை, கதை நிகழும் களத்தினை, காட்சியமைப்பைக் கொஞ்சமாகச் சாதாரண மக்களின் வாழ்வுக்கு நெருக்கமானதாக வடிவமைத்தாலே போதும்; காதில் பூக்கடையையே வைக்கும் அளவுக்கு ‘ரீல்’விட்டாலும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.
அதனைச் சரியாக உள்வாங்கிக்கொண்டது சுகுமாரின் ‘புஷ்பா’. அதனைப் பார்த்த பிறகாவது, தெலுங்கு இயக்குனர்கள் தங்களது திரைக்கதை மற்றும் காட்சியாக்கம் அமைக்கும் பாணியை மாற்றியிருக்க வேண்டும். சில முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாகத் தோல்வியடைவதைப் பார்க்கையில், அது நிகழ்ந்ததாகவே தெரியவில்லை.
உண்மையைச் சொன்னால், ’ஸ்கந்தா’வில் சண்டைக்காட்சிகளின் நேரத்தைக் குறைத்து மிக நேர்த்தியாகக் கதை சொல்லியிருந்தால் இந்த படம் பொழுதுபோக்கு படங்களில் புதிய எல்லையைத் தொட்டிருக்கும். மாறாக, ரசிகர்கள் ‘ஸ்பூஃப்’ செய்து ரீல்ஸ் விடும் அளவுக்கு ஒரு படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் பொயப்பட்டி சீனு. எது எப்படியானாலும், பார்க்கும் ரசிகர்களுக்கு பொழுது போனால் சரி!
உதய் பாடகலிங்கம்
இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா : என்ன காரணம் ?
செந்தில் பாலாஜி வழக்கு: மத்திய குற்றப் பிரிவு போலிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்த வார டாப் 10 : உங்களுக்கு பிடித்த சீரியல்கள் இருக்கிறதா?