இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் உலக அளவில் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் அடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் ராம் சரணின் 15 வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு ’கேம் சேஞ்சர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
அதன் காரணமாக கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது. இந்த படம் குறித்த அப்டேட்கள் எதுவும் பெரிதாக வெளியாகாமல் தள்ளிப் போனது.
அதேபோல் தீபாவளிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் அதுவும் தள்ளிப்போன சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நடிகர் ராம் சரணுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையில் சில சண்டைகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாக தொடங்கியது. அதன்பின் எந்த பிரச்சனையும் இல்லை கூடிய விரைவில் கேம் சேஞ்சர் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்திற்கு பின் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ” Upenna” படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் RC 16 படத்திற்கான பூஜை விழா நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடிக்கின்றார். விரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பூஜை விழாவில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம்சரணின் மனைவி உபாசனா, ஏ.ஆர்.ரகுமான், போனி கபூர், சுகுமார், ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது இந்த பட பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் நடிகர் ராம் சரணுடன் இயக்குநர் ஷங்கருக்கு கருத்து மோதல் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்த நிலையில் RC 16 பட பூஜை விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!
முதன்முறையாக சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி!