கேம் சேஞ்சர்: விமர்சனம்!

Published On:

| By Selvam

பழைய ‘பார்ம்’முக்கு வந்துட்டாரா ஷங்கர்?

’ஜென்டில்மேன்’ படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குனர் ஷங்கரோடு ஒரு தெலுங்கு படத்தில் இணைய வேண்டுமென்று நடிகர் சிரஞ்சீவி விரும்பியதாகத் தகவல் உண்டு. அவரை இயக்க வந்த வாய்ப்புகள் நழுவிப் போனதாக ஷங்கரே கூடச் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

அந்த காம்பினேஷன் நிகழாமல் போனதில் இவ்விருவரின் ரசிகர்களுக்கும் நிறையவே வருத்தம் இருந்திருக்கிறது. ‘கேம் சேஞ்சர்’ குறித்து வெளியான முதலாவது அறிவிப்பு, அதனைத் துடைத்தெறிந்தது. ராம்சரணின் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிற இப்படம் தங்களது வருத்தங்களை அடியோடு துடைத்தெறியும் என்று அவர்கள் நம்பினர்.

அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘கேம் சேஞ்சர்’?

ஊழலுக்கு முடிவு கட்டுபவன்!

‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை என்ன? இதற்கு முன் இயக்குனர் ஷங்கரின் படங்களைப் பார்த்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். ‘பாய்ஸ்’, ‘எந்திரன்’ படங்கள் தவிர்த்து மற்றனைத்திலுமே ‘ஊழலுக்கு முடிவு கட்டுபவன்’ என்கிற ‘ஒருவரிக் கதை’யை அவர் சொல்லியிருப்பார். இதிலும் அப்படியே.

ஒரு மாவட்ட ஆட்சியர். அவர் தனது அதிகாரத்தின் எல்லைகளைப் பயன்படுத்தும்போது, ஒரு அமைச்சரின் ஆட்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளும் சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி விழுகிறது. அதனைத் துடைத்தெறிய முற்படும்போது, அந்த ஆட்சியரே அடுத்த முதலமைச்சர் என்று அறிவிக்கிறார் அப்பதவியில் இருந்த ஒரு கட்சியின் தலைவர். அவரது மரணத்திற்குப் பின் அந்த அறிவிப்பு வெளியே தெரிய வருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘கேம் சேஞ்சர்’.

இந்தக் கதையில் அந்த மாவட்ட ஆட்சியர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதனை விட்டுவிட்டு அவர் ஏன் ஆட்சியர் ஆனார் என்பதற்குக் காரணமாக, அவரது காதல் பற்றிய கிளைக்கதை கூறப்படுகிறது.

ஷங்கரின் ‘ஹீரோயிச’ படங்கள் போன்றே இதிலும் ஒரு பிளாஷ்பேக் உண்டு. அதில், அந்த ஆட்சியரின் பெற்றோர் யார் என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக ஊழல் பேர்வழிகள் என்று பெருங்கூட்டத்தையே வில்லன்களாகக் காண்பிப்பார் ஷங்கர். இப்படத்தில் அந்த வில்லத்தனத்தை எல்லாம் சில பாத்திரங்கள் வழியே காண்பித்திருக்கிறார்.

அது மட்டுமே தெலுங்கு பட பாணியில் இருக்கிறது. மற்றபடி, ஷங்கர் படங்களை இதுநாள் வரை பார்த்தவர்களுக்கு ‘கேம் சேஞ்சர்’ அந்த பார்முலாவை விட்டு கொஞ்சம் கூட விலகி நிற்கவில்லை என்பது பிடிபடும்.

இதற்கு மேல் ‘கேம் சேஞ்சர் கதை என்ன’ என்பவர்கள் இப்படத்தினை தியேட்டரில் கண்டு உணரலாம்.

வழக்கமான ‘தெலுங்கு’ படம்!

ராம் சரண் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். ’ரங்கஸ்தலம்’, ’யவடு’, ‘ரச்சா’ என்று அவர் நடித்த பழைய படங்களை நினைவூட்டும்விதமாக, இதில் அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

கியாரா அத்வானி இதில் நாயகியாகத் தோன்றியிருக்கிறார். கதையில் இளம்பெண் ஒருத்தி கவர்ச்சிகரமாக உலா வர வேண்டுமென்ற தெலுங்கு சினிமாவில் எழுதப்படாத விதியின்படி, இதில் அவர் வந்து போயிருக்கிறார்.

அஞ்சலி இதில் ‘பிளாஷ்பேக்’ நாயகியாக இடம்பெற்றிருக்கிறார். அவரது காட்சிகள் ‘கனமாக’ இருக்கின்றன.

நகைச்சுவைக்கு சுனில், வில்லத்தனத்திற்கு எஸ்.ஜே.சூர்யா என்று வகை பிரித்து இருவருக்கும் திரையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ராம்சரணுக்கு அடுத்தபடியாக இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பதால் சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வெறுமனே ஓரிரு காட்சிகளுக்கு திரையைக் கடந்து சென்றிருக்கின்றனர்.

ஜெயராம், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி,  நரேஷ், பிரவீணா,  பிரம்மானந்தம், ராஜிவ் கனகலா, வெண்ணிலா கிஷோர், அச்யுத் குமார், சுபலேக சுதாகர், பிருத்விராஜ், சத்யா, பிரியதர்ஷி, சைதன்யா கிருஷ்ணா என்று இந்த பட்டியல் மிகப்பெரியது.

ஒளிப்பதிவாளர் திரு இதில் நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு அபாரம்.

படத்தொகுப்பாளர்கள் ஷமீர் முகம்மது – ரூபன் இருவரும் பல மணி நேரக் காட்சிகளைச் சில நிமிடங்களுக்குச் சுருக்கியிருக்கின்றனர். அதனால், திரைக்கதை ஒரு ஓடை போன்ற ஓட்டத்தினைக் கொண்டிருக்கவில்லை.

கலை இயக்குனர் அவினாஷ் கொல்லா, இதில் ஷங்கர் காட்ட விரும்பிய பிரமாண்டத்திற்குத் திரையில் உருவம் தந்திருக்கிறார்.

’காதலன்’ பட ‘முக்காபுலா’வை பிரதியெடுத்தாற்போல இதில் விஎஃப்எக்ஸ் அமைந்திருப்பதைக் காணும்போது, ‘என்னடா இது ஷங்கருக்கு வந்த சோதனை’ என்றே புலம்பத் தோன்றுகிறது.

ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு என்று இதில் பிரமிப்புக்குரிய அம்சங்கள் பல இருக்கின்றன. தமன் இசையில் ஜரகண்டி,  ’ரா மச்சான் ரா’, ‘கொண்டதேவரா’ பாடல்கள் ஈர்க்கும்விதமாக உள்ளன.

பல ஷங்கர் படங்களை பார்த்த உணர்வை ஊட்டுகிறது அவரது பின்னணி இசை.
கார்த்திக் சுப்புராஜின் கதையை எடுத்துக்கொண்டு, பாடலாசிரியர் விவேக் உடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

தனது பாணியில் அமைந்த படம் என்ற உணர்வை ரசிகர்கள் பெற்றால் போதுமென்று மெனக்கெட்டிருக்கிறார். அதற்கேற்ற பலனே திரையில் கிடைத்திருக்கிறது.
மேம்போக்காகப் பார்த்தால், ‘கேம் சேஞ்சர்’ ஒரு வழக்கமான தெலுங்கு படம்.

’நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ஹீரோவின் மீது மட்டுமே உங்களது கவனம் இருக்க வேண்டும்’ என்கிற நிபந்தனை இத்திரைக்கதையில் ஒளிந்திருக்கிறது. ராம்சரண் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்கு அது எப்படிப் போதுமானதாகும்?

குறிப்பாக ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் பார்த்து புளகாங்கிதம் அடைந்தவர்களை இப்படம் ‘லெப்ட் ஹேண்ட்’டில் டீல் செய்திருக்கிறது. அதுவே இப்படத்தின் பலவீனம்.

’கேம் சேஞ்சர்’ உருவாக்கத்தில் பல தரப்பில் இருந்தும் உழைப்பு கொட்டப்பட்டிருக்கிறது. அதன் அளவைக் காட்டிலும், திரையில் தெரியும் அவற்றின் பங்களிப்பு ரொம்பவே குறைவு. இதுநாள் வரை பத்தை நூறாக, ஆயிரமாகக் காட்டிய ஷங்கர் அந்த விஷயத்தில் கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவும் சொன்னபிறகு ‘ஷங்கர் பழைய பார்முக்கு வந்துட்டாரா’ என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது.

ஆக்‌ஷன், பேண்டஸி, சயின்ஸ் பிக்‌ஷன் வகைமைகளை விட்டு விலகி வேறொரு திசை நோக்கி ஷங்கர் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக ‘பாகுபலி’ போலப் படம் எடுக்கிறேன் என்று அவர் கிளம்புவது சரியா என்று சொல்லத் தெரியவில்லை.
அடுத்ததாக ஸ்பை ஆக்‌ஷன், ஆக்‌ஷன் த்ரில்லர் அல்லது வரலாற்று அம்சங்களோடு சமகாலத்திய கதை சொல்லலைக் கொண்ட புதிய வகைமை கதைகளில் ஷங்கர் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

ஏனென்றால், காட்சிரீதியாக அல்லாமல் ரசிகர்களை மனரீதியாகப் பிரமாண்டத்தை உணர வைக்கிற காலகட்டத்திற்கு அவர் இடம்பெயர்ந்திருப்பதை இனிமேலாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், இயக்குனர் ஷங்கருக்கான புதிய தொடக்கமாக ‘கேம் சேஞ்சர்’ அமைய வேண்டும் என்பதே நம் விருப்பம். ராம் சரண் உள்ளிட்ட திரைக்கலைஞர்களைப் பொறுத்தவரை, ‘இது ஒரு ஆவரேஜ் படம்’ தான். அதனால், அவர்களுக்கு ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்றே சொல்லியாக வேண்டும்..!

7 ஆயிரம் வழக்கு கூட போடுங்க… பெரியாரை மீண்டும் சீண்டும் சீமான்

அயலகத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel