நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தனது ரசிகர்களை சந்திப்பார் என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் தனியார் மண்டபத்தில், ’தலைவர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளை’ என்ற அமைப்பை ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் இன்று (செப்டம்பர் 4) தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, ரஜினிகாந்த் பெயரில் பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” என்றார்.

மேலும் “ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒருநாள் ரசிகர்களை சந்திப்பார்.
அதுகுறித்து அப்போது அறிவிக்கப்படும். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது இறைவனிடம் தான் உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை அன்பு, பாசம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் தான் ரஜினிகாந்த் சந்தித்தார்” என்று அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த தனது ரசிகர்களை தொடர்ந்து 4 நாட்களாக சந்தித்தார். அப்போது அவரது அரசியல் வருகை பரபரப்பாக பேசப்பட்டது.
அப்போது, தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேவேளையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு குறித்து அவரது அண்ணன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் இரண்டு தான் – ரஜினிகாந்த்