ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள படம் வேட்டையன். முன்னதாக இவர் இயக்கிய ஜெய் பீம் படத்தில், லாக் அப் மரணத்தை ஒருவரி கதையாக கொண்டு, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை அவலங்களை பேசினார்.
ஆனால், வேட்டையன் படத்தில் காவல் துறை நடத்தும் சட்டவிரோதமான என்கவுன்டர் கொலைகளை, அதற்கு நீதி கேட்டு நடக்கும் நீதிமன்ற காட்சிகள் நிரம்பியதாக வேட்டையன் படம் இருக்குமோ என்பதை உணர்த்துகிறது படத்தின் டிரைலர்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 10-ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே மனசிலாயோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை (செப்டம்பர் 20) வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதனையொட்டி படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
டிரைலர் என்ன சொல்ல வருகிறது?
1.38 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய டிரைலர் தொடக்கத்தில் காவல் துறை அதிகாரிகள் குழுமியிருக்கும் அரங்கில், காவல் துறை உடையில் இருக்கும் சிலரது புகைப்படங்கள் திரையிட்டு காட்டப்படுகின்றன. அவர்கள் யார் என கேட்கும்போது, ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட் என்கின்றனர்.
“ஆபத்தான குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததால் இவர்கள் ஹீரோவாகிவிட்டார்கள்” என்கிறார் ரித்திகா சிங். தொடர்ந்து ரஜினிகாந்த் அறிமுக காட்சியில் “நமக்கு தான் எஸ்பிங்குற பேர்ல எமன் வந்துருக்காம்ல” என குற்றவாளிகள் அச்சத்துடன் பேசும் காட்சியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல் துறை அதிகாரியாக துப்பாக்கியுடன் அறிமுகமாகிறார் ரஜினிகாந்த்.
“என்கவுன்டர் பேர்ல கொல பண்றது தான் ஹீரோயிசமா?” என அமிதாப் பச்சன் கேள்வி எழுப்புகிறார்.அதற்கு பதிலளிக்கும் விதமாக “என்கவுன்டர்ங்குறது குற்றம் செஞ்சவங்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டுமில்ல. இனிமே இப்படி நடக்க கூடாதுங்குறதுக்காக எடுக்குற முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என விளக்கம் கொடுக்கிறார் ரஜினிகாந்த்.
ஆக, படம் என்கவுன்டர் குறித்து முழுமையாக பேசும் என தெரிகிறது. ரஜினிகாந்த் உடன் நீண்ட வருடங்களுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்திருக்கும் படம் வேட்டையன் என்றாலும் அமிதாப் பச்சன் வருகிற காட்சிகளில் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பது போன்ற உணர்வை தரும் என்பதை டிரைலரில் வரும் சில செகண்ட் காட்சிகள் உணர்த்துகிறது.
– இராமானுஜம்