த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேலுடன் ரஜினி கைகோர்த்தார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மும்பை, திருவனந்தபுரம், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வேட்டையன் படம் ரீலிஸ் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த பாடலில் பயன்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக இந்த பாடலை அனைவரும் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மனசிலாயோ பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடிய வீடியோ நேற்று வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட தனது அனைத்து படத்தின் இசை வெளியீட்டு விழாக்களிலும் ரஜினி தவறாமல் பங்கேற்று வருகிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சிகளில் அவரது பேச்சு சினிமா வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக அமைந்தது. அந்தவகையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: ஒரு உடலை எரிக்க 75 ஆயிரம் செலவு… கேரள அரசு கணக்கு!
அடுத்த இரண்டு நாட்களுக்கு… உச்சத்தில் உஷ்ணம் – வானிலை மையம் அலர்ட்!