தனக்கும் நடிகர் விஜய்க்கும் சினிமாவில் போட்டியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியபோது, “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் கூறிய காக்கா, கழுகு கதையை வேறு மாதிரி மாற்றிவிட்டார்கள். எனக்கும், நடிகர் விஜய்க்கும் போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பு விஜய்யின் வீட்டில் தான் நடந்தது. அப்போது விஜய்க்கு 13 வயது இருக்கும்.
அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து ‘என்னுடைய பையன் படித்து வருகிறான். அவனுக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம் உள்ளது. படித்து விட்டு நடிக்க வரட்டும். நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்’ என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது நான் விஜய்யிடம், ‘முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். அப்புறம் நடிக்கலாம்’ என அறிவுரை கூறினேன்.
பின்னர் விஜய் நடிப்பிற்கு வந்து அவரது உழைப்பால் உயர்ந்திருக்கிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் விஜய் உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். விஜய்க்கு போட்டி விஜய் தான். ரஜினிக்கு போட்டி ரஜினிதான் என்பதை இருவருமே சொல்லியிருக்கிறோம்.
விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாக இருக்காது. அதேபோல, விஜய் என்னை போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. எனவே, ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இதோடு நிறுத்திக்கொண்டு சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!