ரஜினிகாந்த் – சிபி சக்கரவர்த்தி படம்: லைகா எடுத்த முடிவு!

Published On:

| By Kavi

ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. காரணம் அவரது சம்பளம், அந்த சம்பளத்திற்குரிய வியாபாரம் இல்லை, அப்படியே இருந்தாலும் முதலீட்டு தொகை அளவிற்கு லாபம் கிடைப்பது இல்லை.

அதனால்தான் சன்பிக்சர்ஸ், லைகா நிறுவனங்கள் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர். அவர்களுக்கு முதலீட்டு அளவிற்கான லாபம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் பதில் வருகிறது.

அப்புறம் ஏன் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கிறார்கள் என கேட்டால் வெவ்வேறு வழிகளில் முதலீட்டை திரும்ப பெற முடிகிறது. தனி நபர்களிடம் கேட்பதை போன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்க முடியாது.

பேக்கேஜிங் முறையிலேயே ரஜினியை ஒப்பந்தம் செய்கின்றனர். குறைந்தபட்சம் 2 அல்லது 3 படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு மொத்தமாக சம்பளமாக பேசி முடிப்பார்கள். அதனால் ரஜினிகாந்த் கேட்கும் 100 கோடி கிடைக்காது. அதேநேரம் பைனான்ஸ் பிரச்சினையில்லாமல் படப்பிடிப்பு நடக்கும்.

திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகும் என்பதால் தன் நிலை அறிந்து ரஜினிகாந்த் ஒப்புக்கொள்கிறார். அப்படித்தான் லைகா நிறுவன தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாது லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தை இயக்கிய சிபிசக்ரவர்த்தி இயக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

அதற்காக அவருக்கு தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகள் தொடங்கப்பட்டது. அந்தப்படம் தற்போது கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.

rajinikanth movies lyca productions sun pictures

என்ன நடந்தது என்று விசாரித்தபோது சிபி சக்ரவர்த்தி சொன்ன ஒருவரிக்கதை பிடித்துப்போய்த்தான் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதன்பின் கதை விவாதம் செய்து திரைக்கதை உருவாக்கி ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் சிபிச்சக்ரவர்த்தி. அந்த திரைக்கதை ரஜினிகாந்த்துக்கு பிடிக்கவில்லை.

அதுமட்டுமின்றி சிபிசக்ரவர்த்தி நடந்துகொண்ட முறை அவரை மிகவும் கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த், அவர் இயக்கத்தில் தான் நடிக்க முடியாது, உங்களுக்கு வேண்டுமானால் அவரை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத லைகா நிறுவனத்துக்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி.

அது என்னவென்றால், ரஜினிகாந்த் தன் கதையையும், தன்னையும் நிராகரித்துவிட்டார் என்கிற தகவல் தெரியாமல் படத்துக்கான பட்ஜெட்  குறித்த கணக்கை லைகா நிறுவனத்திடம் கொடுத்தாராம் சிபி சக்ரவர்த்தி.

அதில், இயக்குநர் சம்பளம் என்கிற இடத்தில் 12 கோடி என்று குறிப்பிட்டிருந்ததாம். அதுதான் லைகாவுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அதிர்ச்சி.

அந்நிறுவனம், இப்படத்துக்காக சிபிச்சக்ரவர்த்திக்கு ஆறு கோடி சம்பளம் என்று சொல்லியிருந்ததாம். இவரோ அதை இரட்டிப்பாக்கிக் கேட்டிருக்கிறார். ஒரு பக்கம் ரஜினிகாந்த் இவரை நிராகரித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் இவர் சம்பளம் இரட்டிப்பாக கேட்கிறார். தொடக்கமே சரியில்லை ரஜினிகாந்த் வேண்டாம் என்கிற போது இந்தப்படமே வேண்டாம் என்கிற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்திருப்பதாக தகவல் வேகமாக கோடம்பாக்க வட்டாரத்தில் பரவி வருகிறது.

இராமானுஜம்

தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை வழங்கிய முதல்வர்

ஈபிஎஸுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share