ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’ ‘டாக்டர்’ ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், லைகா நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு படம் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பூஜை அடுத்த மாதம் நவம்பர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
மேலும் லைகா நிறுவனத்துடனான இரண்டாவது படத்தை மணிரத்னம் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லைகா தயாரிப்பில் ‘2.0’, மற்றும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்