ஒரு இளைய தலைமுறை இயக்குனர் உடன் மூத்த நடிகர் இணைகிறார் எனும்போது, ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகும். பாரதிராஜா – சிவாஜி கூட்டணி ‘முதல் மரியாதை’யில் இணைந்தது போல, பா.ரஞ்சித் உடன் ‘கபாலி’யில் ரஜினி கைகோர்த்தது போல, சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கமல் ‘விக்ரம்’ படத்தில் சேர்ந்து பணியாற்றியது போன்றவை அத்தகைய கவனிப்பை உருவாக்கின.
அந்த வரிசையில் இன்னொன்றாக அமைந்தது நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு. அவ்வப்போது அப்டேட்களால் சமூகவலைதளங்களை அதிரவைத்த இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. எப்படிப்பட்ட அனுபவத்தை இது ரசிகர்களுக்குத் தருகிறது?
ஒரு தந்தையின் கோபம்
அறுபதைத் தாண்டிய முத்துவேல் (ரஜினிகாந்த்). மனைவி (ரம்யா கிருஷ்ணன்), மகன் அர்ஜுன் (வசந்த் ரவி), மருமகள் (மிர்ணா), பேரன் ரித்து (ரித்விக்) ஆகியோர் மட்டுமே தனது உலகம் என்று இருந்து வருகிறார். ஒருநாள், முத்துவேலின் மகன் அர்ஜுன் காணாமல் போகிறார். சிலை கடத்தல் கும்பல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுதான், அதற்குக் காரணம் என்று தெரிய வருகிறது.
அந்த கும்பல் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் அரசல்புரசலாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அது, ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து முத்துவேல் குடும்பத்தை உருக்குலைக்கிறது.
மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் பெருங்கோபம் கொள்கிறார் முத்துவேல். அதற்குக் காரணமானவர்களைத் தேடிச் செல்கிறார்.
அப்போது, சிலைக்கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் வர்மன் (விநாயகன்) கும்பலோடு அவர் மோதுகிறார். அதன் தொடர்ச்சியாக, முத்துவேலின் மனைவி, மருமகள், பேரன் உயிருக்கு ஆபத்து உண்டாகிறது. அதிலிருந்து தப்பிக்க முத்துவேல் என்ன செய்தார்? அந்த கும்பலோடு மோதினாரா இல்லையா என்று சொல்கிறது ‘ஜெயிலர்’.
இந்தக் கதையில், வில்லன் கும்பலில் சிலர் முத்துவேலைக் கண்டதும் பயப்படுகின்றனர். அதற்குக் காரணம், அவர் ஜெயிலர் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதே..! முத்துவேலின் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்திருக்க வேண்டிய இந்தக் கதை, வெறுமனே அவரது வீர, தீர சாகசங்களுக்குள் முடங்கிப் போகிறது. ஜெயிலர் படத்தின் பெரும் பலவீனமே அதுதான்!
இது ரஜினி ராஜ்ஜியம்
‘பேட்ட’ படம் தந்த கார்த்திக் சுப்புராஜ் போல, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர் என்ற நோக்குடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன். அவர் வடிவமைத்த ஹீரோயிச பில்டப் ஷாட்களுக்கு ஏற்ப, அபாரமாக பின்னணி இசை தந்திருக்கிறார் அனிருத். அது போதாதென்று ‘ஹுக்கும்’, ’ஜுஜுபி’, பாடல்களும் பின்னணியில் ஒலிக்கின்றன. ‘காவாலா’ நம்மைக் காட்சி ரீதியாகவும் சுண்டியிழுக்கிறது.
ரஜினியை எப்படியெல்லாம் அழகுறத் திரையில் காட்டலாம் என்று சிந்தித்துச் செயலாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். கூடவே, நெல்சனின் கதை சொல்லும் பாணிக்குள் வெவ்வேறுபட்ட லொக்கேஷன்களை அடக்கும் முயற்சியையும் செய்திருக்கிறார்.
நிர்மலின் படத்தொகுப்பு வெகு இறுக்கமாக பிரேம்களை நறுக்கியுள்ளது. கிரண் மேற்கொண்டிருக்கும் கலை வடிவமைப்பு, ’படம் முழுக்க ரியல் லோகேஷன் தானோ’ என்ற எண்ண மாயையை உருவாக்குகிறது.
ரசிகர்கள் மகிழும் வகையில், ’ஜெயிலர்’ முழுக்க ரஜினியே நிறைந்திருக்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது ரஜினி ராஜ்ஜியம். அவரது மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணனுக்குப் பெரிதாக வேலையில்லை. இடைவேளையில் சிறிதளவு பயப்படுவதோடு, அவர் தன் பெர்பார்மன்ஸை மூட்டை கட்டி விடுகிறார். மிர்ணாவின் நிலைமையும் அதுவே. ஓரளவு பரவாயில்லை என்பது போல, இரண்டொரு காட்சிகளில் முகம் காட்டியிருக்கிறார் யூடியூப் பிரபலம் ரித்விக்.
ரஜினியின் மகனாக வரும் வசந்த் ரவிக்குக் கதையில் முக்கியத்துவம் அதிகம் என்றாலும், அதற்கேற்ற காட்சிகள் இல்லை. யோகிபாபுவை விட, சைக்காலஜிஸ்டாக வரும் விடிவி கணேஷ் நம்மைச் சிரிக்க வைக்கிறார். பின்பாதியில் தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சமாய் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன.
வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகன், வெகு அலட்சியமாக அப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அதேநேரத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் ஆரம்ப, இறுதிக் காட்சிகள் அற்புதமாகத் திரையில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் போதாதென்று ஆடுகளம் கிஷோர், மாகரந்த் தேஷ்பாண்டே, ஜாபர் சாதிக், கராத்தே கார்த்தி, மாரிமுத்து உட்படப் பெரும் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.
இயக்குனரின் பார்வை
இந்தக் கதைக்கான திரைக்கதையை எந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். மிக முக்கியமாக, ரஜினியின் முத்துவேல் பாத்திரத்தை எப்படிக் காட்ட வேண்டும் என்பதிலும் தடுமாறியிருக்கிறார். ஏன் அந்த பாத்திரம் பயத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்குத் திரைக்கதையில் எந்த விளக்கமும் இல்லை. கேங்ஸ்டர்கள் அவரோடு இணக்கம் பாராட்டுவதற்குக் காரணம் பயமா அல்லது வேறேதேனும் பின்னணியா என்பதும் சொல்லப்படவில்லை. ஆனால், ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ என்று ஆக்ஷன் ‘பொறி’ பறப்பதில் மெனக்கெட்டிருக்கிறார் நெல்சன்.
மேலோட்டமாகப் பார்த்தால், ’விக்ரம்’ படம் போன்றே இதன் போக்கும் அமைந்திருக்கும். ஆனால், தன் மகனுக்காகவோ, குடும்பத்திற்காகவோ ரஜினி பதைபதைக்கும் காட்சிகள் இதில் இல்லாதது பெருங்குறை. பிளாஷ்பேக் காட்சிகளில், ‘ஊர்க்காவலன்’ படத்திற்கு முன்பிருந்த ஹேர்ஸ்டைலில் ரஜினி தோன்றியிருப்பது சிறப்பு. ஆனால், அந்தக் காட்சி மிகச்சில நிமிடங்களே இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஆங்காங்கே வந்துபோகும் வன்முறைக் காட்சிகள் நம்மை பயமுறுத்துகின்றன. அதற்குச் சில ரசிகர்கள் தரும் வரவேற்பு, அந்த பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. நிச்சயமாக, குடும்பத்தோடு வந்து ரஜினி படம் பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு அது இடையூறாகத்தான் அமையும். ஒருவேளை அது வரவேற்பைப் பெறுவது நம் சமூகத்திற்குச் சாபக்கேடாக அமையும்.
நெல்சனின் முந்தைய படங்கள் மூன்றையும் முதல் காட்சி பார்த்த ஒவ்வொருவருக்கும், ‘இது பெரிய வெற்றியைப் பெறுமா’ என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். ‘ஜெயிலர்’ படத்தில் அதற்கு வேலையில்லை. அதேநேரத்தில், ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரும் அளவுக்கு இதில் சிலாகிக்கும் அம்சங்களும் பெரிதாக இல்லை. அதனை மனதில் கொண்டு, திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். மற்றபடி, ஒரு சூப்பர்ஸ்டார் படத்தை இன்னும் சில ஸ்டார்களின் கௌரவ தலைகாட்டலுடன் ரசிக்க வேண்டுமென்பவர்களுக்கான ஒரு ஆக்ஷன் சித்திரம் இது என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், ஜெயிலர் திரைப்படம் ரஜினி தந்த ஆக்ஷன் பட்டாசு. அதில் ‘ஹீரோயிசம்’ தவிர வேறெதற்கும் இடமில்லை.
உதய் பாடகலிங்கம்
மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைத்ததே வெற்றிதான்: டி.ஆர்.பாலு
தோல்வியில் முடிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்!