சென்னை போயஸ் கார்டனில் சசிகலா பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 24) சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆன அவர், இந்தாண்டு தொடக்கத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிற்கு சசிகலா சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சென்னையில் போயஸ் கார்டனில் வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே அவர் பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தினை கடந்த மாதம் 24 ஆம் தேதி நடத்தினார்.
சரியாக ஒரு மாதம் கழித்து ’ஜெயலலிதா இல்லம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த புதிய வீட்டில் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று சசிகலா குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் அதே போயஸ் கார்டனில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த கடந்த மாதம் கிரகப்பிரவேசத்தில் பங்கேற்காத இயலாத நிலையில், இன்று சசிகலாவின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சசிகலாவை சந்தித்து பரிசளித்த ரஜினிகாந்த், அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ”வீடு கோயில் மாதிரி இருக்கு. இந்த வீடு சசிகலாவிற்கு எல்லா பேர், புகழ், சந்தோசத்த கொடுக்கனும்னு அந்த ஆண்டவன வேண்டிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ’ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலாவை சந்திக்க வந்துள்ளீர்கள்… அந்த ஆளுமையின் இடத்தை தமிழ்நாட்டில் தற்போது யார் பூர்த்தி செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பவே, ”அரசியல பத்தி நா பேச விரும்பல” என்று கையெடுத்துக் கும்பிட்ட நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மக்களவை சீட் ஓகே…. மாநிலங்களவை சீட் என்னாச்சு? : காதர் மொய்தீன் பதில்!
காங்கிரஸ்- ஆம் ஆத்மி: 5 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு! இந்தியா கூட்டணியில் முன்னேற்றம்!