கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயற்சித்தபோது, அவர் தமிழர் இல்லை என்றும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற விமர்சனங்கள் அவருக்கு எதிராக பலமாக முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பத்தில் ரஜினிகாந்தின் தாய், தந்தைக்கு மார்பளவு சிலை எழுப்பப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழர் இல்லை என்று கூறப்பட்ட நடிகர் ரஜினி, அவரது பெற்றோர்க்கு தமிழக எல்லையில் அமைந்துள்ள நாச்சிக்குப்பத்தில் சிலை எழுப்பியது எப்படி?.

தமிழக கிராமத்தில் மராட்டிய மொழி!
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சிக்குப்பம் கிராமம். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மூன்று மாநில எல்லைகளும் சங்கமிக்கும் இடத்தில் தமிழக எல்லைக்குள் இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. ஆனால் அத்தனை பேரும் மராட்டியை தாய்மொழியாக கொண்டவர்கள். இங்குள்ள பல இல்லங்களின் பெயர் பலகைகள் ‘ராவ்’ என்ற பெயரில் தான் முடிவடைகின்றன.
இங்குதான் சுமார் 70 வருடங்களுக்கு முன்பு ரஜினியின் தாய் தந்தையரான ரானோஜி ராவும், ராம்பாயும் வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கு பிறந்தவர் தான் ரஜினிகாந்த்.
பின்னர் ரஜினியின் தந்தை ரானோஜி ராவுக்கு பெங்களூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை கிடைக்க கர்நாடகா சென்று அவரது குடும்பம் குடியேறியது.
எனினும் அவரது உறவினரான மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் நாச்சிக்குப்பத்தில் தங்களது பூர்வீக வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்கள்.

நாச்சிக்குப்பத்தை நினைவுபடுத்திய ரசிகர்!
இந்நிலையில் கடந்த 2008ம் தேதி ரஜினி தனது ரசிகர்களை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துள்ளார். அப்போது ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என்று ரஜினி உத்தர விட்டிருந்தார்.
அதன்படி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரஜினியின் ரசிகரான கார்த்திகேயன் என்பவர், “நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து கார்த்திகேயனை தனது வீட்டில் வந்து பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி மறுநாள் சென்ற அவரிடம் தான் பிறந்த நாச்சிக் குப்பத்தின் தற்போதைய சூழல், பிறந்த வீட்டின் நிலைமை குறித்து ரஜினி விவரமாக விசாரித்துள்ளார். மேலும் கார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்துள்ளார்.

பிறந்த ஊருக்கு உதவி!
அதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார் ரஜினி. அவர் பிறந்த வீட்டின் 90 சதவீத இடங்கள் சிதைந்து விட்ட நிலையில் அதற்கு பக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்திருக்கிறது.
அங்கு முதல் கட்டமாக வேலி அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார் ரஜினி. மேலும் அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்க தண்ணீர் தொட்டியும் அங்கேயே கால்நடைகள் தண்ணீர் அருந்தும்படியான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும் நாச்சிக்குப்பத்தில் கோயில் கட்ட ரஜினி பணமும் கொடுத்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு தனது ரசிகர்களை சந்தித்த போது, தான் உட்பட தனது மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தாய் தந்தைக்கு சிலை!
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்தன.
அதன்படி தற்போது ரஜினிக்கு சொந்தமான தோட்டத்துப் பகுதியில் ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு, அதில் ரஜினியின் பெற்றோரான ரானோஜி ராவ் மற்றும் ராம்பாய் ஆகியோருக்கு மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பலரும் அங்கு சென்று அவரது பெற்றோர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.
மேலும் ரஜினியின் பெற்றோர் வசித்த சிதிலமைடந்த வீடு குறுகலான இடத்தில் அமைந்துள்ளதால், ஊருக்கு ஒதுக்கு புறத்தில் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருக்கிறது. அதற்கான பூமி பூஜையும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா